புற்றுநோயை கண்டறியும் நவீன பரிசோதனை!

புற்றுநோயை கண்டறியும் நவீன பரிசோதனை!

உலகத்தில் புற்றுநோயிற்கு மட்டும் தான் இன்றுவரை முழுமையான சிகிச்சை முறைகள் கண்டறியப்படவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தற்போது புற்றுநோயை தொடக்க நிலையிலேயே எந்தவித வலியுமில்லாமல் கண்டறிய முடியும் என்று மருத்துவத்துறை எடுத்துரைக்கிறது. இது குறித்து இத்துறையில் வல்லவரும், மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் சிறப்பு நிபுணராக பணியாற்றி வருபவருமான Dr.R.ராஜ்குமார் அவர்களை சந்தித்தோம்.

புற்றுநோயை கண்டறிவதற்கு அறிமுகமாகியிருக்கும் நவீன பரிசோதனையைப் பற்றி..?

கடந்த நூறு ஆண்டுகளாக புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவருடைய உடலில் இருந்து சதை அல்லது திசுவை எடுத்து, அதை பல்வேறு நிலைகளில் பரிசோதித்து புற்றுநோயினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்துவோம். அதனைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளையும் நிர்ணயிப்போம். இம்மாதிரியான தருணங்களில் பரிசோதனைக்காக சதைகளை எடுப்பதில் ஏராளமான இடர்பாடுகள் இருந்தது. உதாரணத்திற்கு ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால், அவரை மருத்துவமனையில் அனுமதித்து, மயக்க மருந்து கொடுத்து, கபாலப் பகுதியில் சத்திர சிகிச்சை செய்து, அதை திறந்து கட்டியை கண்டறிந்து பின்னரே அதிலிருந்து சிறிதளவு திசுவினை பரிசோதனைக்காக எடுக்க இயலும். பின்னர் அதனை பரிசோதனைக்கு அனுப்பி புற்றுநோயின் பாதிப்பையும் வீரியத்தையும் அறிந்து கொள்வோம். இந்த சத்திர சிகிச்சை முழுமையாக குணமடைந்த பிறகுதான் புற்று நோயிற்கான சிகிச்சையை அளிக்க இயலும்.

அதே போல் வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் பாதித்திருந்தால் எண்டாஸ்கோப்பி வழியாகவும், நுரையீரலில் புற்றுநோய் பாதித்திருந்தால் பிராங்கோஸ்கோப்பி வழியாகவும் திசுக்களை எடுத்து, அதனை பரிசோதனைக்கு அனுப்பி புற்றுநோய் பாதித்திருத்திருக்கிறதா? இல்லையா? என்பதையும், பாதித்திருந்தால் அதன் நிலையை குறித்தும் தெரிந்துகொண்டு அதற்குரிய சிகிச்சையை அளிப்போம்.

அதாவது இதுவரை புற்றுநோயைக் கண்டறிய ஊசி மூலமாகவோ, ஸ்கோப்பி மூலமாகவோ, சத்திர சிகிச்சை மூலமாகவோ அல்லது கட்டிகளை நீக்கியோ தான் கண்டறிந்தோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி சர்க்கரை நோயை சாதாரண ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறிகிறோமோ அதே போல் மரபணு சோதனை மூலம் புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை முறை அறிமுகமாகியிருக்கிறது.

இவ்வகை சோதனையின்போது நோயாளியிடமிருந்து பத்து மில்லி லிட்டர் அளவிற்கு இரத்தத்தை பரிசோதனைக்காக எடுப்பார்கள். அதனை மரபணு சோதனைக்கு உட்படுத்துவார்கள்.

இதன்போது சேகரிக்கப்பட்ட இரத்தத்தில் உள்ள மரபணுக்களை சோதனைக்கு உட்படுத்தி கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், மூளை புற்றுநோய், கணைய புற்றுநோய் என எவ்வகையினதான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை துல்லியமாக கண்டறிய இயலும்.

இந்த வகை பரிசோதனையினால் கிடைக்கக்கூடிய பலன் என்ன?

இவ்வகை மரபணு சோதனையில் எம்மால் பல விஷயங்களை தெரிந்து கொள்ள இயலும். புற்றுநோய் எங்கு பாதித்திருக்கிறது என்பதை மட்டும் அறிந்து கொள்ளாமல் அவை எவ்வகையான சிகிச்சைக்கு கட்டுப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள இயலும். உதாரணத்திற்கு ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், அதிலேயே கீமோதெரபிக்கு இவை கட்டுப்படும் என்பதையும் கண்டறிந்து கீமோதெரபி சிகிச்சையைப் பெற்று முழுமையான நிவாரணத்தையும் பெற இயலும்.

அதேபோல் கீமோதெரபியும், கீமோதெரபிக்கான மருந்துகளும் கொடுத்த பின்னர் அவர் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படுவாரா? மாட்டாரா? என்பதையும் இவ்வகையினதான மரபணு சோதனையின் மூலம் கண்டறியலாம். இந்த சோதனையை Minimal Residual Disease Detection என்று கூறுவர். இதன் போது ஒருவருக்கு உடலில் புற்றுநோய் பாதித்திருப்பதற்கான அறிகுறி இல்லையென்றாலும், பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலவில்லை என்றாலும், புற்றுநோயை உருவாக்கும் செல்கள் மரபணுவில் இருக்கிறது என்பதை இந்த சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனால் இவருக்கு மீண்டும் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புண்டு என்று கூறலாம்.

எனவே இத்தகைய நவீன மரபணு பரிசோதனைகள் மூலம் வலியற்ற முறையில் புற்றுநோய் பாதிப்பை அறியலாம். அத்துடன் அவற்றை கட்டுப்படுத்தும் மருந்து மற்றும் சிகிச்சைகளையும் அறியலாம். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு உருவாகுமா? ஆகாதா? என்பதையும் அறியலாம்.

அதே போல் Hereditary Cancer Panel Test என்ற பரிசோதனையின் மூலம் புற்றுநோயின் பாதிப்பு ஏதுமில்லாதவர்கள் கூட அவர்களின் பரம்பரையில் எவரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் வழியாக இவர்களுக்கும் அந்த பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது தாயிற்கு மார்பக புற்றுநோய் இருந்தால் அவரது பிள்ளைகளுக்கு முப்பத்தைந்து வயதிற்கு பின்னர் மார்பக புற்றுநோய் பாரம்பரிய மரபணு குறைபாடு என்ற காரணத்தில் வருமா? வராதா? என்பதையும் இந்த சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மார்பக புற்றுநோயை மட்டுமல்ல ஓவேரியன் கான்சர் என்று சொல்லக்கூடிய புற்றுநோயைக்கூட கண்டறிந்து தற்காப்பு சிகிச்சைகளையும், முறையான சிகிச்சைகளையும் எடுத்து புற்றுநோயின் பாதிப்பில்லாமல் வாழ இயலும்.

இத்தகைய பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை குணப்படுத்துவது என்பது எளிதாகிறது. புற்றுநோயை குணப்படுத்த தற்போது கீமோதெரபி, சத்திர சிகிச்சை, ரேடியேசன் தெரபி என நவீன சிகிச்சை முறைகளும் பக்கவிளைவற்ற சிகிச்சை முறைகளும் அறிமுகமாகியிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 9677722024 மற்றும் மின்னஞ்சல் முகவரி drraj12319@gmail.com

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top