மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

மேகதாது அணை பற்றிய கர்நாடக அரசின் அறிவிப்பு தமிழக விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேகதாது அணை பற்றிய கர்நாடக அரசின் அறிவிப்பு தமிழக விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நதிநீர் பிரச்சனை குறித்த மோதல் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கு இடையே இருந்து வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவிரி நீரையே நம்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் என்றும் அதைச் செயல்படுத்தக் கூடாது எனக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் தமிழக விவசாயிகளுக்கு இடியாக விழுந்தது கர்நாடக அரசின் தற்போதைய அறிவிப்பு. கர்நாடக மாநில பட்ஜெட்டில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில் மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேகதாது அணை திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக ஒன்றிய நீர்வள ஆணையத்தில் கடந்த ஆண்டில் தாக்கல் செய்த போதே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாயை கர்நாடக பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை கட்டப்பட உள்ளதாக கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top