ஜல்லிக்கட்டு - இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான்!

ஜல்லிக்கட்டு - இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான்!

இலங்கையின் மத்திய மாகாணத்தில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாளம் காலஞ்சென்ற திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதை, இலங்கை அரசியல் பற்றி அறிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர். பெரும்பான்மை சிங்களத் தலைமைகளே இலங்கை அரசியலில் கோலோச்சி வந்த காலக்கட்டத்தில், இந்திய வம்சாவளித் தமிழர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குத் தலைமை தாங்கியவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களது வழித்தோன்றலாக, அவரது அதே ஆளுமையுடன் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருபவர், அவரது கொள்ளுப்பேரன் திரு.செந்தில் தொண்டமான்! இவர், தொண்டமானின் நான்காவது தலைமுறை அரசியல் வாரிசு! தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்து வரும் திரு. ஆறுமுகத் தொண்டமான் அவர்கள் இவருக்கு நெருங்கிய உறவினராவார். வயதான அமைச்சர்கள் மத்தியில் இளையவராகவும், அவரது வயதுக்கே ஏற்ற துடிப்புடனும் செயலாற்றி வருபவர் இவர்.

இந்தியாவின் - குறிப்பாக, தமிழ்நாட்டின் - அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் இவர், சத்தமேயின்றி இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினருக்குப் பல உதவிகளையும் தனது கடமையாகச் செய்து வருபவர். இவர் 2009ம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கையில் அமைச்சராக இருந்து வருபவர். முதல் இந்தியத் தமிழராக இலங்கையில் முதலமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது துணை முதலமைச்சராக பணியாற்றுகின்றார். இவரது தந்தை பிரபல இலங்கைத் தொழிலதிபர் முத்து விநாயகம் அவர்கள், தாய் ஆதிலெட்சுமி அவர்களும் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இலங்கை அரசியலில் கம்பீரத்துடன் வீரநடை போடும் முக்கியப் பிரமுகராக உள்ளார் செந்தில் தொண்டமான்.

பொங்கலை முன்னிட்டு நமது நிருபர் பேட்டி எடுத்த போது, அட்வென்சருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட திரு.செந்தில் அவர்கள், “என்ன சார் இது...? கடைசியில் இந்தப் பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு இல்லாமல் போய் விட்டதே...” என, மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “எங்களுடைய குடும்பம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு மாடுகளை பாரம்பரியமாக வளர்த்து வருகிறது. என்னுடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர். என்னுடைய பதினைந்தாவது வயதில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் தான் அதையும் நாங்கள் கருதுகிறோம். வீட்டுத் தோட்டத்தில் அதற்கென தனியாக ஒரு அறை இருக்கிறது. அதனைப் பராமரிக்க ஐந்து ஊழியர்கள் இருக்கிறார்கள். அதற்கு உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு என்றால் கவனித்து கொள்ள மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதற்கான தினசரி உணவு மற்றும் நடைபயிற்சியும் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒரு மாட்டைத் துன்புறுத்துவதே ஜல்லிக்கட்டு என்கிறார்களே... துன்புறுத்துவதற்காகவா ஒரு மாட்டை இவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக்கொள்கிறோம்?” என்று கேட்கும் திரு.செந்திலுக்குச் சொல்ல எம்மிடம் பதில் இல்லை.

“ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின் அனைத்துத் தமிழர்களுடைய கலாச்சாரப் பிரதிபலிப்பு அது. அதற்குத் தடை விதிப்பது என்பது ஒட்டு மொத்த உலகத் தமிழர்களினது உரிமையிலும் கைவைப்பதற்குச் சமமானது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரந்தளவில் ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் அந்த முயற்சிகள் தகுந்த பலனைத் தரவில்லையே? இதற்குக் காரணம் என்ன?

“தைப்பொங்கல் நெருங்கி வரும்போதுதான் ஜல்லிக்கட்டு பிரச்சினை தலைதூக்குகிறது. பொங்கல் முடிந்ததும் ஊடகங்களும் சரி, மக்களும் சரி வெவ்வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். ஆதியே இல்லாத தமிழரின் கலாச்சாரத்தின் அடிமடியில் கைவைக்கும் இந்தத் தடையை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களும் சரி, மக்களின் பிரதிநிதிகளாக சட்ட சபையிலும் மக்களவையிலும் செயல்படும் அமைச்சர்கள் முன்வரவேண்டும். இதை ஒரு ‘சீஸனல் கேஸ்‘ என்ற வட்டத்துக்குள் சிக்க வைத்துவிடக்கூடாது.

“ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பதற்கு முக்கிய விடயமாகச் சொல்லப்படுவது மாடுகளின் திமில்களில் வீரர்கள் ஏறித் தொங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்பதே! ஆனால் இது பத்து அல்லது பதினைந்து விநாடிகளுக்குத் தான். அதற்குப் பிறகு மாட்டுக்கு ஈடுகொடுப்பது மிகக் கஷ்டம். ஆனால் இதேவேளை, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருக்கும் ‘யாக்’ வகை மாடுகளின் மீது மனிதர்கள் அமர்ந்து தொடர்ச்சியாக பத்து அல்லது பதினைந்து மணி நேரம் வரை பயணிக்கிறார்கள். மாடுகள் மீது அக்கறை இருக்கிறது என்று சொல்பவர்கள் இதை ஏன் தடைசெய்யவில்லை? அத்துடன் விலங்குகள் நல வாரியத்தினருக்கு மாடுகள் மீது உண்மையான நேசம் இருக்கிறது என்றால் கசாப்பு கடைக்கு அறுப்புக்குச் செல்லும் மாடுகளுக்கு முதலில் தடை வாங்கவேண்டும். அதை விடுத்து ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மட்டும் தடை பெறுவது ஏன்?

“இவர்கள் வாங்கியிருக்கும் தடைகளின்படி பார்த்தோமானால், யாரும் மிருகக்காட்சி சாலையில் எந்த உயிரி னங்களையும் வளர்க்க இயலாது. வீட்டில் யாரும் செல்லப்பிராணியாக நாயைக்கூட வளர்க்க இயலாது. மொத்தத்தில் இவர்கள் பெற்றிருக்கும் தடை, மக்களிடையே நடைமுறைப்படுத்த முடியாதவையாகவே இருக்கிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாராயம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அப்படி யாரேனும் கொடுத்தால் அது தண்டனைக்குரியது தான். கால் பந்து உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளிலும் விதிகளை மீறி விளையாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி விளையாடும் வீரர்களுக்குத் தான் தண்டனையளிக்கிறார்களே தவிர விளையாட்டைத் தடை செய்வதில்லை. இது தான் நடைமுறை யதார்த்தம். இதை ஜல்லிக்கட்டு விடயத்தில் மட்டும் கடைப்பிடிக்காதது ஏன்?

“ஜல்லிக்கட்டிற்கும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்திய ராணுவப் படையை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய ராணுவ படையில் 1942 ஆம் ஆண்டில் வீரர்களை சேர்க்கும் போது, ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தன் படையில் சேர்த்துக் கொண்டார். இதை எத்தனை பேர் அறிவார்கள்?

“உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று, ஜல்லிக்கட்டுக்கு எதிரான போக்குடையவர்கள் சிலர் பேசித் திரிகிறார்கள். அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தான். அதை ஒரு மாநில அரசே செயல்படுத்த முரண்டுபிடிக்கிறது. அதைப் பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதில்லை.

“இத்தனை நாள் எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால், இனியும் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்க யாருக்கும் எதற்காகவும் அனுமதி கொடுக்கக்கூடாது. இதோ... பொங்கல் தின விடுமுறையையே இரத்துச் செய்யபார்க்கிறார்கள். இன்னும் என்னென்ன செய்து தமிழரின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உடைத்தெறிய விரும்புகிறார்களோ தெரியவில்லை. “எனவே இப்போதே தமிழர்கள் விழித் துக்கொள்ளவேண்டும். ஜல்லிக்கட்டில் ஒரு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்வரை தொடர்ச்சியாக சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகாண வேண்டும். இந்த ஒரு முறை தோற்றுவிட்டால், அடுத்தடுத்து தோல்வியையே நமக்குப் பரிசாக்கிவிடுவார்கள். தமிழகத் தமிழரின் இந்த நியாயமான, உணர்வுபூர்வமான போராட்டத்துக்கு, உலகத் தமிழரை ஒரே குடைக்குள் கொண்டுவந்து அழுத்தம் கொடுக்க என்னால் முடிந்த சகலத்தையும் செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top