இருமுகன் படம் எப்படி இருக்கு?

இருமுகன் படம் எப்படி இருக்கு?

’அரிமா நம்பி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ஆனந்த சங்கர், என்ற மெகா நட்சத்திரமும் மிகச் சிறந்த நடிகருமான விக்ரம் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை வேடங்களில் அதுவும், நாயகன் மற்றும் வில்லனாக நடித்திருப்பதாலும் ட்ரைலரில் வெளிப்பட்ட ஸ்டைலிஷான மேக்கிங்காலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை விமர்சனத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
 
மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முதியவர் ஒருவரின் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அந்த முதியவரின் கழுத்தில் இருக்கும் சின்னத்தை வைத்து ரசாயன மருந்துகளை வைத்து போருக்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் சர்வதேசக் குற்றவாளி லவ் (விக்ரம்) என்பவன்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று ஊகிக்கிறது இந்திய உளவுத் துறை அமைப்பான ‘ரா’.
 
அந்த லவ் என்பவனை முன்னாள் ரா அதிகாரியான அகிலன் (விக்ரம்) மற்றும் அவனது காதலியும் மற்றொரு ரா அதிகாரியுமான மீராவைத் (நயன்தாரா) தவிர வெளியுலகத்தினர் யாரும் இதுவரை பார்த்ததில்லை. எனவே லவ்வைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்க, அகிலன் மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறான். ரா அமைப்பில் பணியாற்றும் ஆருஷி (நித்யா மேனன்) அவனுடன் அனுப்பப்படுகிறாள். மலேசியக் காவலத் துறை இவர்களுக்கு உதவுகிறது.

தனது ஆற்றலையும் இந்த உதவிகளையும் வைத்து லவ்வைக் கண்டுபிடித்து வீழ்த்தும் முயற்சியில் அகிலன் வெற்றிபெற்றனா இல்லையா என்பதே மீதிக் கதை.
 
அண்மைக் காலங்களில் இத்தனை ஸ்டைலிஷான படம் ஒன்றைப் பார்த்ததில்லை. அந்த வகையில் ‘அரிமா நம்பி’ படத்தைப்போலவே இதிலும் அசத்திவிட்டார் ஆனந்த சங்கர். படத்தில் அறிவியல் கோட்பாடுகள் குறிப்பாக வேதியியல் மற்றும் மனித உயிரியல் சார்ந்த கோட்பாடுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அவற்றைத் தக்க உதாரணங்களுடன் தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இந்த இளம் திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆனந்த் சங்கர்.
 
முதல் பாதி தொடக்கத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும் களம் மலேஷியாவுக்கு நகர்ந்தவுடன் திரைக்கதை சூடுபிடிக்கத் தொடங்குகிறது. லவ்வை அகிலன் படிப்படியாக நெருங்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விதத்தில் ரசிக்க வைக்கின்றன. சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன. குறிப்பாக லவ் பயன்படுத்தும் ’ஸ்பீட்’ என்னும் ஊக்க மருந்தின் பின்னணியும் அதன் செயல்பாடுகளும் விளக்கப்படும் காட்சி படத்தின் மிகச் சிறந்த காட்சி என்றே சொல்லிவிடலாம்.
 
முதல் பாதியின் முடிவில்தான் லவ் கதாபாத்திரம் திரையில் வருகிறது. ஆனால் அதுவரை அந்தப் பாத்திரத்துக்குக் கொடுக்கப்படும் பில்டப்புகளே திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கின்றன.
 
சஸ்பென்ஸ், விக்ரம்மின் ஆக்ஷன் காட்சிகள் என பரபர வென்று நகரும் முதல் பாதியில் அவ்வப்போது வரும் காதல் காட்சிகளும் பாடல்களும் மட்டுமே வேகத் தடைகளாகச் செயல்படுகின்றன.
இடைவேளைக் காட்சியில் ஒரு ஊகித்திருக்கவே முடியாத ட்விஸ்ட் ’அட’ போட வைப்பதோடு இரண்டாம் பாதி மீதான பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.
 
இவ்வளவு எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டுத் தொடங்கும் இரண்டாம் பாதி சில காட்சிகளில் மந்தமடைந்துவிடுகிறது. முதல் பாதியில் வெளிப்பட்ட சுவாரஸ்யமான ஐடியாக்களும். ஆச்சரியங்களும் இரண்டாம் பாதியில் பெரிதும் குறைந்துவிடுகின்றன. இரண்டாம் பாதியின் ஒவ்வொரு நகர்வும், லாஜிக்  என்ற ஒன்றை சுத்தமாக மறந்துவிட்டு உருவாக்கப்பட்டதுபோல் இருக்கின்றன. இந்தக் காட்சிகளெல்லாம் லாஜிக்கை நாமும் மறந்துவிட்டு ரசிக்கவைக்கும்படி சுவாரஸ்யமாக இருக்கின்றனவா என்றால் அப்படியும் இல்லை. குறிப்பாக, சிஐஏ இணையதளத்தில் இருக்கும் தகவல்களைப் பார்ப்பது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் என்று சொல்ல வைக்கின்றன.
 
