அவாஸ்குலர் நெக்றோஸிஸ் எனப்படும் எலும்பு திசு சிதைவு பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

அவாஸ்குலர் நெக்றோஸிஸ் எனப்படும் எலும்பு திசு சிதைவு பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலரும் தங்களது அலுவலகப் பணிச்சுமையை மறப்பதற்காக அல்லது  பணியிடத்தில் ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்காக நண்பர்களுடன் இணைந்து மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ மது அருந்துவதை வழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக எம்மில் ஏற்படும் பல்வேறு உடல் ஆரோக்கிய சீர்கேடுகளில் முதன்மையானது இடுப்பு எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள். இந்நிலையில் இடுப்பு எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சை நிபுணரான டாக்டர் அருண் கண்ணன், M.S., Consultant orthopaedic surgeon அவர்களை சந்தித்தோம்.

அவஸ்குலர் நெக்றோசிஸ் எனப்படும் இடுப்பு எலும்பு திசு சிதைவு பாதிப்பு குறித்து..?
 
எம்முடைய உடலிலுள்ள தொடை பகுதியும், உடல் பகுதியும் இணையுமிடத்தில் அமைந்திருப்பதுதான் இடுப்பு மூட்டு. இது மிக முக்கியமான மூட்டுப்பகுதி. இங்கிருந்துதான் எம்முடைய உடலின் எடையானது கால் பகுதிக்கு கடத்தப்பட்டு, சமநிலை பராமரிக்கப்படுகிறது. இந்த இடுப்பு மூட்டு என்பது பந்து கிண்ண மூட்டு வடிவில் காணப்படும். பந்துபோல் வட்ட வடிவில் இருக்கும் எலும்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புதான் அவாஸ்குலர் நெக்றோசிஸ். சுருக்கமாக விளக்க வேண்டுமென்றால் இந்த பந்து போல் இருக்கும் எலும்பு பகுதியில் ரத்த ஓட்டம் குறைவது அல்லது ரத்த ஓட்டமே நடைபெறாத நிலைதான் நெக்றோசிஸ் எனப்படுகிறது. இரத்தவோட்டம் நடைபெறாததால் அங்குள்ள திசுக்கள் சிதைவடைந்து சேதமடைகிறது. தொடை எலும்பு பகுதியிலிருந்து இங்கு ரத்த ஓட்டம் வருகிறது. பல்வேறு காரணங்களால் இவை தடைபடும் போது இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
 
இவை ஏற்படுவதன் காரணங்கள் என்ன?
 
தொடர்ச்சியாக அளவில்லாமல் மது அருந்துபவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். வேறு சிலருக்கு உடலில் ஏற்படும் அசௌகரியங்களுக்கான நிவாரணமாக தொடர்ந்து வீரியம் மிக்க ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுநீரக கோளாறு, நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட சிலர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாக நேரிடும். மிக அண்மைக்காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிலர் ஸ்டீராய்ட் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நாளடைவில் இத்தகைய பிரச்சனை  வருவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் சிலருக்கு ரத்த ஓட்ட கோளாறு ( Blood Disorder) பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அரிதாக சிலருக்கு  காரணங்கள் இல்லாமல் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதனை மருத்துவத் துறையினர் இடியோபதிக் அவாஸ்குலர் நெக்nwhசிஸ் என குறிப்பிடுவதுண்டு. சிலருக்கு இரத்த நாளங்களில் அதிகளவில் கொழுப்பு படிந்திருப்பது, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டிருப்பது, விபத்து,  கணைய அழற்சி, நீரிழிவு நோய், கௌஸர் நோய், உயிர்கொல்லி நோயான ஹெச் ஐ வி பாதிப்பு, சிக்கில் செல் இரத்த சோதகை பாதிப்பு  போன்ற வேறு சில காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகக்கூடும்.
 
