பழனியில் பங்குனி உத்திர விழா!

பழனியில் பங்குனி உத்திர விழா!

முருகனுக்கு உகந்த திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். இதேப்போல தைமாசத்தில் வருகின்ற தைப்பூசமும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

பங்குனி உத்திரம் புனிதமும் பெருமையும் மங்களமும் நிறைந்த நன்னாளாக போற்றப்படுகின்றது. பங்குனி உத்திரதினத்தில் பற்பல தெய்வ அவதாரங்களும், தெய்வத்திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக புராணக் கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பங்குனி உத்திரதினத்தின் பெருமை நமக்கு நன்கு புலப்படுகின்றது. குரு வீடான மீனராசியில் சூரியனும், கன்னி ராசியில் சந்திரனும் சமமாக பார்த்துக்கொள்ளும் திருநாளே பங்குனி உத்திரதினமாக கொள்ளப்படுகின்றது. பங்குனி உத்திரதினத்தில் பெரும்பாலான முருகன் கோயில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுகின்றது. முருகப் பெருமானின் அத்தனை தலங்களிலும் பங்குனி உத்திரம் பிரமோற்சவமாகவும் கல்யாண உற்சவமாகவும் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. முருகனின் திருக்கல்யாணத்தை முருகப்பக்தர்கள் அனைவரும் மனம் குளிரகண்டு களித்திடல் வேண்டும், அந்த பெறற்கரிய பேற்றினை பெற்றிடல் வேண்டும் என்ற காரணத்தினாலும் அறுபடை வீடுகளிலும் இதர முருகன் தலங்களிலும் முருகனின் திருக்கல்யாண உற்சவமும் வெகுச்சிறப்பாக நடத்தப்படுகின்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தில் சப்பரம், வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்கக் குதிரை, வெள்ளி பிடாரி மயில் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறு கின்றது. அதுமட்டுமன்றி பங்குனி உத்திரம் பத்து நாட்கள் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவி உடை அணிந்த பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பழனிக்கு கால்நடையாகவே செல்கின்றார்கள்.

பங்குனி உத்திரம் கோடையில் வருகின்ற விழா என்பதால், அன்றைய தினம் பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குவதை ஓர் நேர்த்தி கடனாகவே செய்து வருகின்றார்கள். வாழ்க்கையில் பல துன்பங்களோடு, நிம்மதியின்றி தவிப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று நீர் மோர் மற்றும் பானகம் பக்தர்களுக்கு வழங்கி உதவினால் நிம்மதியும் அமைதியும் கிட்டி வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை. அலகு குத்தி வருதல், பால்குடம் எடுத்தல் பல வடிவிலான காவடி எடுத்தல் முதலியனவாகவும் பக்தர்களால் நேர்த்தி கடனாக செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் பழனியம்பதியில் பக்தர்கள் வெள்ளம் கடல் அலையென ஒன்றுதிரண்டு வரும் திருக்காட்சியை காணகண்கோடி வேண்டும். இத்தனை லட்சம் பக்தர்களும் முருகனின் திருவருள் பெற வேண்டியே பங்குனி உத்திர தினத்தன்று நெஞ்செல்லாம் முருகனை சுமந்து கொண்டு பழனிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் கோரிக்கையையும், நேர்த்தி கடன்களையும் முருகன் மனமாற ஏற்றக்கொண்டு அருள்புரிகின்றார் என்பது கண்கூடாகும்.

இவ்வளவு பெருமைகளும் மகிமைகளும் நிறைந்த பங்குனி உத்திர திருநாளில், திருப்புகழ் பாராயணம் செய்து, மனம் முழுவதும் முருகனை நிலைநிறுத்தி உள்ளம்உருகி வழிபட்டால் கல்வி, செல்வம், ஆரோக்கியம் நிறைந்த அமைதியான ஒற்றுமையான குடும்பம் வாய்க்கப் பெற்று எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top