அதிகமாக வியர்வை வெளியேறும் (Hyperhidrosis) பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

அதிகமாக வியர்வை வெளியேறும் (Hyperhidrosis) பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் சிலருக்கு வியர்வை இயல்பான அளவைவிட அதிக அளவில் சுரக்கும். இதன் காரணமாகவே இவர்கள் பல அசௌகரியங்களை உணர்வார்கள். உடைகளை அணிவதிலும், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதிலும், குறிப்பாக எதிர்பாலினத்திடம் காதல் உணர்வு ஏற்பட்டிருந்தால்.. அவர்களுடன் நெருக்கமாக பழகுவதில் பல தர்மசங்கடங்கள் ஏற்படும். அத்துடன் மட்டுமில்லாமல் வணிக நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதிலும் மற்றும் பணியாற்றுமிடங்களில் சக ஊழியர்களுடன் இணைந்து வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும் பாரிய தயக்கங்கள் ஏற்படக்கூடும். இதன் காரணமாகவே அவர்கள் தங்களின் மனித வளத்தை முழுமையாக பயன்படுத்த இயலாத சூழலுக்கு ஆட்பட நேரிடும். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்தும், இதனை குணப்படுத்த இயலுமா? என்பது குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறுவதற்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர் தீப்தி மோத்திராம், MBBS., DDVL., Dermatologist & cosmetologist அவர்களைச் சந்தித்தோம்.

அதிக வியர்வை வெளியேறுவது ஏன்?
 
வியர்வை வெளியேறுவது இயல்பானதுதான். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் வியர்வைக்கும் குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. பொதுவாக வெப்பமான சூழலில் பணியாற்றும் போதும், நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும் போதும், கோடை காலம் போன்ற பருவநிலையின் போதும், பயம் உள்ளிட்ட மனநல காரணிகளாலும், சிலருக்கு சில தருணங்களில் வியர்வை உண்டாவது இயற்கை. மேலும் சிலருக்கு குறைவான கால அவகாசத்திலேயே வியர்வை வெளியேறும். சிலருக்கு சற்று அதிகமான கால அவகாசத்திற்குப் பிறகு வியர்வை வெளியேறும். இவையெல்லாம் இயல்பானவை தான். ஆனால் மேற்கூறிய எந்த வரையறையும் இல்லாமல், இயல்பான அளவைவிட அதிகமாக வியர்வை வெளியேறினால்.. அதைத்தான் Hyperhidrosis எனப்படும் அதிக வியர்வை வெளியேறும் பாதிப்பாக வகைப்படுத்துவார்கள். இத்தகைய பாதிப்பு Primary focal Hyperhidrosis மற்றும் Secondary Generalized Hypothesis என இரண்டு வகைப்படும்.
 
இதற்கான காரணம் என்ன?
 
சிலருக்கு குழந்தை பருவத்திலோ அல்லது டீன்ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்திலேயே இத்தகைய அதிகமான வியர்வை வெளியேறக்கூடிய பாதிப்பு ஏற்படக்கூடும். ஆனால் இவை உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள், தொடையின் மேல் பகுதி, தலையின் முன் பகுதியான நெற்றி போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிகமான வியர்வை வெளியேறும். இதற்கு பெரும்பாலும் பாரம்பரிய மரபியல் காரணங்களால்தான் ஏற்படுகின்றன. இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் இதனை கட்டுப்படுத்திக் கொண்டு, இத்தகைய பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற இயலும்.
 
