தமிழகத்தின் தலையெழுத்தை தலைகீழாய் புரட்டிப்போட்ட நாள் இன்று!

தமிழகத்தின் தலையெழுத்தை தலைகீழாய் புரட்டிப்போட்ட நாள் இன்று!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஆளுமை திறன், எதற்கும் அஞ்சாத துணிவு, யாருக்கும் அடிப்பணியாத தன்மை, திட்டங்களை வகுப்பதில் வல்லமை என பன்முகத் தன்மை கொண்டவர் ஜெயலலிதா. எந்த தேர்தலாக இருந்தாலும் இவருடன் கூட்டணி வைக்க போட்டி போடுவார்களே தவிர, இவர் யாரிடமும் கூட்டணிக்காக அணுகியதில்லை.

அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டால் கார்டனுக்கு வரவழைத்து அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாட்டினால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்துகிடந்தனர். ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லை. அவர் உடல்நல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்றும் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை அறிக்கைகளை அளித்தன. இது அங்கு கூடியிருந்த மக்களுக்கு சற்று தெம்பை அளித்தது. ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்வதாக கூறப்பட்ட வதந்திகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பார்வையிட்டார். பின்னர் அவருக்கு ஏற்பட்டிருந்த நோய் தொற்றை தடுப்பதற்கான மருந்துகளையும் பரிந்துரைத்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதால் அவர் இன்னும் கொஞ்ச காலத்துக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அப்பல்லோவிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி ஜெயலலிதா கூறியதாக அதிமுக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மக்கள் மற்றும் தொண்டர்களின் பிரார்த்தனையால் நான் மறுபிறவி எடுத்துள்ளேன். உங்கள் அன்பு இருக்கும்போது எனக்கு என்ன பாதிப்பு வந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நோய் தொற்று காரணமாக ஜெயலலிதாவை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சுமார் 74 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. லண்டன் மருத்துவமனை மருத்துவர் பீலே வரவழைக்கப்பட்டார். ஆனால் நிலைமை கையை சென்று விட்டதாக பீலே தெரிவித்தார். ஜெயலலிதாவின் உயிரை காக்க பல்வேறு உயிர் காக்கும் முயற்சிகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. என்றாவது ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துவிடுவோம் என்று எண்ணி மருத்துவமனை வாயிலில் காத்திருந்த மக்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினார்.

ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 6-ஆம் தேதி ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மெரினாவில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றுடன் இந்க மாபெரும் சகாப்தம் முடிவடைந்து ஓராண்டுகள் நிறைவடைகிறது. ஜெயலலிதா மறைந்தாலும் அவர் ஆற்றிய திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த ஒரு பெண்மணியின் மறைவிற்குப் பின்னர் தமிழகமே தலைகீழாய் தான் புரண்டுகொண்டிருக்கிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top