எமனை வென்ற மார்க்கண்டேயனின் சிவபக்தி!

எமனை வென்ற மார்க்கண்டேயனின் சிவபக்தி!

ஈசனின் அறக்கருணையும் மறக்கருணையும் ஒருங்கே பிரத்யட்சமாகும் இடம் திருக்கடவூர். அங்கு கால ஸம்கார மூர்த்தியை தரிசனம் செய்யும் போதே இதற்கான புராண வரலாற்றை ஒருமுறை நினைத்துப் பார்க்கலாம்.

மிருகண்டு தம்பாட்டனாரையும், தந்தையையும் போல சிவநேயச்செல்வராக வளர்ந்தார். இவருடைய மனைவி மருத்துவதி, இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கம். மிருகண்டு முனிவர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தார். ஈசன் தன் அடியார்களுக்குப் பரீட்சை வைப்பதுண்டு. “இவனுக்குத் திடமான பக்தியும் என்னிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருக்கிறதா” என்று சோதித்துப் பார்த்தார். மிருகண்டு முனிவர் ஜெயித்து விட்டார். “மூடனாகப் பிறந்து நூறு ஆண்டுகள் வாழக்கூடிய மகன் வேண்டாம். பதினாறு வயது வரையில் வாழ்ந்தாலும் சிவபக்தியில் சிறந்த மகனே வேண்டும்” என்று கேட்டுவிட்டார்.

மிருகண்டு முனிவரின் அருந்தவப் புதல்வன் மார்க்கண்டேயன். எல்லாக் குழந்தைகளையும் போலவே வளர்ந்தாலும் ஈசன் அருள் பெற்ற இளங்கன்று அல்லவா? தந்தையோடு சிவபூஜை செய்து வந்தான். கோவில் விளையாடுமிடமாகவும். கல்விக்கூடமாகவும் விளங்கியது. சிவபூஜையே விளையாட்டு, நைவேத்யம் செய்த பிரஸாதமே உணவு என்றாகி விட்டது மார்க்கண்டேயனுக்கு.

குழந்தை வளர வளரப் பெற்றோருக்கு துக்கம். வற்புறுத்திக் கேட்டு அவர்களுடைய துயரத்துக்குக் காரணத்தைத் தெரிந்து கொண்டான் சிறுவன் மார்க்கண்டேயன். உடனே தலயாத்திரை புறப்பட்டு விட்டான். பொன்னி நதி பாயும் வளமான சோழ நாட்டில் அமிர்தகடேசுவரரைத் தரிசித்தான். மிருத்யுவை அண்டமுடியாமல் செய்வது அமிர்தம் தானே. இவரே என்னைக் காப்பாற்றுவார் என்று நம்பி அவரிடம் அடைக்கலம் புகுந்தான்.

“ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்

நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி”

என்று தொடங்கி பதினெட்டு அடிகள் கொண்ட சுலோகங்களால் தினந்தோறும் அம்ருதகடேசுவரருக்குப் பாமாலை சூட்டிப் பூமாலையும் அணிவித்துத் தொழுது வந்தான். பதினாறு வயது முடிந்தது. யமதூதர்கள் மார்க்கண் டேயனின் உயிரைப் பறிக்க வந்தார்கள். சிவத்யானத்தில் ஆழ்ந்திருக்கும் மார்க்கண்டேயனை நெருங்கவே பயந்து திரும்பிச் சென்றார்கள். யமதர்மரா ஜனுக்குக் கோபம் வந்துவிட்டது. தன் மந்திரியாகிய காலனை அனுப்பினார்.

மார்க்கண்டேயன் “நீ யார்?” என்ற கேட்டதும் காலனே கலங்கிப் போனான். மார்க்கண்டேயனை வணங்கி, “என்னுடன் வரவேண்டும்” என்றான் காலன். “சிவ பக்தர்கள் யமனுக்கு வசமாக மாட்டார்கள்” என்ற பதிலைக் கேட்டு அதிர்ந்து யமனிடமே திரும்பிச் சென்றான் காலன்.

கடைசியில் யமனே வந்து பாசத்தை வீச, பயந்து போன மார்க்கண்டேயன் அமிர்தகடேசுவரரைக் கட்டிக்கொண்டு விட்டான். யமன் வீசிய பாசம் லிங்கத்தையும் சேர்த்துக் கட்டி இழுத்தபோது சிவலிங்கத்திலிருந்து ரௌத்ரகாரமான கோபத்தோடு வெடித்து கால காலனாக வெளிப்பட்டார் ஈசன்.

யமதர்மராஜனைத் தம் காலால் உதைத்து எருமை வாகனத்தோடு தள்ளினார். மரணமே மரித்தது. மார்க்கண்டேயனை அறக்கருணையாலும் காலனை மறக்கருணையாலும் ஆட்கொண்டார் ஈசன்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top