வேறு சிலருக்கு மத்திம வயதில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அல்லாமல் உடல் முழுவதிலும் அதிகமான வியர்வை ஏற்பட்டால், அதனை செகண்டரி ஜெனரலைஸ்ட் ஹைபர்ஹைட்ரோசிஸ் என்பார்கள். இது உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அல்லது நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு கருத்தரித்திருக்கலாம் அல்லது மாதவிடாய் நின்றிருக்கலாம். வேறு சிலருக்கு தைராய்டு மற்றும் சர்க்கரை நோயின் காரணமாகவும் இத்தகைய நிலை உண்டாகும். மேலும் வேறு சிலருக்கு இனம் கண்டறிய இயலாத தொற்றுகளால் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதைத் தவிர்த்து சிலருக்கு காசநோயின் பாதிப்பின் காரணமாகவும் இரவு நேரத்தில் அதிகமான வியர்வை ஏற்படும். ரத்த புற்றுநோய் ஏற்பட்டு இருந்தாலும் இத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும். சிலருக்கு சில வகை மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் பக்கவிளைவாக இத்தகைய அதிகமான வியர்வை வெளியேற கூடும். மது பழக்கத்தின் காரணமாகவும் இவை ஏற்படலாம். மேலும் வேறு சிலருக்கு இத்தகைய அதிகமான வியர்வை வெளியேறும் பாதிப்பு உடலின் ஒரு பகுதியில் மட்டும் அதிகமாக ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு இத்தகைய பாதிப்புடன் அதிக தாகம், அதிகளவிலான சிறுநீர் கழிப்பு போன்றவையுடன் அதிக சோர்வு, தசை வலி போன்றவையும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை சிகிச்சையும் பெற வேண்டும்.
 
இதற்குரிய சிகிச்சை என்ன?
 
மருத்துவர்கள் பரிசோதனைகளின் மூலம் அதிகமான வியர்வை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள். அதன் பிறகு வியர்வையைக் கட்டுப்படுத்தும் நிவாரணிகளையும், மருந்துகளையும், களிம்புகளையும் முழுமையான நிவாரணத்திற்காக வழங்குவார்கள். உதாரணத்திற்கு Antiperspirant & Deodorant போன்றவற்றை பரிந்துரைப்பார்கள். இதிலுள்ள அலுமினியம் குளோரைடு வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தும். வேறு சிலருக்கு Iontophoresis என்ற மின் அதிர்வலை சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். இதனை Tap Water Iontophoresis சிகிச்சை என்றும் குறிப்பிடுவார்கள். இத்தகைய சிகிச்சையின் போது அதிகமாக வியர்வை வெளியேறும் இரண்டு உள்ளங்கைகளையும் பிரத்யேகமாக வடிவமைக்கட்ட சட்டகத்திற்குள் இருக்கும் தண்ணீரில் வைத்துக்கொள்ளவேண்டும். குறைந்த அளவு மின் அதிர்வை வெளிப்படுத்தி சிகிச்சை அளிப்பார்கள். இதன்மூலம் வியர்வை அதிகமாக வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதுவும் நல்ல பலனை வழங்கும் சிகிச்சையாகும். 
 
மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டால் அதிகமாக வியர்வை வெளியேறும் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். குறிப்பாக சிட்ரிக் அமிலச்சத்து அதிகமுள்ள பழங்கள், சொக்லேட், கோப்பி, அதிக மசாலாப் பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், மது பழக்கம் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துவார்கள். 

இதற்குரிய நவீன சிகிச்சைகள் என்ன?
 
இதற்குரிய நவீன சிகிச்சைகள் மேலைத்தேய நாட்டில் அறிமுகமாகியிருக்கிறது. Botox-A, miraDry, Laser & Thoracic Sympathectomy போன்ற லேசர் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சைகளும் உள்ளன. இத்தகைய சிகிச்சைகள் யாவும் மருத்துவ ஆலோசனை மற்றும் முறையான பலகட்ட பரிசோதனைக்கு பிறகு தான் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சிகிச்சையின்போது வியர்வை சுரப்பிகளின் செயல்பாடு முற்றிலும் முடக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். எனவே இத்தகைய சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையின்றி மேற்கொள்ளக் கூடாது. சிலருக்கு வியர்வையை சுரக்கும் சுரப்பியை அகற்றிவிடுவார்கள். இதன் காரணமாக வியர்வை சுரப்பது நின்றுவிடும். பிறகு வியர்வை வழியாக உடலிலிருந்து வெளியேறும் நக்சுகள் உடலிலேயே தங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதனால் இத்தகைய நவீன சிகிச்சைகளை மேற்கொள்ளும் முன்னர் இத்துறை சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் பரிந்துரை அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 8680845721என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top