இரண்டாண்டுகளில் டேக்வாண்டோவில் கின்னஸ் படைத்த தீபிகா!

இரண்டாண்டுகளில் டேக்வாண்டோவில் கின்னஸ் படைத்த தீபிகா!

லேடிடோக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வரலாறுப் பட்டப்படிப்பு மாணவி, சமஸ்கிருதம், ப்ரென்ச் மொழி ஆர்வலர், வீணை கலைஞர், டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை என அடுக்கிக்கொண்டு போகும் அளவில் தம்மை கலைசார் துறைகளில் ஈடுபடுத்திக்கொண்டு முத்திரைப் பதித்து வருகிறார் மாணவி தீபிகா.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தின் சார்பாக மதுரையிலிருந்து ஒன்பது மாணவர்கள், இரண்டு மாணவிகள் சென்று டேக்வாண்டோவில் ஐம்பதாயிரத்து அறனூற்று எண்பத்தி மூன்று கிக்ஸ் செய்து, ஐக்கிய நாட்டில் நிகழ்த்திய சாதனையை முறியடித்து கின்னஸில் இடம் பெற்றுள்ளனர். ஒரே நாளில் மதுரையை தன்வசம் திருப்பிய இந்த மாணவியுடன் ஒரு ஜாலி டாக்!

சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வமா?

அதெல்லாம் இல்ல ப்ரோ! என்னுடைய பதினொராம் வகுப்பில்தான் விளையாட்டின் மீதே ஆர்வம் ஏற்பட்டது. கேந்திர வித்யாலயாவில் படித்தபோது என்னுடைய துறையில் நான்தான் டாப்பர். அப்போது ஏதாவது விளையாட்டில் ஆர்வம் காட்டலாம் என நினைத்து டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன் என பலவற்றை முயற்சித்தேன். பொதுவா, நம்ம ஒரு விஷயத்தை தேடிப்போன அது நம்மள தேடி தானா வரும்-னு சொல்லுவாங்க! அப்படிதான் எங்களுடைய வீட்டின் மிக அருகிலேயே டேக்வாண்டோ அகாடமி ஒன்றை துவங்கினார்கள். எனக்கும் என்னுடைய தாயாருக்கும் தற்காப்பு கலையின்மீது ஆர்வம் அதிகம். எனவே, நான் டேக்வாண்டோ கற்க விரும்புகிறேன் என சொன்ன உடனே அனுமதிதான். என்னுடைய பணிரெண்டாம் வகுப்பு தேர்வு நேரங்களில்கூட என்னை பயிற்சி செய்யும் அளவிற்கு சுதந்திரம் அளித்தனர். தற்போது இரண்டாண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன்.

டேக்வாண்டோவை விட காரத்தேதான் மக்களால் அதிகம் அறியப்பட்டிருக்கிறதே!?

ஆம்! அதனால்தான் இன்று டேக்வாண்டோவில் அதிகம் சாதனை நிகழ்த்தப்படுகிறது என்றும் சொல்லலாம். மேலும், கராத்தே என்பது முழுவதும் பன்சஸ் சார்ந்தே இருக்கும். டேக் வாண்டோ அப்படியல்ல. டேக் என்றால் கிக், குவான் என்றால் பன்ச், டோ என்றால் செய்வது என்று பொருள். பன்சஸ் மற்றும் கிக்ஸ் ஒருசேர அமைந்திருப்பதால்தான் டேக்வாண்டோ தனிச்சிறப்பு பெற்றுள்ளது. தென்கொரியாவை சார்ந்த இந்த தற்காப்பு கலை தற்போது உலக அரங்கில் நல்லதொரு வரவேற்பினை பெற்றுக் கொண்டே இருக்கிறது. 2000-ம் ஆண்டு இந்த விளையாட்டை ஒலிம்பிக்ஸில் சேர்ந்துள்ளனர்.

செம தீபிகா! அப்போ உங்க அடுத்த டார்கெட் ஒலிம்பிக்ஸா?

