தெரு சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை - பண்டிகை

தெரு சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை - பண்டிகை

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.

அங்காடி தெரு படத்தை போல படம் முழுக்க வரும் ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் எனக்கு கொடுத்தொருக்கிறார் இயக்குனர் ஃபெரோஸ். என் கேரியரில் அடுத்த கட்டத்துக்கு கூட்டி செல்லும் படமாக இருக்கும். கிருஷ்ணா சாருடன் கிரகணம், பண்டிகை உட்பட மூன்று படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன், அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்றார் நடிகர் பிளாக் பாண்டி.

பண்டிகை படத்தின் போஸ்டர், மற்றும் டீசர் பார்த்தவுடன் தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்துடன் என் பயணத்தை துவக்கினேன். படத்தை வாங்கும் போது யாரும் போட்டுக் காட்ட தயங்குவார்கள். ஆனால் விஜயலக்‌ஷ்மி, ஃபெரோஸ் படத்தை போட்டுக்காட்டி, என் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டனர். கிருஷ்ணாவின் கேரியரில் கழுகு, யாமிருக்க பயமேன் படங்கள் என்ன பெயரை பெற்றுத் தந்ததோ அதை இந்த படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஃபெரோஸ் ஒரு ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் எங்கள் பேனருக்கு அடுத்த படத்தை இயக்கி தர வேண்டும். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரித்த விஜயலக்‌ஷ்மிக்கு பாராட்டுக்கள். படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்ல எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம் என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ்.

முதலில் ஃபெரோஸ் வேறு ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு பொறாமையாக இருந்தது. அப்புறம் தான் ஒரு நாள் விஜயலக்‌ஷ்மி என்னை ஹீரோவாக நடிக்க கூப்பிட்டார். என் வாழ்க்கையில் முதல் முறையாக முதல் பாதி இயக்குனர் ஃபெரோஸ் சொன்னார், இரண்டாம் பாதியை தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி சொன்னார். சிக்ஸ் பேக் எதுவும் வைக்க தேவையில்லை என ஃபெரோஸ் சொன்னார். வழக்கமாக நடிப்பது மாதிரி நடிக்க கூடாது என என்னை ரொம்ப டார்ச்சர் செய்து விட்டார். விஷ்ணுவர்தனுக்கு பிறகு என்னை அதிகம் டார்ச்சர் செய்தது ஃபெரோஸ் தான். நாயகிகளுக்கு கண்கள் எப்போதுமே அழகு. ஆனந்திக்கும் அது பெரிய பிளஸ். மாயா வரைக்கும் மகேஷ் பல படங்களை சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த படத்தையும் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன் என்றார் நாயகன் கிருஷ்ணா.

நான் நடிக்க போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பம் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் எல்லோரும் வேண்டாம் என அறிவுரை கூறினர். கிருஷ்ணா என் நண்பன், படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறான். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களிடையே ஒரு பெரிய போட்டியே இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பான, தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள். எங்களை விட ஆரா சினிமாஸ் மகேஷ் தான் மிகவும் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசை என்றார் தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி.

நிறைய ஹீரோக்களிடம் கதையை சொல்லியிருக்கிறேன், எல்லாம் ஓகே ஆகினாலும் படத்தை தொடங்கவே முடியவில்லை. அப்போது தான் படத்தை நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் தான் இந்த கதைக்கு வேண்டும் என முன்பே முடிவு செய்தேன், அது சாத்தியமானது. தெரு சண்டையை மையமாக கொண்ட கதை என்பதால் ஸ்டண்ட் மாஸ்டரின் வேலை ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது, அதை அன்பறிவ் சிறப்பாக செய்து கொடுத்தனர். படத்தை முழுதாக பார்ப்பதற்கு முன்பே நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த ஆரா சினிமாஸ் மகேஷ் சாருக்கு நன்றி. படத்தை அவர் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன். நிறைய பேர் டீசர், டிரைலர் பார்த்து விட்டு ஃபைட் கிளப் படத்தின் காப்பியா என கேட்கிறார்கள். இது தெரு சண்டையை மையமாக வைத்து சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சென்னை அண்ணா நகரில் நான் பார்த்த இரண்டு கேங் சண்டை போடுவார்கள். அவர்கள் எதிர்கள் கிடையாது, சண்டை முடித்து விட்டு நண்பர்களாக கிளம்பி செல்வார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். அது தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றார் இயக்குனர் ஃபெரோஸ்.

நடிகர் நிதின் சத்யா, நாயகி கயல் ஆனந்தி, எடிட்டர் பிரபாகர், கலை இயக்குனர் ரெமியன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top