அன்பை அதிகரிக்கும் மன்னிப்பு!

அன்பை அதிகரிக்கும் மன்னிப்பு!

சினத்தின் மூலம் நீங்கள் பெற்றுவரும் உடல்நல இழப்பையும் நினைவு கொள்ளுங்கள். சினம் கொள்ளும்போது உயிராற்றல் மிகுகின்றது. இரத்தம் சூடேறுகிறது. இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கின்றது. கண்கள் ஒளியிழக்கின்றன. இருதயம் துரிதப்படுத்தப்பெற்று அதன் துடிப்பு விரைவாகின்றது. நரம்புத்தளர்ச்சி ஏற்படுகின்றது. பொதுவாக உடலியக்க ஒழுங்கே சீர்குலைந்து போகின்றது.

சினத்தோடு நீங்கள் இருக்கும்போது உறவினர்கள், நண்பர்கள்கூட உங்களை நெருங்க அஞ்சுகின்றனர். உங்கள் சினமானது மற்றவர்களுக்கும் சினத்தை அல்லது வருத்தத்தைத் தூண்டுகிறது. இவற்றையெல்லாம் நினைவுக்குக்கொண்டு வாருங்கள். சினம் ஒழிப்பு இன்றியமையாதது எனமுடிவு கிடைக்கும். தொடர்ந்து நினைவைச் செயல்படுத்துங்கள். இனி இந்த நபரோடு தொடர்புகொள்ளும்போது சினம் கொள்ளமாட்டேன். மறதியின்றி விழிப்போடு இருப்பேன். “எந்த நிலையிலும் சினம் கொள்ளாமல் இருக்க அறிவைப் பாதுகாத்துக்கொள்வேன்” என்று நீங்களே மனதிற்குள் கூறிக்கொள்ளுங்கள். ஒருவாரம், காலை, மாலை, உட்கார்ந்து சினம் ஒழிப்பு உறுதிமொழிகளை உருப்போடுங்கள். நினைவு மறவாமல் குறிப்பிட்ட நபரோடு பேசுங்கள், பழகுங்கள். இம்முறையை ஒருவார காலம் நோன்பாகக் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி கண்டுவிட்டால் பிறகு எல்லாரிடத்திலும் சினம் கொள்ளாத வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்.

“தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்” - திருக்குறள்.

சினத்தை ஒழித்துவிட்டால் வஞ்சம் ஒழிந்து விடும். நலம் தரும் முறையிலான ஆராய்ச்சி மிக்க தண்டனையோ அல்லது மன்னிப்போ அளித்துவிட்டால் வஞ்சம் எனும் மனப்பான்மை முறிந்துவிடும்.

ஈகையே மருந்து

அறுகுண வரிசையில் அடுத்த மனோநிலை கடும் பற்று ஆகும். பொருள் பற்று இன்றி வாழமுடியாது. கடமைகளை ஆற்ற முடியாது. அவரவர் முறையாக ஈட்டிய பொருள்மீது பற்று அல்லது உரிமை பாராட்டுவது அவசியம். எனினும் வாழவழியற்றோர், துணையற்றோர் இவர்களும் வாழத்தான் வேண்டுமல்லவா? பொருள் உடையோர்கள்தான் தங்கள் பொருளில் ஒரு சிறுபகுதியை ஒதுக்கி ஈகையாக்கி அவர்களை வாழவைக்க வேண்டும். அழுத்தமான பொருள் பற்று தீமைகளைப் பெருக்கும். அத்தீமைகளை ஈகை மூலம் தவிர்க்க வேண்டும். ஒருவர் தன் வருவாயில் நூற்றுக்கு ஒரு பங்கு வீதம் ஒதுக்கிப் பிறர் நலத்திற்காக ஈகையாக்கி விட்டால் போதும். பெரும் செல்வமுடையோர் மிகுதியாக எந்த அளவிலும் ஈகைக்குப் பொருள் ஒதுக்கலாம். எனவே ஈகை என்ற மனோநிலையைக் கொண்டு கூடும் பற்று என்ற மனநிலையை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டும்.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது,

ஊதியம் இல்லை உயிர்க்கு”   - திருக்குறள்.

கற்பு எனும் பேரரண்

இப்போது பால் கவர்ச்சிக்கு வருவோம். வித்துக் கழிவு விந்து விரைவே பால் உறவு வேட்பு. பால் உறவின் விளைவு மக்கட்பேறு. பிறக்கும் மக்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ஒரு நிலையான ஒப்பந்தம் இருபாலரிடையே ஏற்பட்ட பின்னரே பால் வேட்பை நிறைவு செய்துகொள்ள வேண்டும். அப்புனித ஒப்பந்தமே திருமணம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் காக்கப்பெறும் பால் ஒழுக்கமே கற்பு, கற்புக்கு மதிப்பளிக்காத தனிமனிதனோ, குடும்பமோ, நாடோ வாழ்வில் சிதறுண்டு போகும். உடல் நலம் சமுதாய நலம் இனத்தைக் காக்கும் ஒரு பேரரண் கற்பு நெறி. எனவே கற்பின் காவலோடு பால்வேட்பை நிறைவுசெய்து கொள்வதே மாண்பு மிக்க மனிதத்தன்மை

“ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு” - திருக்குறள்.

சமத்துவத்தின் பெருமை

கடைசியாக உயர்வு தாழ்வு மனப்பான்மை யைப் பற்றிச் சிந்திப்போம். சமுதாயத்துறையில் ஒரு மனிதன் பெறும் சிறப்புக்கள் அவன் தனது கடமைகளை உணர்த்துவனவேயாகும். மனிதன் பிறக்கிறான். வளர்கிறான், வாழ்கிறான், இறந்து விடுகிறான். இந்தத் தொடர் நிகழ்ச்சிகளே மனித சமுதாயம், இதனில் ஒவ்வொருவரும் குறுகிய கால நடிகர்கள். நாம் பிறந்தநாள் தெரிந்துள்ளது. இறக்கும் நாள் தான் தெரியாமலிருக்கின்றது. அதுவரையில் நாம் வாழத்தான் வேண்டும். நம்மை உருவாக்கி வாழவைக்கும் சமுதாயத்திற்கு நம் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். 

Tags: News, Beauty, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top