விதியைத் திருத்தும் திருப்பட்டூர் பிரம்மா!

விதியைத் திருத்தும் திருப்பட்டூர் பிரம்மா!

“நம்ம தலையெழுத்து இப்படித்தான்னா, அதை யாரால் மாற்ற முடியும்” என்று அலுப்பும் சலிப்புமாக, கவலையும் வேதனையுமாக, வாழக்கையில் புலம்புகிற சராசரி மனிதர்கள்தானே நாம்?! கவலையே வேண்டாம். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பதுபோல, நம் தலையெழுத்தை எழுதிய பிரம்மதேவனே, நமக்காக, சிவனாரைத் தொழும் அடியவர்களுக்காக, தலையெழுத்தைத் திருத்தி அருள்கிறார். பொதுவாக, கோஷ்டத்தில் இருக்கிற பிரம்மா, தனிச்சந்நிதியில் பிரம்மாண்டமாகக் காட்சிதந்து, அருள்பாலிக்கிறார். அந்தத் திருத்தலம்... திருப்பட்டூர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம் இது.

இங்கு வந்து வேண்டிக்கொண்டவர்களுக்கு, விரைவிலேயே தடைகள் தகர்ந்து திருமணம் நடந்திருக்கிறது. கல்யாணமாகியும் பல வருஷமாச்சு. ஆனா கொஞ்சி விளையாட குழந்தை இல்லியே... என்று வருந்தியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது. நல்லா படிக்கிற பையன்தான். ஆனா என்னாச்சுன்னே தெரியலை. கொஞ்சம் மந்தமாயிட்டானே... என்று கவலைப்பட்டவர்கள், இங்கே பிரம்மா சநநிதியில் வேண்டிக்கொள்ள, கல்வியும் ஞானமும் கிடைத்து, புத்தியில் தெளிவுடன் வலம் வருகிறார்கள், அவர்களின் குழந்தைகள்.

வேலை கிடைக்கவில்லையே என்று வந்தவர்களுக்கு வெளிநாட்டிலேயே வேலை கிடைத்த நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், எல்லாத் தருணங்களிலும் பிரம்மாவை மானசீகமாக வேண்டி, காரியமாற்றுகிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்து, வேண்டுதல் நிறைவேறியதும், படைத்த பிரம்மாவுக்கு, மஞ்சள்காப்பு செய்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். திருப்பட்டூர் போயிட்டு வந்தேன். பிரம்மாகிட்ட மனசார வேண்டிக்கிட்டேன். இன்னிக்கி நல்லாருக்கேன் என்று இந்த உலகில் ஏதேனும் ஓர் மூலையில் இருந்து, எவரேனும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதுதான், இந்தத் தலத்தின் அற்புதம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதியும் உண்டு.

ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக்கிணறு பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்ம புரீஸ்வரர் கோயிலில், 12 சந்நதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைந்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்! விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!

பிரம்மாவுக்கு சாபவிமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக! என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்ல விதமாக திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவதரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா. அதனால் தான். திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் அள்ளித்தந்து வாழவைக்கிறார் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top