தை மாதத்தின் புண்ணிய தினங்கள்!

தை மாதத்தின் புண்ணிய தினங்கள்!

தை அமாவாசை தினமானது பிதுர் வழிப்பாட்டிற்கு சிறப்பானதாக கருதப்படுகின்றது. அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவதால் புராண காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் வரும் அமாவாசை திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. தை அமாவாசை தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையராய் பிதுர், தர்ப்பணம் செய்தும் பிண்ட தானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றத்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக்கொள்கையுடன் இருப்பர்.

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப்பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுக்கின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற அழகியல் செயற்பாடுகளைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர்.

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷ திதி, மகாளய பட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும் கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்து அந்த ஆடை மற்றும் உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைப்பட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மன நிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

தை மாதம் என்றதும் இந்துக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பொங்கல் திருநாள் தான். ஆயினும், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர்களுக்கும், இந்து சமயத்தில் விரதங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவங்கள் பற்றித் தெரிந்தவர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது தைப் பூசமே.

தைப்பூசத்தன்று சிவனை நினைத்து விரதம் அனுஷ்டிப்பவர்கள், அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிட்டு மாலையில் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

ஒரு முறை, வாயு பகவான், வருணதேவன், அக்கினிதேவன் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்கருகில் இருந்த ஒரு சிறு துரும்பை இலகுவாக அழித்துத் தமது சக்தியை நிரூபிக்க நினைத்தனர். ஆயினும், அவர்களால் அந்தத் துரும்பை அசைக்கக்கூட முடியவில்லை. மூவரும் திகைத்து நின்றனர். அப்போது நாரத முனிவர் அங்கு தோன்றி பரம்பொருளின் சக்தியை எடுத்து உரைக்க மூவரும் தம் மமதை நீங்கி இறைவனிடம் மன்னிப்புக் கோரினர். அவர்களது அறியாமையைப் போக்கிய சிவன் தைப்பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள் செய்வதாகக்கூறி அருள்புரிந்தார். ஆகையால், தைப்பூசத்தன்று சிவனை மனதார வழிபட்டு ஆத்ம பலம் மிகப்பெறலாம். தந்தைக்கு மட்டுமன்றி தனயனுக்கும் இது சிறப்புமிக்க ஒருநாள் தான்.

தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாள். தை மாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப்பொழுது சிவாம்சமான சூரியன், மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரம் ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பௌர்ணமியில் நிகழும்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top