12 அடுக்குமாடியை சாய்த்து போட்ட பூகம்பம்!

12 அடுக்குமாடியை சாய்த்து போட்ட பூகம்பம்!

தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அதி சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சுமார் 60 பேரைக் காணவில்லை என்றும் தைவான் மாநில செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த 40 ஆண்டு வரலாற்றிலேயே ஹுவாலியனில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகவும் மோசமானது என்று உள்ளூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மார்ஷல் விடுதிக்கு வெளியில் இருக்கும் ஒரு கட்டிடம் மிக மோசமான பாதிப்பை நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளது.

சுமார் 12 அடுக்குமாடியான அந்த கட்டிடமானது யாரோ கவிழ்த்து போட்டது போல 40 டிகிரி கோணத்தில் சாய்ந்து கிடக்கிறது, கட்டிடம் சாய்ந்த போது அதில் இருந்த மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துபோயுள்ளனர். இந்த அடுக்குமாடியின் தரைத்தளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர், எஸ்கலேட்டர்கள், ஏணிகளை பயன்படுத்தி மீட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது " நிலநடுக்கத்தால் இந்த கட்டிடம் கொஞ்சம்கொஞ்சமாக புதையத் தொடங்கியது. தரைதளம் முதல் மூன்றாம் தளம் வரை தரையில் அழுந்திவிட்டது தற்போது நான்காவது தளம் தான் முதல் தளம் போல காட்டிசியளிக்கிறது என்று கூறியுள்ளார். 

சாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர். இதன் பிறகு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று சொல்லப்படுகிறது. 

கடந்த ஞாயிறன்றும் இதே பகுதியில் சுமார் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை வரை 4.5 ரிக்டர் அளவில் தொடர் அதிர்வலைகளும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த அதிர்வலைகள் இருக்கும் என்று அரசு கருதுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசு கூறும் சரியான தகவல்களை கேட்டு அதற்கேற்ப செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: News, Art and Culture, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top