மனிதர்களின் பாவம் களைந்த ‘புனித வெள்ளி’

மனிதர்களின் பாவம் களைந்த ‘புனித வெள்ளி’

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை ‘புனித வெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறார்கள், சிலுவையில் அறையப்பட்ட இயேசு தாம் மரிக்கும் முன்பாக ஏழு வார்த்தைகளை முன்மொழிந்தார். அந்த எழு வார்த்தைகளும் அதன் அர்த்தமும் என்னவென்றால்...

1) ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ (லூக்கா 23:34)

கடவுளின் பார்வையில் நாம் எல்லோரும் குழந்தைகள் தான். குழந்தைகள் எப்போதும் தவறுகளை வேண்டுமென்றே இழைப்பதில்லை. அதுபோலதான் இயேசுவும் தம்மை காயப்படுத்தி சிலுவையில் அறைந்த தம்முடைய பிள்ளைகள் இதை தெரியாமல் செய்கிறார்கள் என பிதாவிடனித்தில் அவர்களுக்காக மன்றாடினார்.

2) இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப் பாய். (லூக்கா 23:43)

இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார், அதில் ஒருவன் அந்த நல்லவருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து, அவர் யார் என்பதையும், இது ஏன் அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, ‘ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று இயேசுவிடம் கூறினான். தான் பாவி என்றும், சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற வேண்டும் என்றும் அவன் உணருகிறான். அவனின் இந்த மனந்திரும்பு தலை உணர்ந்த இயேசு இந்த வார்த்தைகளை கூறினார்.

3) ‘இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார், பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்’ என்றார் (யோவான் 19:26-27)

இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள். இயேசு இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத் தன் தாயை யோவானிடத்தில் ஒப்படைத்தார். இது இயேசு கடவுளுடைய கற்பனைகளைக்கைக் கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

4) ‘ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி’ என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மத்தேயு 27:46)

இதற்கு ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று அர்த்தம். அவர் நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன், ஆனால், அவர் மனுக்குலத்தின் பாவத்தை சுமந்தபோது, பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்களை உடைய தேவன் அவரிடத்தில் இருந்து தமது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. அது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப்பெரிய வேதனையை அவருக்கு உண்டாக்கிற்று. மேலும், நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல் இருப்பதற்காகவே கடவுள்  இயேசுவைச் சிலுவையில் கைவிட்டார். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, இவ்வார்த்தைகளை கூறி கதறினார்.

5) ‘தாகமாயிருக்கிறேன்’ (யோவான் 19:28)

இந்த தாகம், இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரகவேதனையை அனுபவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார். நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட, ‘பிதாக்கள் திராட்சைக் காய்களைத்தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின’ என்று அந்தக்காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. அந்த பழமொழி ஒருநாள் இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள் சொல்லியிருந்தார்.
 
6) ‘முடிந்தது’ (யோவான் 19:30)
 
கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக்கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட டெட்டெலெஸ்டாய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆகவே, இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக்கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
 
7) ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்பு விக்கிறேன்’ (லூக்கா 23:46)
 
இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச்சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து மரணம் அடையவில்லை. அவர் ஜீவாதிபதி, ஜீவனைக் கொடுக்கிறவர், அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார், அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top