வேண்டுதலுக்காக நாடகங்கள் போடும் கிராமம்!

வேண்டுதலுக்காக நாடகங்கள் போடும் கிராமம்!

நாடகம்... பார்த்திருப்போம்... ரசித்திருப்போம்... திருவிழாவில்... பள்ளி கல்லூரிகளில்... அரங்கங்களில்... ஆனால், நிறைவேறிய வேண்டுதலுக்காக நேர்த்திக்கடனாக நாடகம் போடுவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவும் தொடர்ந்து 80 நாட்கள், 80 நாடகங்கள் போடுவதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

அந்த ஊர் நமது மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள வளையங்குளத்தில்தான் இந்த அதிசயம் நடக்கிறது. இந்த ஊரின் பிரதான அடையாளம், “தானாகத் தோன்றிய தனலிங்கப்பெருமாள் கோயில்”. இந்தக் கோயிலின் தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தக் கோயிலில், தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டுபவர்கள், தங்கள் குறைகள் நிவர்த்தி ஆனவுடன், அதற்குப் பிரதிபலனாக, அந்தக்கோயிலின் முன்பாக உள்ள மேடையில் நாடகம் நடத்த வேண்டும். மகாசிவராத்திரி அன்று முதல் நாடகம் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து 80 நாட்களும், விதவிதமான நாடகங்கள் நடைபெறும். இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காகவே, மேடையின் முன்பாக சீட் போடுவது போல், அவரவர் சௌகர்யத்திற்கேற்ப பாய், பெட்சீட், போர்வை மற்றும் துண்டுகளைப் பகலிலேயே போட்டு இடத்தை ரிசர்வ் செய்து வைப்பார்கள். இதுகூட வித்தியாசமான காட்சி தான்.

தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்ககூட அதிக ஆர்வம் காட்டாத இந்தக்காலத்தில், தொடர்ந்து நாடகம் பார்ப்பதற்காகவே, இருக்கைகளை இலவசமாக முன்பதிவு செய்வது விந்தையாகத்தானே இருக்கிறது. பழமையான நாடகங்கள்... அதன் தோரணைக்கேற்ப விடியும்வரை நடைபெறும். இரவு 10 மணிக்குத் தொடங்கும் நாடகம் அதிகாலை ஐந்து மணிவரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நாடகங்கள் நடைபெறும் காலங்களில், மழை வந்தாலும், கடும் குளிர் அடித்தாலும், நாடகத்தைப் பார்க்க் பார்வையாளர்களே இல்லை என்றாலும், நாடகம் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். அதற்கு காரணம், இந்த நாடகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவது, இங்குள்ள இறைவன்தான்.

அதனால்தான், இங்குள்ள கோயிலில், மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி முறையிட்டு, அதற்குப் பரிகாரமாக நாடகம் நடத்த வேண்டிக்கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்பவர்களின் குறைகளை, உடனே தீர்த்து வைக்கிறாரார் இங்குள்ள இறைவன், என்ற நம்பிக்கை இந்த சுற்றுவட்டார மக்களிடையே பரவலாக இருக்கிறது. இந்த நேர்த்திக் கடன் நாடகங்கள், திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்திலிருந்தே, தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இங்குள்ள தெய்வத்திற்கு, கூத்து என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆம். இந்தக் கூத்துக்கள் இறைவன் பார்ப்பதற்காகவே நடத்தப்படுகின்றன.

மகாசிவராத்திரியில் துவங்கும் நாடகம், சித்ரா பௌர்ணமித் திருநாளில்தான் நிறைவு பெறுகிறது. ஆண்டுதோறும் முதல் நாடகமாக, அபிமன்யு சுந்தரி நாடகம்தான் நடக்கும். புராண நாடகங்கள் தவிர பிற சமூக நாடகங்களோ, நடன நாட்டிய நிகழ்ச்சிகளோ, இந்த மேடையில் அரங்கேற விடுவதில்லை. மேடையில் நடிக்கும் நடிகர்கள் போதையில் இருந்தால், அதற்கு இறைவன் கடுமையான தண்டனை வழங்குவாராம். அதனால் இங்கு நடைபெறும் நாடகங்களில் பங்கு பெறும் நடிகர்கள், மிகவும் சுத்தபத்தமாக இருக்கின்றனர். விரதம் இருந்து, நடிக்கும் நாடக நடிகர்களும் உண்டு. மேலும், வளையங்குளம் நாடக மேடையில் நாடகம் போடுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

ஏறக்குறைய எல்லாப்புராண நாடக அமைப்பினரும், இந்த மேடையில் நிச்சயம் பங்கேற்றிருப்பார்கள். 1970 காலகட்டத்தில் இந்த நாடகங்கள் நூறு நாட்களைத் தாண்டி நடந்ததாகவும் கூறி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். வள்ளி திருமணம் நாடகம் மட்டும் ஒரு முறைக்கு மேல் நடக்குமாம்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top