டோக் பெருமாட்டி சமுதாய கல்லூரியில் சிறப்பு பாடத்திட்ட நிறைவு விழா!

டோக் பெருமாட்டி சமுதாய கல்லூரியில் சிறப்பு பாடத்திட்ட நிறைவு விழா!

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் சிறந்த கல்வியையும் ஒழுக்க நெறிகளையும் ஆக்கப்பூர்வமான கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளையும் மாணவிகளுக்கு தருவதில் டோக் பெருமாட்டி சமுதாய கல்லூரி முன்னிலை வகிக்கின்றது. இந்த கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டிற்கான, “பெண்கள் கல்வி மையம்” என்ற ஒன்று மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த மையத்தின் பொறுப்பாளர்களாக டாக்டர். கரோலின் மற்றும் ஆனி நிர்மலா ஆகியோர் இருந்து வருகின்றார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் இந்த கல்விமையத்தின் மூலமாக முதுகலை பட்டக்கல்வி பயின்றுவரும் மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு மாதங்களுக்கு “எலக்டிவ் கோர்ஸ்” எனப்படுகின்ற தேர்வு செய்யப்பட்ட பாடங்கள் என்ற வரிசையில் விமன்ஸ் டிகினிட்டி மற்றும் லீகல் புரொட்டக்சன் Women’s Dignity and Legal Protection) அதாவது பெண்களுக்கான கண்ணியம் மற்றும் சட்டப்பாதுகாப்பு என்ற தலைப்பின்கீழ், நல்ல அனுபவமிக்க, தகுதி வாய்ந்த, தலைப்பு சம்பந்தமான பாடங்களுக்கான பரந்த ஞானமுள்ள ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.

நிறைவு விழாவின் போது, வழக்கறிஞர் திரு.K. சாமிதுரை அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் பற்றியும் அதனில் சொல்லப்பட்ட சரத்துக்கள் பற்றியும், நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிடும்படியான வழக்கு நிகழ்வுகள் பற்றியும் விளக்கங்களை அளித்தார். கல்லூரியின் பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர். கரோலின் அவர்கள் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் பற்றியும், குடும்ப வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதைப் பற்றியும் இவ்வகை பிரச்சினைகளை பெண்கள் எவ்வாறு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது எனவும், சுதந்திர இந்தியாவில் பெண்களுக்காக எத்தனையோ பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் பெண்கள் பல்வேறு நிகழ்வுகளில் துன்பப்படுவதை சுட்டிக்காட்டி இவற்றிற்கான சரியான விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிறைவு விழா கடந்த 31.03.2017-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கரோலின் அவர்கள் முன்னிலையில் நடந்தது. பெண்கள் கல்வி மையத்தின் மூலமாக நடத்தப்பட்ட நான்கு மாத பாடங்களில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பெண்களுக்கெதிரான குற்றம், ஆண் பெண் குழந்தையை கருவில் கண்டறியும் தடுப்புச் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், சிறார் திருமணத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், கட்டாய திருமண பதிவுச் சட்டம்,  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், திராவக வீச்சு வன்கொடுமை, பெண்களுக்கு எதிராக வேலை செய்யும் இடங்களில் நடைபெறுகின்ற பாலியல் கொடுமைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நஷ்ட ஈட்டுத்திட்டம், பெணகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், பொதுநல வழக்குச் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், குடும்ப நீதி மன்றம் மற்றும் மகிளா நீதி மன்றங்கள், பெண்களுக்கான கருணை அடிப்படையிலான நியமனங்கள், பெண்களுக்கான பிரசவக்கால பலன்கள் ஆகியவை வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்களால் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய அளவில் தெளிவாக சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிறைவு விழாவின் போது, “இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பாடங்களை கற்றுக் கொண்டதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களைப் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கப் பெற்றது என்றனர் மாணவிகள்.

“இந்த படிப்புகளில் சேர்வதற்கு முன்பாக நான் பத்தாம் வகுப்பில் படித்த ஜீவாதார உரிமைகள் பற்றியதான விளக்கங்களை இப்போதுதான் இந்த வகுப்புகளின் போது முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது” என மனநிறைவோடு தெரிவித்தார் ஆங்கில முதுகலைப் பட்ட படிப்பில் முதலாம் ஆண்டில் பயின்றுவரும் செல்வி சரண்யா.

“இநத வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலமாக விவகாரத்துச் சட்டம், வன்கொடுமை சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை சட்டம், ஈவ்டீசிங் எனப்படுகின்ற பெண்களை கேலி செய்தல் முதலியவற்றிற்கான சட்டங்கள் மற்றும் அதற்குண்டான தண்டனைகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது” என தெரிவித்தார் அதே ஆங்கில முதுகலை முதலாமாண்டின் மாணவி செல்வி ஷாம் பிரீத்தி.

“பெண்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் எப்படி கையாளப்படுகின்றன. எந்தெந்த சட்டங்களுக்கு எந்தெந்த குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, எந்த குற்றங்களுக்கு எந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன பற்றியெல்லாம் பெண்கள் கல்வி மையத்தின் மூலமாக பயின்ற பாடங்களில் கடந்த நான்கு மாதங்களில் விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது என்கின்றார் முதுகலை முதலாமாண்டு மாணவி கவிதா.

பெண்கள் கல்வி மையத்தின் மூலமாக சொல்லிகொடுக்கும் பாடங்களை நினைவுக்கு கொண்டுவரும் விதமாக அல்லது அந்த பாடங்களின் மூலமாக பெற்ற தகவல்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வகையாக வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிறைவு விழாவில் பங்கு கொண்ட மாணவிகள் தகுந்த வழக்கு உதாரணங்களுடன் அதாவது நீதியரசர் இக்பால் அவர்கள் கையாண்ட லட்சுமி வழக்கு, சபானு வழக்கு, பனுவாரி வழக்கு, விகாசா - ராஜஸ் தான், நிர்பயா வழக்கு, சரிகாசா வழக்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லி தகுந்த பதில்களையும் வழங்கியது ஆச்சரியப்பட வைத்தது.

அட்வென்சர் இதழின் சார்பாக நிறைவு விழாவில் பங்கு பற்றிய அட்வென்சரின் நிர்வாக அலுவலர் திரு.A.A.ராமன் அவர்களுக்கு கல்விமைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கரோலின் அவர்கள், வழக்கறிஞர் திரு.K.சாமிதுரை அவர்களால் எழுதப்பட்ட “பாலியல் தாக்குதல் அமிலத் தாக்குதல் சட்டம் - விதிகள்” என்ற புத்தகத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்.

Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top