தமிழர் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பீட்டா!

தமிழர் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பீட்டா!

PETA, இந்த பெயர்தான் சமீபத்தில் பலரால் பேசப்பட்ட ஒன்று. பலருக்கும் PETA ஜல்லிக்கட்டை தடைசெய்ய வழக்கு தொடர்ந்த ஒரு நிறுவனம் என்பது தெரியும். ஆனால் உண்மையில் யார் இந்த பீட்டா. PETA – People for the Ethical Treatment for Animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கிவருகிறது.

அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவுசெய்து கொண்டது. (உதாரணமாக ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படுவதுபோல..) தங்களின் முதற்பணியாக வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப்போவதாக அறிவிப்பை அமெரிக்கா முழுவதும் அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு வரத்தொடங்கவே, இலட்சக்கணக்கான விலங்குகளை காப்பகத்தில் குவித்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது இந்த அமைப்பு. அந்த சட்டத்தின் படி ஆதரவற்ற ஒரு விலங்கை பதினைந்து நாட்கள் பீட்டா பராமரிக்கும். அந்த பதினைந்து நாட்களுக்குள் அந்த நாயையோ அல்லது பூனையையோ யாரும் தத்தெடுக்க முன்வராவிட்டால் அந்த விலங்கை கருணை கொலை செய்து கொல்லலாம் என்கிற கொடூர சட்டம் அது. ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 2015ம் ஆண்டு மட்டும் பீட்டா நிறுவனம் கொலை செய்த நாய், பூனை, முயல்கள் மற்றும் இதர விலங்குகளின் எண்ணிக்கை 35,000. ஆம்! ஒரு ஆண்டிலே இவ்வளவு என்றால், கிட்டதட்ட 35 ஆண்டுகளாக அவர்கள் கொன்ற விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு போகவே முடியாது. சரி கருணை கொலை என்கிற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் விலங்குகளை கொல்ல வேண்டும்? அதற்கு உணவு அளித்துப் பராமரிக்க பணமும், இடமும் இல்லை என்பதனால் தானோ என்கிற கேள்வி உங்களின் மத்தியில் எழும்பும். இதன் பதிலில்தான் சூட்சமமே அடங்கியுள்ளது.

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப்பெரிய மார்க்கெட். எனவே, வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப்பெரும் பணத்தை நிதியுதவி என்கிற பெயரில் இன்றுவரை வழங்கிவருகின்றன. பீட்டாவின் இந்த கருணைக் கொலைதான் அவர்களின் வியாபாரம் சரிந்துவிடாமல் உயர்ந்து கொண்டே இருக்க செய்கிறது.

இந்த விஷயங்கள் மற்ற ஆதரவற்ற விலங்குகள் காப்பகங்களுக்கு தெரிய வந்ததால், பீட்டா தம்முடைய பணபலத்தைக் கொண்டு தம்முடைய உளவாளிகளை ஏவி நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்தது போல அந்த அமைப்புகளின் விலங்குகள் பராமரிக்கும் விதத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அந்த நிறுவனங்களை முடக்கியது. போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வ செழிப்பை நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழித்து வியாபாரத்தை பெருக்கிக்கொண்ட பீட்டா, இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் தமிழகத்தின் மீதும் தன் கண்ணை வைத்தது, ஜல்லிகட்டிற்கு தடைகோரியது. தமிழ்நாட்டில் மட்டும் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக் கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுவதும் ஊர் சுற்றிக்கொண்டு ஜாலியாக இருக்கும். அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத்தேவையை தீர்த்துவிடும். இதுபோக ஜல்லிக்கட்டில் விடப்படும் மாடுகள் நன்கு பராமரிக்கப்பட்டு, மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் இந்த காயடிக்கப்படாத மாடுகளும் இனவிருத்தி வேலையைச்செய்யும்.

எனவே தான் பீட்டா இந்த ஜல்லிக்கட்டை குறிவைக்கிறது. ஜல்லிக்கட்டிற்காக, நாட்டு மாடுகள் நன்கு பராமரிக்கப்பட்டுகிறது. இதனால் அவை இனவிருத்தியை சிறப்பாக செய்கிறது. நாட்டு பசுமாடுகளை அழித்து கலப்பின மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்க வேண்டுமானால், நாட்டு பசுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு காரணமான ஜல்லிக்கட்டு மாடுகளை அழிக்க வேண்டும்.

கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும். மேலும், மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு ஊசிகள் தேவைப்படும். உலகின் மிகப் பெரிய மாட்டுத் தீவன மற்றும் ஊக்கமருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை. எனவே ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது. அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்!

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top