மதுரையில் பிறந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்!

மதுரையில் பிறந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மாநகரினை ஆண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வீரம் பொருந்திய மன்னர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் மதுரையில் பிறந்து இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன். ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் அவர்களின் வரலாற்று குறிப்புகளை ஆராயத்தொடங்கினோம்.

அப்போது மதுரையை சேர்ந்த திரு.அசோக் ராஜா அவர்கள் அறிமுகமானார். இவர் ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் அவர்களின் வழிதோன்றலில் வந்த அரச வாரிசு ஆவார். அவர் தம்முடைய முன்னோரைப் பற்றின வரலாற்றுச் சிறப்புகளை அட்வென்சருக்காக எடுத்துரைத்தார். ‘தமிழகத்தின் அரசியல், பொருளாதார, கலை, இலக்கியம், கலாச்சாரத் துறைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அவை, சங்க காலம், சங்கம் மருவிய காலம், சோழர் காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், ஐரேப்பியர் காலம் மற்றும் தற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்துள்ளனர். இவற்றில் நாயக்கர் காலம், பக்தி இலக்கிய காலமாகக் கருதப்படுகிறது.

விஜயநகரப் பேரரசு ஆந்திராவில் 1336ல் தோன்றி தென்னிந்தியாவை 1365க்குள் தன் வசப்படுத்தியது. இப்பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் மதுரை, தஞ்சாவூர் முதலான பகுதிகளை இப்பேரரசின் பிரதிநிதிகளான வடுகர்கள் நியமிக்கப்பட்டனர். திருப்பதிக்கு வடக்கே இருந்து வந்ததால் இவர்கள் வடுகர், வடக்கர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

சேர, சோழப் பாண்டிய மன்னர்கள் கொடி கட்டி ஆண்ட தமிழ்நாட்டில், இந்த வடுகர்கள் மூலம் நாயக்கர் ஆட்சி மலர செய்தது விஜய நகர பேரரசு. 21 ஆண்டுகள் பதவியிலிருந்த கிருஷ்ண தேவராயரிடம் களஞ்சிய பாதுகாவலராக இருந்த நாகம நாயக்கரும் பின் அவர் மகன் விஸ்வநாதருமே மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு வித்திட்டவர்கள். முன்பு கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் எப்போதுமே மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்தே பெண் கொண்டனர். மணத்தொடர்பின் வழியாகவே இவர்களுக்கு கண்டியின் அரசுரிமை கிடைத்தது. கண்டியை ஆண்ட முதல் தமிழ் மன்னன் ஸ்ரீ விஜய ராஜ சிங்கன் ஆவார். 8 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த இவர் 1747ல் இறந்தார். இவருக்கு பின் அவர் மைத்துனனும், பட்டத்து ராணியின் தம்பியுமான நாயக்கர், கீர்த்தி ஸ்ரீ ராஜ சிங்கன் என்னும் பெயரில் 16ம் வயதில் அரசுரிமை பெற்றார்.

எனினும் 18 வயது வரை காத்திருந்து 1750ல் மன்னர் ஆனார். நாயக்க மன்னர்களில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவனுக்குப் பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜ சிங்கன் மன்னர் ஆனார். ராஜாதி ராஜ சிங்கனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் பட்டத்து ராணியின் தங்கை சுப்பம்மாளும் அவரது மகன் கண்ணுசாமியும் 1787ல் கண்டிக்கு அழைத்து வரப்பட்டனர்.

சிறுவன் கண்ணுச்சாமி வீரமிக்கவனாக இருப்பதை கண்ட ராஜாதிக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்ணுச்சாமியை அரசனாக்க வேண்டுமென்று முடிவெடுத்தனர். அப்போது, முதற் மந்திரியாக இருந்த பிலிமத்தலா, கண்ணுச்சாமியை தீர்த்து கட்டிவிட்டு, தானே மன்னர் ஆகலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

எனவே பல இடையூறுகளுக்கு மத்தியில் 1798ம் ஆண்டு கண்ணுச்சாமியை மன்னர் ஆக்கி ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் என பெயர் சூட்டினர். இவரது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புகள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசர் தப்பியோடினார். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான்.

பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டு, மூன்றாவது தடவை தண்டனைக்குரியவன் என தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்பட்டான். பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டிவிட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.

இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் போர் செய்து 1815 பிப்ரவரி 10 ஆம் தேதி கண்டியை கைப்பற்றினர். மார்ச் 2 ஆம் தேதி கண்டி ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அங்கே பிரித்தானியரால் வேலூர் கோட்டையில் ஆயுள் முடியும்வரை ஒரு மன்னருக்குரிய அனைத்து வசதிகளுடன் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவர் காலமானார்.

மன்னர் இறந்த பின்னும் பிரித்தானியர்கள் முதல் இலங்கை அரசு வரை மன்னருடைய வாரிசுகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கியது, இலங்கை சுதந்திரம் அடைந்த 15ம் ஆண்டு 1963ல் நிறுத்தப்பட்டது.  ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன், அவர் மனைவிகள், மகன் ரங்க ராஜன், ஆகியோரின் கல்லறையும் இங்கு உண்டு. இந்த கல்லறைகள் கவனிப்பாரற்ற நிலையில் விடப்பட்டதால் நாளடைவில் கல்லறைகளைச் சுற்றி காடு மண்டிப்போனது. அத்துடன் பல குடிசைகளும் முளைத்தன.

விக்கிரமனின் கல்லறையை கலைஞர் கருணாநிதி, 1990ல் முதலமைச்சராக இருந்த போது இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனுக்கு கவின்மிகு முத்து மண்டபம் கட்டி அழகுப்படுத்தினார். தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளான ஜனவரி மாதம் 30ம் தேதி அவருடைய வாரிசு தாரார்களான நாங்கள் குரு பூஜை நடத்துகிறோம்’. அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top