கொரோனாத் தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படுமா?

கொரோனாத் தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படுமா?

உலக நாடுகளில் உள்ள பலரும் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுமா? என்றும், அதன் பாதிப்பு இரண்டாவது அலையைப் போல் வீரியமாக இருக்குமா? என்றும் கவலையுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். வேறு ஒரு பிரிவினரோ, கொரோனா தொற்று பாதிப்பு பின்னர் ஏற்பட்டிருக்கும் உடல் சோர்வு, தலைவலி, நெஞ்சு வலி, சமச்சீரற்ற இதயத்துடிப்பு, உறக்கமின்மை, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு எம்மாதிரியான சிகிச்சை பெற்று, இயல்பு நிலைக்கு மாறுவது என்பது குறித்த கவலையுடன் இருக்கிறார்கள். வேறு ஒரு பிரினரோ கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகத்துடனும் இருக்கிறார்கள். இவர்களின் அச்சங்களைக் களைய சென்னையை சேர்ந்த மருத்துவ நிபுணரான டாக்டர். S.பாலமுருகன், M.D.,DNB., அவர்களைச் சந்தித்தோம்.

கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படுமா..?
 
ஏற்படும். ஆனால் அதற்கான வாய்ப்பும், சதவீதமும் மிகவும் குறைவு. அதற்கு முன் கொரோனா தொற்று பாதித்தவருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மருத்துவ ரீதியாக எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம், தொற்று பாதிப்பு உறுதி செய்து கொண்ட பின்னர், அன்றைய திகதியிலிருந்து 102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டும்தான் அவருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பாற்றல், அவருடைய உடலில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 8 மாதம் வரை இயங்கு தன்மையுடன் இருப்பதாகவும், இதன்போது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள நினைவாற்றல் செல்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டால், அவை தானாகவே சைட்டோகைன்ஸ் என்ற நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரசை தாக்கி அழிக்கிறது. இதனால் ஒருமுறை கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் ஓராண்டு வரை உடலில் செயலாற்றும் தன்மையுடன் நீடிக்கக்கூடும் என்பதாகவும், கொரோனாத் தொற்று பாதித்தவர்களுக்கு மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் அவர்களுடைய உடலில் வைரசுக்கு எதிரான நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. இதனால் ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பிறகு, மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வின்படி கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆயிரம் நபர்களில் ஆறு பேருக்கு மட்டுமே மிக குறைந்த அளவிலான கொரோனாத் தொற்று பாதிப்பு பாதித்து மீண்டும் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் சிகிச்சையின் மூலமாக விரைந்து குணமடைந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, அவர்களுடைய உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் அவர்களை மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் 80 சதவிகிதம் வரை பாதுகாப்பு அளிக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி தொடர்ந்து முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது போன்ற கொரோனா பரவல் தடுப்பு முறைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைத்த கால அவகாசத்தில் இரண்டு தடவைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறு மிக மிக மிக குறைவு.
 
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பிறகும் காய்ச்சல் தொடர்வது ஏன்..?
 
