பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும் - பிரசாந்த் கிஷோர்
Posted on 10/08/2022

முதலமைச்சர் நிதீஷ்குமாரின் முடிவால் இனி பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும் வென்றன. மொத்தமாக 125 இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடித்தது.
ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் பாஜக வென்றுள்ள போதிலும், முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக்கொடுத்தது பாஜக. எனினும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே சிறுசிறு மனக்கசப்புகள் அவ்வப்போது ஏற்பட்டன. அந்த கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியேறி உள்ளது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், இனிமேல் பீகாரில் அரசியல் நிலைத்தன்மை திரும்பும் என நம்புகிறேன். புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மக்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். ஒருவரின் அரசியல் அல்லது நிர்வாக எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது கூட்டணி அமைப்புக்கள் மாற்றப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்கிறது. நிதீஷ்குமார் இப்போது கட்டமைத்துள்ள அமைப்பில் உறுதியாக நிற்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த புதிய உருவாக்கம் (ஜேடி (யு) மற்றும் ஆர்ஜேடி) நீடிக்கும் என்றும், அதன் முன்னுரிமைகள் மக்களின் விருப்பங்களுடன் ஒத்திசைவாக இருக்க வேண்டும் என்றும் பீகார் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசு முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தேஜஸ்வி யாதவ் பீகாரில் தனிப்பெரும் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் இந்த புதிய அமைப்பை இயக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்த புதிய அரசில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை மக்கள் பார்க்க முடியும். பீகாரில் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மாநிலத்திற்கு நல்ல மாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நாட்டில் தேசிய அளவில் மாற்று எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது நடந்ததாக நான் நினைக்கவில்லை என்று கூறினார்.
Tags: News