முழுமுதற் கடவுளின் முதல் கோவிலாம் பிள்ளையார்பட்டி!!!

முழுமுதற் கடவுளின் முதல் கோவிலாம்  பிள்ளையார்பட்டி!!!

இந்துக் கடவுள்களில் முதலானவர் விநாயகர். எல்லாக் கோயில்களிலும், முதன்மையாக இருப்பரும் இவரே! இவர் இல்லாமல் எந்த பூஜையும், துவக்கப்படுவதும் இல்லை. சாணத்தைப் பிடித்துக்கூட பிள்ளையாரை உருவாக்கி அவருக்கு முதல் அபிஷேகம் மற்றும் பூஜை செய்த பின்னரே அடுத்த கட்ட வேலைகள் துவக்கப்படுகின்றன.

விநாயகரைக் கும்பிடும்போது நவக்கிரகங்களை வேண்டிய பலன் கிடைக்கிறது. அவர் உடலுக்குள்ளே நவக்கிரகங்களும் ஐக்கியம் ஆகி உள்ளன. இந்தப் பிள்ளையாரின் மகிமை வானளாவியது. பழங்காலத்தில் இருந்து தற்போதுள்ள கம்ப்யூட்டர் யுகம் வரை இவரை விதம் விதமாக உருவகம் செய்து வருகிறோம் நாம்! தமிழ்நாட்டில் இவருக்கென தனிக்கோயிலும், ஊரும் உள்ள இடம் தான் பிள்ளையார்பட்டி!

தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட கோயில் என்ற பெருமை பிள்ளையார்பட்டிக்கு மட்டுமே உண்டு. அதிலும் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட முதல் குடைவரைக் கோயில் என்ற கௌரவமும் இந்தக் கோயிலுக்கு உண்டு. குடைவரைக் கோயிலை முதன் முதலில் உருவாக்கியவர்கள் பல்லவர்கள் என்ற கூற்று பரவலாக இருந்தாலும், அவைகள் எல்லாம் மாமல்லபுரத்தில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டவை.

ஆனால் முற்காலப் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், கி.பி.2-ஆம் நூற்றாண்டில் ‘ஈக்காட்டூர் கூன் பெருபாரணன்’ என்பவர் இக்குடைவரைக் கோயிலை உருவாக்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஈக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதன்குடி, ராஜநாராயணபுரம் போன்ற பெயர்களில் தான் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி. 400-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1238 வரை, பல்வேறு கால கட்டங்களில் இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று, கோயில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்னர்தான் இந்த ஊருக்குள் இறைவன் முக்கண் முதல்வன் விநாயகப் பெருமான் வீற்றிருப்பதால் ‘பிள்ளையார்பட்டி’ என்ற பெயர் நிலைத்தது.

வடக்குதிசை நோக்கி வீற்றிருக்கும் வலம்புரி விநாயகர் இவர். இந்தக் கோயிலில் பல வியக்கத்தக்க கலை அம்சங்கள் உள்ளன. 2 கைகளுடன் கூடிய விநாயகரின் சிற்பம், அதுவும் குடைவரைச் சிற்பமாக வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்தக் கோயிலில் பூஜை செய்த பின், நாம் வேண்டிக்கொள்ளும் கோரிக்கைகள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் நடந்து வெற்றி பெறும் என்பது நிதர்சன உண்மையாக இருப்பதால், உலகெங்கிலும் இருந்து மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள செப்புச்சிலையான நடராஜரின் சிற்பத்தைத் தட்டும் போது டமார வாத்தியத்தின் இசையைக் கேட்க முடிகிறது. இது சிற்பக் கலையின் நுணுக்கத்தில் இசையையும் கொண்டு வரலாம் என்பதற்கான உறுதிச் சான்று!

கோயிலின் கிழக்கு நோக்கிய ராஜகோபுர வாசலின் வலதுபுறம் ஒரு மருதமரம் உள்ளது. இதன்கீழ் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். இவரைப் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கின்றனர். வெளிநாடு சென்று வேலை பார்க்க விண்ணப்பித்தவர்கள், தங்களது பாஸ்போர்ட்டை இந்த விநாயகரின் காலடியில் வைத்து வணங்கினால், உறுதியாக வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் பரவலாக உள்ளது. இன்று இந்துக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் படம் ஒன்று நிச்சயம் இருக்கும்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top