சித்ரா ராமகிருஷ்ணா கைது!

சித்ரா ராமகிருஷ்ணா கைது!

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா அண்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக, அவர் பதவிக்காலத்தில் பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளதாக பிப்ரவரி 11ஆம் தேதி செபி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது.
 
மேலும், தேசிய பங்குச் சந்தையின் குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்த செபி, முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியத்தை உயர் பதவியில் நியமித்து அவருக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொடுத்ததாக கூறும், தணிக்கை அறிக்கை, அந்த இமயமலை சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன்தான் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா விசாரணை வளையத்தில் சிக்கினார். முதலில் சித்ரா வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் சித்ராவிடம் விசாரணை நடத்தினர். அதேசமயம், விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது. இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்தது.
 
மேலும், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ கடந்த மாதம் 18ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
 
இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லியில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா ராமகிருஷ்ணாவின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அவரை, சிபிஐ அதிகாரிகள் கடந்த 25ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்த நிலையில் தற்போது சித்ரா ராமகிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top