ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 250 பேர் பலி!
Posted on 22/06/2022

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால், இடிபாடுகளில் சிக்கி 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தானின் பக்டிகா, நங்கர்ஹர் மற்றும் கோஸ்ஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பக்டிகா மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த குழுவினர் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags: News