தமிழகத்தில் செப்.16-ல் நடைபெறும் முழு அடைப்புக்கு தேமுதிக ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு
Posted on 15/09/2016

கர்நாடக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி பிரச்சனைக்காக கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தாக்கியதோடு, தமிழக வாகனங்களின் கண்ணாடியை உடைத்தும், தீ வைத்து எரித்தும் தமிழர்களின் சொத்துக்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழக மக்களின் வாகனத்திற்கும், வணிகர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு கர்நாடக அரசு பொறுப்பேற்று உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். கர்நாடக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழக அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
கர்நாடக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்துக்கின்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிப்பதுடன், அனைத்து அமைப்புகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜிகேவாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Madurai News