நியூமோதோராக்ஸ் (Pneumothorax) என்ற பாதிப்பிற்குரிய புதிய சிகிச்சை

நியூமோதோராக்ஸ்  (Pneumothorax) என்ற பாதிப்பிற்குரிய புதிய சிகிச்சை

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் நீடிக்கிறது. எம்மில் சிலர் இயல்பான அளவைவிட கூடுதல் உயரத்துடன் இருந்தால் அவர்களுக்கு நியூமோதொராக்ஸ் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விளக்கங்களை பெறுவதற்காக சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர். தீபா செல்வி, Consultant interventional Pulmonology அவர்களை சந்தித்தோம்.

நியூமோதொராக்ஸ் என்றால் என்ன.?
 
நுரையீரலைச் சுற்றிலும் விரும்பதகாத அளவிற்கு காற்று சூழ்ந்திருக்கும் நிலை அல்லது நுரையீரல் சிதைவுப்பட்டிருக்கும் நிலையைத்தான் நியூமோதொராக்ஸ் என்பர். எம்முடைய நெஞ்சக பகுதியின் உட்புறத்தில் இரண்டு நுரையீரல் பகுதிகள் உண்டு. அதனுள் இதயம் இருக்கும். இந்த நுரையீரலை சுற்றி இரண்டு அடுக்கு பாதுகாப்பு சுவர் இயல்பாக அமையப்பெற்றிருக்கும். இதனை மருத்துவ மொழியில் ஃபுளூரா என்கிறோம். Visceral pleura மற்றும் Parietal pleura என்ற இரண்டு பாதுகாப்பு உறைகளுக்கு இடையே ஒரு இடைவெளி இருக்கும். இதனை ஃபுளூரா கேவிட்டி என்றும் ஃபுளூரா ஸ்பேஸ் என்று குறிப்பிடுவோம். இந்தப் பகுதியில் எதிர்பாராதவிதமாக காற்று உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தினால் அதைத்தான் நியூமோதொராக்ஸ் பாதிப்பு என்போம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் சிலருக்கு நெஞ்சு வலி, கடுமையான நெஞ்சுவலி, மூச்சு திணறல், மூச்சடைப்பு போன்ற அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்படும்.
 
இதற்கான காரணங்கள்?
 
Spontaneous Pneumothorax, Traumatic Pneumothorax, Latrogenic, Asthma, COPD போன்றவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு எந்த வகையான நுரையீரல் பாதிப்பு இல்லாமல் திடீரென்று நியூமோதொராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதனை ஸ்பொண்டனியஸ் நியூமோதொராக்ஸ் பாதிப்பு என்று வகைப்படுத்தப்படும். இத்தகைய பாதிப்பு எம்மில் இயல்பான அளவைவிட அதிகமான வளர்ச்சியைக் கொண்டு உயரமாக இருப்பவர்களுக்கும்,அவர்களில் எடை குறைவானவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதே தருணத்தில் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களாகயிருந்தாலும் இத்தகையப் பாதிப்பு ஏற்படக்கூடும். விபத்தின்போது இப்பகுதியில் காயம் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்படும்போது இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு நுரையீரலில் திசு பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது அரிதாக இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு, நாட்பட்ட ஓஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்றவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் வேறு சிலருக்கு Tension Pneumothorax என்ற பாதிப்பின் காரணமாக இவை ஏற்படும். இதன்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் வழியாக சுவாசம் மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதன்போது சுவாச பகுதியில் ஒஉள்ளிழுக்கும் காற்றிற்கும், வெளியேவிடும் காற்றிற்கும் இடையேயான அளவில் மாற்றம் ஏற்பட்டு, நுரையீரல் பகுதியில் அதிக அளவு காற்று உண்டாகி, இதய பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக மூச்சுத்திணறல், சமச்சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

கண்டறிவது எப்படி?
 
எக்ஸ்ரே பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிவார்கள். வேறு சிலருக்கு பி டி ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிவார்கள்.

இதற்கான சிகிச்சை என்ன?
 
ஸ்பொண்டனியஸ் நியூமோதொராக்ஸ் பாதிப்பின் போது இரண்டு சென்டிமீற்றருக்கும் குறைவாக காற்று நீடித்திருந்தால், பெரும்பாலும் அவை தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு Needle Aspiration என்ற சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்துவர். இதன்போது விலா எலும்பு பகுதியில் கதீட்டர் எனப்படும் நுட்பமான ஊசி மூலம் அங்கு இருக்கும் காற்று வெளியேற்றப்படும். சிலருக்கு இத்தகைய சிகிச்சைக்கு பின்னரும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு இத்தகைய சிகிச்சையுடன் Chest Tube Insertion என்ற சத்திர சிகிச்சையையும் இணைந்து மேற்கொள்வர். இதன் போது நோயாளியை குறிப்பிட்ட சாய்மானத்தில் வைத்து, தெரிவு செய்யப்பட்ட விலாப் பகுதியில் பிரத்யேக கருவியைப் பொருத்தி, சிகிச்சையளிப்பார்கள். 
 
சிலருக்கு அரிதாக Hemopneumothorax என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதன்போது புளூரா ஸ்பேஸ் பகுதியில் ரத்தமும் காற்றும் கலந்திருக்கும். இவர்களுக்கு செஸ்ட் ட்யூப் இன்செர்ஷன் என்ற புதிய சத்திர சிகிச்சை மூலம் ரத்தமும் காற்றையும் அகற்றி சிகிச்சை அளித்து குணப்படுத்துவர். 
 
இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படுமா?
 
இத்தகைய பாதிப்பு மீண்டும் வருமா? என்பதை விட, இத்தகைய பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் பறப்பது, ஸ்கூபா டைவிங் என்ற சாகச விளையாட்டில் ஈடுபடுவது, புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற காற்று இசை கருவிகளை வாசிப்பதை தவிர்க்கவேண்டும். மீறி செய்தால் நுரையீரல் பகுதி சிதைவடையக்கூடும். அதன் காரணமாக  நியூமோதொராக்ஸ் பாதிப்பு மீண்டும் வரக்கூடும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9489113617 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top