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகும் சிலருக்கு காய்ச்சல் தொடர்ந்து இருக்கிறது. முதலில் எம்முடைய உடலின் வெப்பநிலை 98.4 F என்ற சராசரி அளவில் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எம்முடைய மூளை பகுதியில் அமைந்துள்ள ஹைபோதாலமஸ் என்ற கட்டுப்பாட்டு அறை ( Thermostat Centre) உள்ளது. எம்முடைய உடலின் வெப்ப நிலையை பராமரிப்பது தான் இவற்றின் பிரதான பணி. பொதுவாக எம்முடைய உடலில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அதனை கண்டறிந்து தாக்கி, அழிப்பதற்காக எம்முடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் சைட்டோகைன்ஸ் என்ற நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி, உடலில் உட்புகுந்து உள்ள வைரஸைத் தாக்கி அழிக்கிறது. இதன்காரணமாக எம்முடைய உடலின்வெப்பநிலை, இயல்பான வெப்ப நிலையை விட கூடுதலாக உயர்கிறது. இதன் காரணமாக உடலில் வைரஸ் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாததால் அவை அழிகிறது. இந்த சைட்டோகைன்ஸ் என்ற திரவம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்ற கட்டுப்பாட்டு அறைக்கு, உடலின் வெப்பநிலை அளவை 98.4 F லிருந்து 100 அல்லது 102 F என்ற அளவிற்கு உயர்த்தி அமைத்துவிடும். உடனே எம்முடைய உடலின் இயல்பான வெப்பநிலை இதுதான் என்று மூளை உணர்ந்துகொண்டு, அதனை பராமரிக்க தொடங்கும். இதன் காரணமாகத்தான் எம்மில் சிலருக்கு தொற்று பாதிப்பு குணமடைந்த பிறகு உடலில் காய்ச்சல் தொடர்கிறது. ஆனால் நன்றாக ஓய்வு, சத்தான உணவும், தேவையான தண்ணீரையும் அருந்திய பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இதற்கு குறைந்தபட்சம் இரண்டு வார காலம் முதல் ஒரு மாத காலம் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். அதன்பிறகு எம்முடைய உடலின் வெப்பநிலை இயல்பான அளவான 98.4 Fக்கு மாறிவிடும். எனவே கொரோனாத் தொற்றிற்குப் பின்னரான காய்ச்சல் குறித்து கவலை அடைய தேவையில்லை. அதே தருணத்தில் உங்களுடைய உடலின் வெப்பநிலை தொற்று பாதிப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு பிறகு திடீரென்று உயர்ந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் அவை வேறு வகையினதான தொற்றின் காரணமாகவும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும்.
 
கொரோனாத் தொற்று பாதிப்பு குணமடைந்த பிறகும் இருமல் தொடர்கிறதே ஏன்..?
 
கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் சிலருக்கு அவர்களின் நெஞ்சக பகுதியில் சளி இருக்கக்கூடும். கொரோனாத் தொற்று பாதிப்பின் போது எம்முடைய நுரையீரல் பகுதி பாதிக்கப்படுவதால், அங்கு தங்கும் நச்சுக் கழிவுகள் சளியாக மாறும். அதனை வெளியேற்றுவதற்கு எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், பயன்படுத்தும் வழக்கமான உத்திதான் இந்த இருமல் இருமலின் மூலம் சளி வெளியேற்றப்படுகிறது. வேறு சிலருக்கு தொற்று பாதிப்புக்கு பின்னர் வறட்டு இருமல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், தொற்று பாதிப்பின்போது எம்முடைய தொண்டை மற்றும் அதன் பகுதியைச் சார்ந்த நரம்புகள் இயல்பான தன்மையை விட கூடுதலாக தூண்டப்படும். இதன் காரணமாக அவை இறுக்கமடைந்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும். இவை இயல்பு நிலையில் மீள்வதற்காக இத்தகைய வறட்டு இருமல் வரக்கூடும். வேறு சிலருக்கு கொரோனாத் தொற்றுப் பாதிப்பின் போது ஏற்பட்ட சளி, மூச்சுப் பாதையில் தங்குவதால் மூச்சுக்குழாய் இயல்பான அளவைவிட சுருங்கி விடும். இவை மீண்டும் இயல்புத்தன்மை பெறுவதற்காகவும் இருமல் வரக்கூடும். இதிலிருந்து முழுமையான நிவாரணம் பெற, இயல்பான அளவைவிட கூடுதலாக தண்ணீர் அருந்துவதையும், மருத்துவரின் ஆலோசனையுடன் நீராவிப் பிடிப்பதும் சரியான நடைமுறை. ஆனால் கொரோனாத் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகும் இருமல் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது இருமல் ஏற்படும் போது அதிலிருந்து வெளியேறும் சளி இயல்பான தன்மையை விட வேறு நேரத்தில் குறிப்பாக பிங்க் நிறத்தில் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9952281684 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top