இடைவேளையில் வரும் ட்விஸ்ட்டின் பின்னணி இரண்டாம் பாதியில் விவரிக்கப்பட்ட விதம் அதைத் தொடர்ந்து ஏற்படும் இன்னொரு முக்கியமான மாற்றம் ஆகியவை சித்தரிக்கப்பட்டவிதம் நம்பகத்தன்மையுடன் இல்லை. கதை இப்படி மாற வேண்டும் என்று திரைக்கதை எழுதியவர் விரும்பியதால் மாறிவிட்டது போல் இருக்கின்றது.
 
படம் முழுக்க மலேசியப் போலீஸின் சித்தரிப்பு, அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் கொல்லப்படும் விதம், அதைத் தொடர்ந்து நடப்பவை எல்லாம் லாஜிக்கும் இல்லாமல் சுவாரஸ்யமும் இல்லாமல் தத்தளிக்கின்றன. முதல் பாதியிலும் லாஜிக் மீறல்கள் இருக்கின்றன ஆனால் அதை மறக்கவைக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. இரண்டாம் பாதியில் அது இல்லை.
இந்தச் சிக்கல்களை எல்லாம் மீறி, ஆக்ஷன் காட்சிகள், விக்ரம்மின் நடிப்பு, ஹீரோ-வில்லன் என்று இரண்டாகவும் விக்ரமே இருப்பது ஆகியவற்றால் படம் அலுப்பு ஏற்படுத்தாமல் நகர்கிறது.
 
படத்தை குறிப்பாக இரண்டாம் பாதியை தோளில் சுமப்பது விக்ரம் தான். ஆழ்ந்த அறிவியல் அறிவு, ஈர மற்ற மனம், பெண்தன்மை ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச குற்றவாளி லவ்வாக அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டெப், மேக்கப் என அனைத்தும் கச்சிதமாக இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பி செய்யவதுபோல் தோன்றினாலும் அது நடிகரின் தவறல்ல. அந்த கதாபாத்திரத்தில் அதற்கு மேல் சிறப்பாக ஒன்றுமில்லை.
 
தன்னளவிலேயே சிறப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட லவ் பாத்திரத்தைவிட வழக்கமான கதாநாயகன் பாத்திரமான அகிலனாகவே தன் தனித்தன்மையும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் விக்ரம். விதிகளை மீறும் துடிப்பு, குற்றவாளிகளை இரக்கமற்ற முறையில் கையாளும் வேகம், வாழ்வில் ஏற்பட்ட இழப்பால் அனைத்தின் மீதும் ஒரு விதமான அலட்சியம் ஆகியவற்றைக் கொண்ட ரா அதிகாரியை மிகச் சிறப்பாக கண் முன் நிறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். காதல் காட்சிகளில்தான் கொஞ்சம் செயற்கையாகத் தெரிகிறார்.
 
நயன்தாரா ஸ்டைலிஷான, சஸ்பென்ஸ் நிறைந்த வேடத்தில் வழக்கம்போல் கவர்கிறார். ஆனால் அவரது பாத்திரத்துக்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.  நித்யா மேனன் மனிதத்தன்மைமிக்க ரா அதிகாரியாக தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் அவரது பாத்திர வார்ப்பிலும் பெரிதாக ஒன்றும் இல்லை.
 
ஒரே ஒரு நெடிய காட்சியில் வரும் கருணாகரன் தான் எப்படிப்பட்ட பாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நடிகர் என்பதை நிரூபிக்கிறார். தம்பி ராமையா முதல் பாதியில் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் ஒரு ரா அதிகாரிக்கு உதவுவதற்காக அனுப்பப்படும் மலேசியக் காவல்துறை அதிகாரி இப்படி காமெடியன் போல் நடந்துகொள்வாரா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நாசர் வழக்கம் போல் தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரத்தில் நிறைவாக நடித்துவிட்டுச் செல்கிறார்.
 
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பு உணர்வைக் கூட்டுவதோடு சரி. வேறெதுவும் சிறப்பாக இல்லை. பாடல்கள் வேகத் தடைகளாக மட்டுமே வந்து செல்கின்றன. ஹலேனா பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கின்றன.
 
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கு சிறப்பான ஸ்டைலிஷ் தன்மையையும் பளபளப்பையும் தந்திருக்கிறது. புவன் ஸ்ரீநிவாசனின் படத்தொகுப்பு கச்சிதம்.  அன்பரிவ் மற்றும் ரவி வர்மாவின் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பு படத்தின் மிகப் பெரிய பலம்.
 
மொத்தத்தில் ஆர்வத்தைத் தூண்டும் முதல் பாதி, ஸ்டைலிஷான மேக்கிங், விக்ரமின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றுக்காக இந்த இருமுகனைப் பார்க்கலாம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top