திமுக ஆட்சியில் ரூ.20,000 கோடி ஊழல் - பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் ரூ.20,000 கோடி ஊழல் - பழனிசாமி குற்றச்சாட்டு!

2137 பேர் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறிவிட்டு 130 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திமுக ஆட்சியால் மாறியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

திமுக ஆட்சியில் 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் கோட் சூட் போட்டு பத்திரிக்கைக்கு போஸ் கொடுப்பது தான் முதல்வர் ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே சேலத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்ட செயலாளரும் அதிமுக துணை கொரடா ரவி தலைமையில் கொக்களிக்கட்டை ஆட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க, கிரேன் மூலம் ஆள் உயர மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
 
இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என எதிர்காலத்தில் எதிரொலிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக காரணம் அதிமுக தான் என கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 14 மாதகாலத்தில் அனைத்து துறைகளிலும் 20,000 கோடி ஊழல் செய்துள்ளதாகவும், கோட் சூட் போட்டு பத்திரிக்கைக்கு போஸ் கொடுப்பது தான் முதல்வர் ஸ்டாலின் வேலை, மக்களை பற்றி கவலைப்படுவதில்லை என விமர்சித்தார்.
 
சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளதாகவும், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெண்களுக்கு மாத உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம்,  நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விநியோகம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சிதைந்துள்ளதாக பேசினார். 2137 பேர் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறிவிட்டு 130 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திமுக ஆட்சியால் மாறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
 
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய அதிமுக சட்டம் இயற்றினாலும், திமுக அரசு அதனை தடுக்க தவறிவிட்டதாகவும், குழுக்கள் அமைப்பதை மட்டுமே முதல்வர் செய்கிறார். குழுக்கள் செயல்படுவதில்லை. அதிமுக கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டில் 550 பேர்  மருத்துவம் படித்து வருவதாகவும் பெருமிதமாக தெரிவித்தார்.
 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top