அதிமுக துணைப் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்!

அதிமுக துணைப் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் தினகரனுக்காகவே துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையனுக்கு செக் வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான ஒருவராக அதிமுகவினரால் நம்பப்பட்டவர் டிடிவி தினகரன். இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். அதிமுகவின் பொருளாளராகவும் சில காலம் இருந்துள்ளார். தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இந்த உச்சத்துக்கு கொண்டுவந்தவரும் இவர்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி முழு வீச்சில் இறங்கி காய்களை நகர்த்தியது. அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்களை அடையாளம் கண்டு பேச்சுவார்த்தை நடத்தி கார்டனுக்கு கொண்டு வந்ததும் தினகரன்தான்.

மத்திய அரசின் கடும் நெருக்கடியால் பொதுச்செயலர் பதவியை ஏற்க ரொம்பவே தயங்கினார் சசிகலா. அப்போது தினகரன் தம்மை பொதுச்செயலராக்குங்கள் என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் சசிகலாவின் தம்பியான திவாகரன் தனக்குதான் பொதுச்செயலர் பதவி தர வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர் அதிமுக தலைவர்களும் இப்பொழுதே பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாம் என கூறியிருந்தனர். ஆனால் தினகரன்தான் பொதுக்குழு தொடங்கி தீர்மானங்கள் வரை நடத்தியிருக்கிறார்.

தினகரனுடன் கை கோர்த்து செயல்பட்டது டாக்டர் வெங்கடேஷ். இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டாலும் தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இவர்கள் கைதான் ஓங்கியிருக்கிறது.

வெங்கடேசின் அக்காள் அனுராதாவின் கணவர்தான் டிடிவி தினகரன். இருவரும் இணைந்துதான் சசிகலாவை ஆட்டி வைத்தனர். இருவரையும் 2011ஆம் ஆண்டே கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இனி இவர்கள்தான் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்பதற்கு அச்சாரமாகவே மீண்டும் கட்சியில் உடனடியாக இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலா தற்போது சிறைக்கு செல்ல உள்ளதால் கட்சியை வழி நடத்த தினகரன், வெங்கடேசனை மீண்டும் இணைத்தார். உடனயாக டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தினகரனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பதவியாகும்.

கடந்த சில மாதங்களாக டிடிவி தினகரன்தான் சசிகலாவின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். இவர் அதிமுக அதிகாரப்பூர்வமாக உள்ளாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஏனெனில் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவினார் தூக்கி எறியப்பட்டவர். அவரை கட்சியில் சேர்த்த உடனே இப்போது துணைப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் சசிகலா. கட்சியை குடும்பமாக மாற்ற முடிவு செய்து அக்காள் மகனை துணைப் பொதுச்செயலாளராக்கியுள்ளார் சசிகலா.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top