கண்டிப்பாக! நான் தொடக்கத்தில் தற்காப்பை மட்டுமே முன்நிறுத்தி இந்த கலையை கற்கத் தொடங்கினேன். தற்போது என்னுடைய கனவானது விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

கின்னஸில் இடம் பெற்ற அனுபவம் பற்றி?

தற்போது எனக்கு கிடைத்த இந்த கின்னஸ்கூட ஒரு கனவு போலதான் இருக்கு. வேறு ஒரு விளையாட்டுத் துறை தேர்வு செய்திருந்தால் இந்தளவிற்கு குறுகிய காலத்தில் வெற்றி கண்டிருக்க முடியுமா என தெரியாது. சுமார் எட்டு மாத காலம் அயராத உழைப்போடு பயிற்சிகளை மேற்கொண்டோம். எங்களின் மாஸ்டர் நாராயணன் அவர்கள் எங்களுடைய எனர்ஜி குறையாத அளவில் பயிற்சியளித்து எங்களை சாதிக்க வைத்தார். தற்போது வரும் ஏப்ரல் 30-ம் தேதி “Largest Taekwondo Display” என்னும் அடுத்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளோம்.

பெண்களுக்கு தற்காப்புகலை என்பது எந்தளவிற்கு அவசியமானதாக உள்ளது?

நாம் யாரையும் அடிக்கப்போவதில்லை. இருப்பினும் இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமான நிலையில் எவருடைய உதவியையும் நம்மால் நாடமுடியாத இக்கட்டில் தள்ளப்படுகிறோம். அப்போது நம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு என்பது மிகவும் அத்தியாவசியாக உள்ளது. என்னைப் பொருத்தவரை பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் இக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி எதிர்காலத்திற்காக இன்சூரன்ஸ் செலுத்துகிறோமே அதுபோலதான் தற்காப்பு கலையும். மேலும், இது கற்றுக்கொள்வதால் நம்முடைய வாழ்வில் நமக்கென ஒரு தன்னம்பிக்கை, ஒழுக்கம், குறிக்கோள், கவனம் என அனைத்தும் தானாக வந்துவிடும்.

டேக்வாண்டோவினால் கிடைத்த அங்கீகாரம் மற்றும் விருதுகள் பற்றி?

மாவட்ட அளவிலான CM Trophy-யில் முதல் பரிசு, பின் இரண்டு முறை மதுரையில் நடைபெற்ற தெற்கு ஆசிய டோர்ணமென்டில் வெற்றி பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு - கேரளா மாநிலத்திற்கு இடையிலான போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் அதனைத் தொடர்ந்து தற்போது கின்னஸ். கல்லூரியில் இவ்வாண்டு நடைபெற்ற விளையாட்டு தினத்தில் ‘சைனிங் ஸ்டார்’ என்னும் ஒரு விருதை அளித்தனர். அத்தோடு பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம், JCI அமைப்பு பெண்கள் தினத்தன்று தங்களின் நிகழ்வில் என்னை கௌரவித்தனர். தி இந்து பத்திரிக்கையின் சார்பாக நடைபெற்ற பெண்கள் தின கொண்டாடத்தில் எங்கள் டேக்வாண்டோ அகாடமியில் உள்ள பெண்கள் எல்லோரையும் அழைத்து கௌரவித்தார்கள்.

உங்களின் இந்த வெற்றியைக்கண்டு உங்கள் தோழிகளும் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டுகிறார்களா?

நிச்சயமாக! தற்போது என்னுடைய தோழியர் பலரும் இதை கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், வரவிருக்கும் அடுத்த கின்னஸ் சாதனையில் தாங்களும் இடம்பெற வேண்டுமென அதிகமான உழைப்பையும் செலுத்தி வருகிறார்கள். இனி வரவிருக்கும் நாட்களில் நிச்சயம் அதிகமாக பெண்கள் மதுரையில் டேக்வாண்டோ கற்றவர்களாக இருப்பார்கள்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top