தீரன் காட்டும் பவேரியாக்கள்!

தீரன் காட்டும் பவேரியாக்கள்!

கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, அ(ப)வேரியா இனக்குழுவின் கொடூர கொலை, கொள்ளைகளை மையப்படுத்தியும் அவர்களை காவல்துறை வேட்டையாடுவதையும் விவரிக்கிறது. தீரன் இயக்குநர் வினோத் காட்டியிருக்கும் பவேரியாக்கள் இந்திய ஊடகங்களின் பார்வையில் மிகக் கொடூரமானவர்கள்... எந்த கொடூர பலாத்காரம், கொள்ளை நடந்தாலும் "பவேரியா கேங்" காரணம் என்று போலீஸின் பொதுப்புத்தியோடுதான் செய்தி வெளியிடுகின்றன. பவேரியாக்கள் இனக்குழுவில் ஆண், பெண் அத்தனை பேரும் கொள்ளையர்கள்- மூர்க்கர்கள் என்பதை காட்சிகளாக்குகிறது தீரன் திரைப்படம். ஆனால் இதே திரைப்படத்தில் இயக்குநர் வினோத் பவேரியாக்களின் வரலாற்றையும் பேசியிருக்கிறார். 

நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தீரன் திரைப்படத்தின் கதை விரிகிறது; இதே படத்தில் வினோத் விவரிக்கும் பவேரியா இனக்குழுவின் வரலாறு புதிய விவாத களத்தையும் உருவாக்கியிருக்கிறது. நாடு விடுதலைக்கு முன்னர் இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரையின் கீழ் பவேரியாக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் இருந்தன. இப்படியான இனக்குழுக்கள் நாடு விடுதலை அடைந்த பின்னர் இந்திய பொது சமூகத்தில் கலந்துவிட்டன. 

அப்படியானால் இந்திய ஊடகங்களின் செய்திகளின் படியும் தீரன் திரைப்படம் முன்வைக்கிற காட்சிகளின் படியுமே இன்னமும் பவேரியா இனக்குழு மட்டும் இந்திய பொதுச்சமூகத்தில் இணையாமல் வேட்டை மனிதர்களாகவே இருக்கிறார்களா? பொதுவாக இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடிகள் மீதான பொதுப்புத்தி என்பது அவர்களை காட்டுமிராண்டி மனிதர்களாகவே பார்க்கிறது.

மலைகளிலும் காடுகளிலும் பாலைவனத் தொடர்களிலும் பொதுசமூகத்தின் தொடர்புகளற்று வாழ்கிற பூர்வகுடிகளோ, நாகரிகத்தை சுமந்து வரும் மனிதர்களை தங்களை அழித்தொழிக்க வந்த பரம எதிரியாகத்தான் பார்க்கிறார்கள். ஒடிஷாவின் மலைகளில் நான் பயணித்த போது எங்கள் வாகனங்களை கண்டு தலைதெறிக்க ஓடி பதுங்கிய சிறுவர்களை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன். மின்சாரத்தை பார்த்திராத கிராமத்து குழந்தை கேமராவின் வெளிச்சம் கண்டு வீறிட்டு அலறியது இன்னமும் மறக்க முடியாது... போண்டா ஹில்ஸில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடி மக்கள் மிக கொடூரமானவர்கள்; சட்டென கோபப்பட்டு கொலை செய்துவிடுவார்கள்; கோராபுட் சிறைச்சாலைகளில் அடைபட்டே போண்டா இனமே அழிகிறது என ஏகப்பட்ட எச்சரிக்கைகளுடனேயே சந்திக்க நேர்ந்தது.. நியாம்கிரி மலை பூர்வகுடிகளை சந்திக்க போன போது, நாங்கள் ஊடகம் என்பதை அவர்கள் நம்பவே இல்லை; அவர்கள் தங்களது பாரம்பரிய மலைகளை அபகரிக்க வந்த வேதாந்தா குழுமத்தின் வேவு ஆட்களாகவே விரட்டியடித்தனர். இதுதான் யதார்த்தம். 

ஆனால் அரசும் போலீசும் இதை தலைகீழாக சித்தரிப்பது காலந்தோறும் நடந்து வருகின்றன ஒன்றுதான். ஒட்டுமொத்த பவேரியா இனக்குழுவுமே வேட்டை சமூகமாகவோ கொள்ளைச் சமூகமாகவோ இல்லை.. அவர்களது பெரும்பகுதியினர் பல மாநிலங்களில் வேளாண்குடிகளாகிவிட்டனர். இந்திய அரசும் போலீசும் கொடூரமான கொலைகளில் பவேரியா கேங் என முத்திரை குத்தி அவர்களது இனவரலாற்றை இழிபடுத்துவதில் அலாதி சுகம் காணுகின்றனர்... அதில் தீரனும் ஒன்று என்பது வருத்தத்துக்குரியதுதான். 

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான பலாத்கார சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ஒட்டுமொத்த ஊடகங்களும் பவேரியா கேங் அட்டூழியம் என இருக்கிற அத்தனை கடும் சொற்களையும் ஈவிரக்கிமின்றி பயன்படுத்தினார்கள். பவேரியாக்கள் யார்? அவர்களது பூர்வோத்திரம் என்ன? தீரன் படத்தில் வினோத் காட்டுவது போல மழை பெய்யும் காலத்தில்தான் கொள்ளைக்கு போவார்கள் என்பது உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.. ஆனால் போலீஸ் பிடித்த கேங்கில் ஒருவர்தான் பவேரியா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் என்கிற உண்மையை வன்மம் கக்க எழுதிய பேனாக்கள் எளிதாக கடந்து சென்றன. ஒரு விடுதலைப் போராட்டம் எது? ஒரு பயங்கரவாதப் போராட்டம் எது என்பதை தெரிந்தும் விளக்க மறுக்கும் வம்படியானது அல்லவா இந்திய ஊடக சமூகம். 

இந்திய துணைக் கண்டத்தை உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் கிடுகிடுக்க வைக்க இன்னமும் ஒரு சமூகம் உயிர்ப்போடு இருக்கிறது எனில் வெட்கப்பட வேண்டியது வல்லரசு முகத்திரை மூடிய நாம்தான்... பவேரியாக்களும் போண்டாக்களும் அல்ல... இந்த துணைக் கண்டத்து பூர்வகுடிகள் பொதுசமூகத்தில் கலந்து வாழாத வரை.. 70 ஆண்டுகால விடுதலை ஆட்சிக் காலத்தில் இன்னமும் மின்சாரமும் குடிநீரும் அடிப்படை கட்டமைப்பும் அவர்களுக்கு செய்து கொடுக்காமல் சொகுசு வாழ்க்கையில் அரசு கற்பிக்கும் பொதுப்புத்தியுடன் நாம் அவர்களை அணுகுவதும் ஆரோக்கியமானது அல்ல.

அந்தமானிலும் கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் பாலைவன குன்றுகளிலும் நம்மோடு இணைந்து வாழாத பவேரியாக்களோடும் போண்டாக்களோடும் இரண்டற கலந்து வாழ்வதுதான் நமது வாழ்வுக்கு அர்த்தம்... அவர்களின் குற்றங்களுக்காக நரவேட்டையாடுவதும் உயிர்களைக் குடிப்பதும் ஒருபோதும் தீர்வாகாது என்பதுதான் தீரன் சொல்லும் பாடமாக உணர முடிகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top