புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் - டெல்லி சென்ற முதலமைச்சர்!
Posted on 09/08/2022

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், தற்போது வரை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவசரமாக நேற்று இரவு டெல்லி சென்றுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மாநில திட்டக்குழு இறுதி செய்த பட்ஜெட்டிற்கான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாக இரு தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவசரமாக நேற்று இரவு முதல்வர் ரங்கசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இணைந்து அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக நேற்று அவர் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதலமைச்சர் ரங்கசாமி குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Tags: News