மாயம் செய்யும் "மகளிர் மட்டும்"!
Posted on 19/09/2017

சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மகளிர் மட்டும் படத்தின் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பள்ளிநாட்களில் கோமாதா (ஊர்வசி), ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா) மூவரும் இணை பிரியாத தோழிகள். குறும்பும் குதூகலமுமாக திரிந்த மூன்று தோழிகளின் வாழ்க்கை திசைமாறிப்போனநிலையில் ஏறக்குறைய 38 வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறார்கள். படத்தின் நாயகியான ஜோதிகா, ஃபேஸ்புக் மூலம் மூன்று தோழிகளையும் சந்திக்கவைப்பதோடு, அவர்களின் பழைய சந்தோஷத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு பயணத்துக்கும் ஏற்பாடு செய்கிறார். அந்தப் பயணத்தின்போது மூன்று தோழிகளின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வும்.. நெகிழ்வுமே 'மகளிர் மட்டும்'.
இந்தப் படத்தைப் பார்க்கும் பெண்கள் நிச்சயமாக தங்களின் பள்ளிப்பருவ தோழிகளை தேடத்தொடங்குவார்கள் என்று தோன்றியது. அதுபோலவே தற்போது சம்பவங்கள் நடந்தேறி வருவதாக தகவல்கள் வருகின்றன. மகளிர் மட்டும் படத்தை பார்த்துவிட்டு திருமதி. வசந்தி என்ற பெண்மணி படத்தில் வருவதுபோலவே தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா? என்று சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம். கூடவே பள்ளிக்காலத்தில் தன்னுடைய தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அனுப்பி வைத்திருக்கிறாராம்.
திருமதி. வசந்தியைப் போலவே மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலரும் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை மீண்டும் சந்திப்பதற்காக முகநூலை மொய்த்து வருவதாகவும் தகவல்.
Tags: News, Hero, Star