இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன்

இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது,
 
இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்.
 
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,
 
நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
 
நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேற்த்தியான திறமைக்காரர் திரு.
 
இப்படம் குடும்ப பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.
 
நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம்.
 
என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’ நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
 
சண்டைப் பயிற்சி காசி தினேஷ் பேசும்போது,
 
சிம்புவுடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிலும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளில் சிம்புவின் ஒத்துழைத்ததால் தான் நன்றாக வந்துள்ளது என்றார்.
 
வசனகர்த்தா பாலாஜி கேசவன் பேசும்போது,
 
இயக்குநர் சுசீந்திரனுடன் ‘தீபாவளி’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தை திரையில் காணும்போது தான் பல விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று தோன்றியது. இந்த வாய்ப்பு கொடுத்த சுசீந்திரனுக்கு நன்றி என்றார்.
 
நடிகர் பாலசரவணன் பேசும்போது,
 
எனக்கு மிக மிக முக்கியமான படம் ‘ஈஸ்வரன்’. அதற்கு இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. ஒரே நேரத்தில் 3 படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
 
எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசக் கூடியவர் சிம்பு. அனைவரிடமும் ஒரே பேச்சு ஒரே முகம் தான். ஒரு நாள் படப்பிடிப்பில் அன்பைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவர் கொடுத்ததால் தான் இன்று அவருக்கு கிடைத்திருக்கிறது என்றார்.
 
நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது,
 
சினிமாத் துறைக்கு வரும்போது அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு இருந்தது. அது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
 
அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது,
 
சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் போகவே மாட்டார் என்றார்.

தயாரிப்பாளர் பாலாஜி கபா பேசும்போது,
 
இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதிலும் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி கூற வேண்டும். மிகவும் நேர்மையானவர். அவர் கூறியது போல் 28 நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுத்தார்.
 
சிம்புவைப் பற்றி கூற வேண்டுமென்றால் அவரை நான் இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன பேசுவாரோ அப்படிதான் அவருடைய செயலும் இருக்கும். சிம்புவிற்கு நன்றி என்றார்.
 
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது
 
சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.
 
ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.
 
சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.
 
இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.
 
நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.
 
இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி.
 
இப்படத்தில் சிம்னடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் KV துரை.
 
நடிகர் சிம்பு பேசும்போது..
 
முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த படம் எப்படி விரைவாக முடிந்தது என்று. ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர். இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மனைஉளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
 
என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைதான் நான் செய்தேன்.
 
கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும்.
 
‘ஒஸ்தி’ படத்திற்கு தமன் இசையமைத்தார். இரவு பகலாக போனிலேயே பேசி பணியை முடித்துக் கொடுத்தார். நந்திதா ஸ்வேதா, நிதி அகர்வாலுக்கு நன்றி.
 
பாரதிராஜா அப்பாவை பார்க்கும்போது எனக்கு பெரிய சக்தி கிடைத்தது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இப்படத்தில் எனக்கும் பாலசரவணனுக்கும் நல்ல வைபரேஷன் இருக்கும்.
 
ஒளிப்பதிவைப் பார்க்கும்போது தெய்வீகமாக இருக்கிறது. வசனம் நன்றாக எழுதியிருக்கிறார்.
 
என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.
 
இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாக கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் என்றார்.
 
விழாவின் இறுதியாக 'ஈஸ்வரன்' படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.  

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top