கமலின் எச்சரிக்கை ட்விட் பலித்தது!
Posted on 30/10/2017

வடசென்னை பகுதியில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதால் கன மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் என்றும் வடசென்னைக்கு ஆபத்து என்றும் நடிகர் கமல் கடந்த சில நாள்களுக்கு முன்னர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்க பாதையில் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
புளியந்தோப்பு - வியாசர்பாடி இடையே சென்ற பேருந்து ஒன்று இந்த மழை நீரில் சென்ற போது பழுதாகி மாட்டிக் கொண்டது. இதையடுத்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் பஸ் மீட்கப்பட்டது. எனினும் இந்த வெள்ள நீரில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்றுவிடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் அப்பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மோட்டார் வைத்து அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு நாள் மழைக்கே இந்த கதி என்றால் இன்னும் இரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்ற அறிவிப்பு இப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Tags: News, Art and Culture