ஜெ. நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓ.பன்னீர் செல்வம்
Posted on 07/02/2017

நேற்று இரவு 9 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை மெரினா வந்தார். திடீரென ஜெ., நினனவிடத்தில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார். இதனால் மெரினா கடற்கரை பரபரப்பானது. தகவலறிந்த செய்தியாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பொதுமக்களும் குவிந்தனர். தியானத்தை முடித்த பன்னீர் செல்வம் தனது மன குமுறைலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறினார். இவரது திடீர் பேட்டி தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. இதன் மூலம் சசிகலா முதல்வராக பன்னீர் செல்வம் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:
ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய நினைவிடத்திற்கு சென்று நினைவிடத்திற்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்த மனசாட்சி உந்தப்பட்டதால் வந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு உள்ளார்ந்த அன்போடு சொல்ல வந்தேன். அவர்களுக்கு சில உண்மைகளை சொல்ல ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்தியது.
ஜெ., நோய் வாய்ப்பட்டு அப்பல்லோவில் சிகிச்சையிலிருந்து 70 நாட்களுக்கு பிறகு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார்கள். மாற்று ஏற்பாட்டிற்கு என்ன தேவை என கேட்டேன்.
ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச்செயலராக அவை தலைவர் மதுசூதனனை நியமிக்க கூறினார்.
என்னை முதல்வராக சொன்னார். நான் முதல்வராக மறுத்தேன். அதற்கு, 2 முறையை என்னால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் நீ்ங்கள். தற்போது, உங்களை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வர் ஆக்கினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையும் என சொன்னார்கள். அதனால், முதல்வர் பதவியை ஏற்றேன்.
முதல்வரான பிறகு சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் வந்த திவாகரன் என்னுடைய அக்காவை ஊருக்கு அழைத்து செல்ல உள்ளேன் என்றார். காரணம் கேட்டதற்கு என்னுடைய அக்கா தான் பொதுச்செயலராக வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற போது தம்பிதுரை தலைமையில் 50 எம்.பி.,க்கள் வந்தார்கள். பிரதமர் எனக்கு அனுமதி அளித்து இருக்கிறார். வாருங்கள் அனைவரும் ஒன்றாக சென்று சந்திப்போம் என சொன்னதற்கு மறுத்துவிட்டார். நான் முதல்வராக இருக்கும் போது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். நான் முதல்வராக இருக்கும் போது எனக்கு கீழ் உள்ள அமைச்சர் இவ்வாறு பேட்டி அளித்தது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்தேன். அவர்கள் அமைச்சரை கண்டிப்பதாக கூறினார்கள். இதேபோல், தொடர்ந்து அமைச்சர் செல்லுார் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா முதல்வராக வேண்டும் என பேட்டி அளித்தனர். என்னை முதல்வர் ஆக்கி அவமானப்படுத்தி விட்டார்கள் அ.தி.மு.க., சட்டசபை கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அவர்களே அனைத்து பணிகளை முடித்து விட்டு என்னை குறிப்பிட்டு என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுடன் பொறுமையாக நீண்ட நேரம் விவாதித்தேன்.
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள். என்னை பொறுத்தவரை நான் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள், மக்கள் விரும்பும் ஒருவரே முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற தனித்து போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
பன்னீர் செல்வம் அதிரடி பேட்டி அளித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் போயஸ் கார்டன் விரைந்தனர். பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: News, Art and Culture