குடல் இரைப்பை நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள்!

குடல் இரைப்பை நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள்!

 மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கேஸ்ட்ரோஎன்டராலாஜி துறை மருத்துவர் Dr.A.C.அருண், குடல் மற்றும் இரைப்பை பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்கிறார்.

* நெஞ்செரிச்சலுக்குரிய தீர்வு என்ன?
அல்சர் பாதிப்பிற்கும், இதய பாதிப்பிற்கும் நெஞ்செரிச்சல் ஒரே அறிகுறியாக இருப்பதால் ஏராளமானவர்களுக்கு குழப்பம் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு நெஞ்சடைப்பது போன்ற உணர்வு இருக்கும். இவை சாதாரண வாய்வு தொல்லை என்று கருதி பெரும்பாலானோர் மருந்து கடைகளில் இதற்கான மருந்துகளை கேட்டு வாங்கி சாப்பிட்டு நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். ஆனால் இது தவறு. நெஞ்செரிச்சல், நெஞ்சடைப்பு, நெஞ்சில் சிறிய வலி ஆகியவை தோன்றினால் உடனடியாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதுதான் சரியான தீர்வு.  

*‘ஃபேட்டி லீவர்’ இது ஆரோக்கியமான போக்குதானா? 
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அதாவது ஓபிசிட்டி என்ற குறிப்பிட்டவர்களுக்குத்தான் இந்த ஃபேட்டி லீவர் (Fatty Liver) பொதுவானதாக காணப்படுகிறது. அதாவது உடலில் கூடுதலாக இருக்கும் கொழுப்பு சத்துகள் கல்லீரலிற்கு சென்று சேர்ந்து தேக்கமடைவதைத் தான் ஃபேட்டி லீவர் என்பார்கள். இதன் காரணமாக கல்லீரலின் செயல்பாடு இயல்பான அளவைவிட குறைகிறது. இதனால் செரிமானத்திறனும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் செரிமானத்திற்கு பேருதவிப் புரியும் கணையத்திலும் இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த கணையம் மது அருந்துவதால் அதிகளவிற்கு பாதிப்பிற்குள்ளாகிறது. அதேபோல் செரிமானத்திற்கு பித்தப்பையும் தன்னாலான பங்களிப்பை அளிக்கிறது. இதன் இயல்பும் கெட்டுபோவதால் செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் கல்லீரல், குடல், கணையம், பித்தப்பை ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட செரிமானத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஜீரணத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் இந்த நான்கு உறுப்புகளிலும் மருத்துவர்கள் பரிசோதனை நடத்துமாறு அறிவுறுத்துவார்கள்.

* உடல் எடையை குறைப்பதற்காக பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையால் ஏதேனும் பின்விளைவுகள் இருக்கிறதா?
உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்கள் வயிற்றின் கொள்ளவை குறைப்பதற்காக பேரியாட்ரிக் சர்ஜெரி என்ற ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதனால் பலன் உண்டு. பின்விளைவுகள் மிகவும் குறைவு. இவ்வித சிகிச்சையை அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரின் உயரம் மற்றும் உடல் எடையை வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது. உணவு பழக்க வழக்கங்களால் உடல் எடையை மாற்றியமைக்க முடியவில்லை என்றாலோ அல்லது அவர்களின் உடல் எடை மருத்துவ பரிந்துரைக்கு அப்பால் அதாவது 40 கிலோவிற்கு மேலிருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் இன்டிவிஜுவலைஸ்டு புரோட்டோகாலின் அடிப்படையில்தான் இதனை பரிந்துரைக்க முடியும். ஆனாலும் பின்விளைவுகள் குறைவு.

* பைல்ஸ் எனப்படும் மூலம் தோன்றுவதற்கும் உணவு பழக்கத்திற்கும் தொடர்புண்டா?
நிச்சயமாக பைல்ஸ் வருவதற்கு நாம் அதிகளவில் மைதாமாவால் செய்யப்படும் உணவு பொருளை சாப்பிடுவதாலும் ஏற்படும். உதாரணமாக புரோட்டாவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூலநோயின் பாதிப்பு ஏற்படும். மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதனை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதன் காரணமாகவும் மூலநோய் பாதிக்கும். இயற்கை உணவு தவிர்த்த வேறு வகையான உணவு வகைகள்கூட மலச்சிக்கலுக்கு காரணமாகின்றன. மூலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மலத்துவாரத்தின் வழியாக இரத்த கசிவுடன் மலம் வெளியேறினால் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வராமலிருக்க பெற்றோர்களுக்கு வழங்கும் ஆலோசனை என்ன?
ஜங்க் ஃபுட், கார்பனேடட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்கள் இந்த இரண்டையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வாங்கி தருவதால் பெரியவர்களுக்கு வரவேண்டிய ஃபேட்டி லீவர் எனப்படும் மருத்துவ சவால் குழந்தைகளுக்கும் வந்துவிடுகிறது. இதனால் சிறிய வயதிலேயே அவர்களின் உடல்எடை அதிகமாகி உடற்பருமன் நோய்க்கு ஆளாகிறார்கள். மேல்நாடுகளில் மட்டுமே காணப்பட்ட குழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது தெற்காசிய நாடுகளுக்கும் வந்துவிட்டது. இதற்கு முன்னர் குழந்தைகளுக்கு வைரஸ் கிருமியின் தொற்றால்தான் வயிறு தொடர்பான சிக்கல் இருந்தது. தற்போது ஃபேட்டி லீவர் இருக்கின்ற காரணத்தினாலேயே பல சிக்கல்கள் வருகின்றன. இதனை தற்போதாவது விழிப்புணர்வு பெற்று தடை செய்யவில்லை என்றால், அடுத்த பத்து ஆண்டுகளில் அவர்களின் கல்லீரல் பாதிப்படைவது நிச்சயம். அதன் போது கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 60 வயதுள்ளவர்களுக்கு வரவேண்டிய ஃபேட்டி லீவர் என்ற பாதிப்பு தற்போது பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு மலச்சிக்கல் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் குழந்தைகளுக்கு ஒருபோதும் கார்பனேடட் ட்ரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்கள் வாங்கி தராதீர்கள். அதனை அருந்துவதற்கும் ஊக்கப்படுத்தாதீர்கள். இதிலுள்ள ஃபேக்டோஸ் என்ற ரசாயனப்பொருள் தான் ஃபேட்டி லீவர் உருவாவதை ஊக்கப்படுத்துகின்றன.

தொடர்புக்கு: 8489411000

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top