உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி வெளியீட்டு தேதி அறிவிப்பு
Posted on 18/04/2022

நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'கனா' என்ற படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :நெஞ்சுக்கு நீதி'. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் ஆரி அர்ஜுனன், இளவரசு, ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை பொலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசை அமைத்திருக்கிறார்.
'நெஞ்சுக்கு நீதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் மே மாதம் 20ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் என்பதால் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Tags: Hero