கர்நாடக அரசு கைவிட்டாலும் கடவுள் கைவிடவில்லை - விவசாயிகள் நம்பிக்கை!

கர்நாடக அரசு கைவிட்டாலும் கடவுள் கைவிடவில்லை - விவசாயிகள் நம்பிக்கை!

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அம்மாநில அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்படும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை வழங்காத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரவேண்டிய தண்ணீரும் வரவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

கர்நாடகா அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதாக காரணம் கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர அம்மாநில அரசு மறுத்துள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பருவமழை குறைந்த அளவே பொழிந்ததால் கர்நாடகாவின் தேவைக்கே தண்ணீர் இல்லை என வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க முடியும் என்பது குறித்து விளக்கம் அளிக்க கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஏன் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போதிய மழையில்லாமல் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலம் என்ற முறையில் ஏன் உதவக்கூடாது என்றும் நீதிபதிகள் கேட்டனர். மேலும்,கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணை மேகதாது, பிலிகுண்டுலு, ஒகேனக்கல், உள்ளிட்ட தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 7ஆயிரத்து 153 கன அடியில் இருந்து 10 ஆயிரத்து 694 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு 36.46 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top