வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?!

வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?!

தீ-தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்-ஓடிக்கொண்டே இரு = தீரன் என்று வார்த்தைகளால் எளிதாக விளக்கிவிட முடியும், தீரன் பட அனுபவத்தை. ஆனால் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சியால், உதடுகள் பாலம் பாலமாக வெடித்து உடல் உபாதைகளுக்கு ஆளாகி உழைத்த உழைப்பு, இன்று திரைப்படம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி. அந்தக் கடின அனுபவங்களை இனிய நினைவுகளாக மாற்றியிருக்கிறது என்கிறார், தீரன் படத்தில் நடித்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வரும் போஸ்வெங்கட்.

முன்னேற்பாடுகளுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் எங்களுக்கே இந்தக் கதியென்றால், நிதர்சனமாக களத்தில் நின்ற காவல் துறை அதிகாரிகளை நினைக்கும்போது, மனம் கனக்கிறது. அவர்களது அர்ப்பணிப்பும், தியாகமும் ஈடுஇணை இல்லாதது, அவர்கள் அனைவருக்கும் முன்னால் நின்று நூறு சல்யூட் அடிக்கவேண்டும் என்று நெகிழ்கிறார், போஸ்.

திரையில் உண்மையான முகங்களை வெளிக்கொண்டு வர போராடிய இயக்குனர் ஹெச்.வினோத்தின் சுத்தமான வெற்றி இது. இயக்குநர் உண்டாக்கிய அந்த உடலில் புகுந்த விக்ரமாதித்யன் கார்த்தி சார். மூச்சுவிட முடியாத, பாலைவனத்தின் சுடுமணலில் மறைந்திருக்கும் அந்த ஒரு ஷாட் போதும், கார்த்தி சாரின் உழைப்புக்கு ஒரு சோறு பதம்.

ஒரு ஆட்டோ டிரைவராக இருந்து, தொழில் முறையில் நடிப்பு பயின்று நடிகரான போஸ் வெங்கட். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு சங்கர், கேவி.ஆனந்த், பிரபுசாலன், சுந்தர்.சி போன்ற பெரிய இயக்குநர்கள் பாராட்டி தொடர்ந்து தனக்கு வாய்ப்பளித்து வருவதாக சொல்கிறார். பலப் படங்களில் வில்லன்களுக்கு டப்பிங் பேசிவரும் இவர், வீரம் படத்தில் அதுல்குல்கர்னிக்கும், என்னையறிந்தால் ஆசிஷ்வித்யார்த்திக்கும் தன்னுடைய குரலால் வலு சேர்த்தவர். குரலாக அஜித் சாருடன் நடித்துக் கொண்டிருக்கும் நான் விரைவிலேயே அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெறுவேன், என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

தீரன் தனக்கான மற்றுமொரு பெருவாசலை திறந்திருப்பதாகவும், சுசீந்திரன், பிரபுசாலமன் ஆகியோர் தற்போது இயக்கிவரும் படங்களில் மிக முக்கியமான கதாப்பாத்திரம் கிடைத்திருப்பது தனக்கான அடுத்த இடத்தை உறுதி செய்திருப்பதாகவும் சொல்கிறார். பெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்மண், சொந்தமகனுக்கு திறக்காமல் போகுமா? என்று மறைமுகமாக தன் ஆதங்கத்தைச் சொல்லி முடிக்கிறார் போஸ்வெங்கட்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top