விளையாட்டே ஒரு வாழ்க்கையாய் வாழ்ந்த திரு.ARAS PVPV.பார்த்தசாரதி!

விளையாட்டே ஒரு வாழ்க்கையாய் வாழ்ந்த திரு.ARAS PVPV.பார்த்தசாரதி!

 உலகில் மற்ற நாடுகளைப் போல நம்மிடமும் விளையாட்டு துறையில் திறமைசாலிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள், இன்று விளையாட்டு துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு போதுமான பயிற்சியும் ஊக்கமும் கிடைக்கின்றதா என்பதை அறிந்து கொள்ள விளையாட்டுத் துறையில் சுமார் 60க்கும் மேலான சாதனை புரிந்து இன்றும், இளமை ததும்ப 80 வயது இளைஞராக சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ஏ.எஸ் பி.வி.பி.வி நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் திரு. வாசு பார்த்தசாரதி அவர்களை சந்தித்தோம்.

ஒரு பிளாஷ்பேக்: அந்தப் பள்ளி மைதானத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த சிறுவனான அந்த மாணவனை, சாதாரணமாக வேடிக்கை பார்த்தவர்களின் கூட்டம் அதிகமானது. தொடர்ந்து, சீராக, களைப்படையாமல் சென்ற அந்த சிறுவனின் ஓட்டம் அசாதாரணமாக இருந்தது. அந்த ஏற்காட்டின் குளிரையும் மீறி, வேர்வை சிந்திக் கொண்டிருக்க, அதையும் பொருட்படுத்தாமல் செல்லும் அவனது வேகத்தைக் கண்டு வேடிக்கை பார்ப்பவர்கள் தங்களை அறியாமல் தங்களது கைக் குட்டைகளால் வியர்க்காத தங்களது முகங்களை வியப்பால் துடைத்துக் கொண்டார்கள். அவனை யாரும் ஓடச் சொல்லி தூண்டவில்லை, இப்படித்தான் ஓட வேண்டும் என்று சொல்லியும் தரவில்லை. எல்லோரும் அவன் எப்போது ஓடி முடிப்பான் என்று தான் ஏங்கத் தொடங்கினார்கள். அப்போது அச்சிறுவனின் வயது ஏறக்குறைய 12 இருக்கும்.
அந்த ஓட்டம் பல தடகளங்களையும் தாண்டி தடம் பதித்து கொண்டிருந்தது..... இன்றும் தடம் பதித்துக் கொண்டிருக்கிறது. அந்த தடயங்களுக்குச் சொந்தக்காரர் எண்பது வயதைக் கடந்த இளைஞர் பார்த்தசாரதி!

ஏற்காடு ‘மான்ட் போர்டு’  பள்ளியில் தனது ஓட்டத்தை துவக்கியவர் இன்றும் புதிதாக விளையாட்டுப் பயிற்சி செய்யும் இளைஞனைப் போல் ஒரு தேடுதலுடன் விளையாட்டுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மதுரையின் பிரபல நிறுவனமான ஏ.ஆர்.எஸ்.பி.வி.பி.வி. நிறுவனத்தின் மூத்த பங்குதாரர், மதுரை மாவட்ட மூத்த விளையாட்டு வீரர் சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு துறைசார்பற்ற தடகள வீரர் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மூத்த தடகள வீரர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் என பன்முகம் கொண்டுள்ள இவர், 1955-60 வரை தடகளப் போட்டிகளில் மாநில அளவில் சாதனைகளைக் குவித்திருக்கிறார். ஓட்டம் மட்டுமில்லாமல் உயரம் தாண்டுதல், கால்பந்து, ஹாக்கி, கூடைப் பந்து, குத்துச்சண்டை என தனது விளையாட்டுத் தடங்களை விரிவாக்கிக் கொண்டே போனவர் இப்போதும் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். திரு.லட்சுமி காந்தன் பாரதி மதுரையில் ஆட்சியராக இருந்த போது மதுரையில் துப்பாக்கி சுடும் தளத்திற்கு இடம் அளித்தார். இதை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டுமென ‘ஒரு கை பார்த்து விடுவோம்’ என்று இப்போதும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தேர்ச்சி பெற்று, பயிற்சி அரங்கில் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, குறி தவறாமல் சுட்டுத் தள்ளுகிறார். சுடும் போது மூச்சை அடக்கி குறி பார்த்து சுடும் இவரது ஸ்டைலைப் பார்த்து மற்றவர்கள் மூர்ச்சையாகாதது தான் குறை. ‘இப்படி மூச்சை கட்டுப்படுத்தும் போது தான் குறி தவறாமல் சுட முடியும். இதுவும் ஒரு வகை தியானம் தான். மேலும் கண் பார்வைத் திறனும் கூடும், என்று காவல் துறை, ராணுவ வேலைகளுக்காக முயற்சி செய்பவர்களுக்கு ஊக்கமான டிப்ஸ் தருகிறார்.

ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோர்களுக்கான இவரது வழிகாட்டுதல் இன்றைய தலைமுறையினருக்கு மிக அவசியமான ஒன்று. ‘ஓடுபவர்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்பைக்ஸ்களில் கவனம் செலுத்த வேண்டும். ஓடுபவர்கள் ஸ்பைக்ஸ் அணிவது சிறந்தது. அத்தோடு அவர்கள் ஓடும் பொழுது தங்களின் கால்களில் எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கிறார்களோ அந்த இடத்தில் ஸ்பைக்ஸ் வைத்துக்கொண்டால் அது இன்னும் வேகமாக ஓட, உத்வேகத்தைத் தரும்’ என்று அந்த பிடிமான ஓட்டத்தை மனக்கண்ணில் நிறுத்திச் சம்பவமாகச் சொன்னார். ‘ஊக்கத்திற்கு குளுகோஸ் வேண்டாம். எளதில் கிடைக்கும் எலக்ட்ராலைக் கொடுங்கள்’ என்ற அவரது அனுபவக்கருத்து நிதர்சனம்! எலக்ட்ரால் ஓடுபவர்களின் வியர்வைக்கு ஈடு கொடுத்து உடனடியாக சக்தியளிப்பதோடு தூண்டும் தாகத்தைக் கட்டுப்படுத்தும்.

இவர் வாங்கிய விருதுகளைப் பார்த்து விட்டு வரலாம் என்று நேரில் போய்ப் பார்த்தால், சிரித்தபடி அவர் காட்டிய திசையில் கண்கொள்ளாத வகையில் சிறியது முதல் பெரியது வரையிலான கோப்பைகள் இவரது வயதைக் காட்டிலும் பன்மடங்காக இருக்கிறது. இவர் விளையாட ஆரம்பித்ததிலிருந்து வருடத்திற்கு எத்தனை கோப்பைகள் வாங்கியிருப்பார் என்று நமது செல்போனில் உள்ள கால்குலெட்டரில் கணக்கெடுக்கத் தோன்றுகிறது. இன்று நாம் மதுரையில் காணும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் விரிவாக்கத்திற்கு இவரின் பங்கு அதிகம், தன் உயிர் மூச்சாகக் கொண்ட விளையாட்டினைத் தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல். ஒரு பயிற்சியாளராக இருந்து மற்றவர்களின் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்ற இவரது முயற்சியையும், வேண்டுகோளையும் ஏற்று, 1960-ல் கலெக்டராக இருந்த செங்கப்பா உற்சாகமாகத் தானே ‘ஸ்போர்ட்ஸ் கவுன்சில்’ ஒன்றை ஏற்படுத்தி, தலைவராகி 6 லட்சம் வரை நிதி திரட்டினார். வெற்றிகரமாகப் பாதி வேலை நடக்கும் போது, கலெக்டர் இடம் மாற்றம் செய்யப்பட்டதால், மீதி வேலை நின்று விட, இவர் உறுதி குலையாமல் அவ்விடத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்து பல போட்டிகளை நடத்தியுள்ளார். பின் ரேஸ்கோர்ஸில் உள்ள ஓடுதளத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டி சிவப்பு நிற ஓடுதளத்தை ஏற்படுத்தி, வீரர்கள் உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற இன்றுவரை பலரை தயார்படுத்தி வருகிறார்.

இன்று வசதியிலும், வாய்ப்பிலும் பின் தங்கியுள்ள எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நாடெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது அரசாங்கம், உதவியும், நல்ல ஊக்கமும் தந்தால், உலக அரங்கில் நாம் தங்கப்பதக்கங்களைக் குவித்து, விளையாட்டில் நமக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்று நட்சத்திரங்களாக மின்னலாம் என்று, நம் எல்லொருக்குமே உண்டான ஆதங்கத்தைப் பிரதி நிதித்துவமாகச் சொன்ன போது, தங்கமாய் மிளிர வேண்டியவர்களைக் கண்டறிந்து அவர்களை மேன்மைப்படுத்திக் ‘குடி உயரக் கோள் உயரும்’  என்ற முதுமொழியை, மெய்ப்பிக்க, விளையாட்டையே தனது வாழ்க்கையாகக் கொண்ட திரு. பார்த்தசாரதி இன்னும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுதல் நம் எண்ணத்தில் விழுந்ததில் வியப்பில்லை! இவர் செய்வதைச் சொன்னதில் மனதில் பதிந்த வார்த்தைகள்: ‘நாம் கற்றுக் கொண்டதை மறக்காமல் இருக்க ஒரே வழி. அதை மற்றவர்களுக்கு போதிப்பதே!’

விளையாட்டு தொடர்பான கேள்விகள் மற்றும் ஆலோசனைக்கு : 9894011709

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top