எத்தகைய அறிகுறிகளின் மூலம் இதனை உணர்ந்து கொள்ள இயலும்?
 
இடுப்பு பகுதிகளில் வலி ஏற்படும். அதாவது எம்முடைய தொடை பகுதியும் உடலும் இணையும் பகுதியின் உள்புறத்தில் வலி ஏற்படும். இந்த வலி ஓய்வாக இருக்கும் தருணத்தில் ஏற்படுவதில்லை. பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது திடீரென்று உண்டாகும். குறிப்பாக மாடிப்படி ஏறும் போதோ.. இருக்கையில் அமரும் போதோ.. தரையில் சப்பணமிட்டு அமர்ந்து பசியாறும் போதோ.. அல்லது அமர்ந்த நிலையிலிருந்து எழும் போதோ.. இத்தகைய பகுதியில் வலி உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எம்மாதிரியான பரிசோதனைகள் இதற்கு அவசியப்படுகிறது?
 
எக்ஸ்ரே, எம்ஆர்ஐ பரிசோதனை, சி டி ஸ்கேன் பரிசோதனை, எலும்பு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளின் மூலம் ரத்த ஓட்டத்தின் சமச்சீரற்ற தன்மையை துல்லியமாக அவதானிக்கலாம்.
 
இதற்குரிய சிகிச்சைகள் குறித்து..?
 
இத்தகைய பாதிப்பு நான்கு நிலைகளில் ஏற்படுகிறது. முதல் நிலையில் அறிகுறிகள் ஏற்படுத்தாது. இரண்டாவது நிலையில் வலி உண்டாகும். ஆனால் பந்து கிண்ண மூட்டு அமைப்பில் எந்த சேதமும் நிகழ்ந்திருக்காது. மூன்றாவது நிலையில் பந்து கிண்ண மூட்டின் மேற்பகுதியில் உருண்டையான வடிவத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அவை தட்டையாகவோ அல்லது உருவ மாற்றம் பெற்றிருக்கும். நான்காவது நிலையில் பந்து கிண்ண மூட்டின் மேற்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு உருவ மாற்றம் நிகழ்ந்து, அதன் காரணமாக ரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட்டிருக்கும். முதல் இரண்டு நிலைகளுக்கு சிகிச்சைகள் மூலமே முழுமையாக குணப்படுத்த இயலும். மருந்துகளின் மூலம், கொழுப்பு படிவத்தை குறைப்பது, ஸ்டீராய்ட் மருந்துகளின் வீரியத்தன்மையைக் குறைப்பது, அங்கு ஏற்பட்டிருக்கும் இரத்த உறைவை சீராக்குவது, போதுமான அளவிற்கு மின் தூண்டல் சிகிச்சையின் மூலம் இரத்தவோட்டத்தை சீராக்குவது போன்ற சிகிச்சைகளுடன் போதிய ஓய்வு மற்றும் பிரத்யேக உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது இதற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் சத்திர சிகிச்சை மூலமே இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். 
 
சிலருக்கு இரண்டாவது நிலை ஏற்பட்டிருக்கும் போது கோர் டீகம்பிரஷன் எனப்படும் பிரத்யேக சத்திரசிகிச்சை செய்து குணப்படுத்த இயலும். இதன்போது பந்துக்கிண்ண மூட்டு பகுதியில் சிறிய அளவில் துளையிடப்பட்டு, அங்குள்ள அழுத்தம் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் வலி குறைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய சிகிச்சையின்போது பந்து கிண்ண மூட்டு பகுதி, மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்புகிறது. மேலும் சிலருக்கு இத்தகைய சத்திரசிகிச்சையின் சிகிச்சையின்போது கூடுதல் வெற்றிக்காக போன்மேரோ இன்ஜக்சன் எனப்படும் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்படும் ரத்த அணுக்களை ஊசி மூலமாக செலுத்தும் சிகிச்சையையும் மேற்கொள்வார்கள். இதனால் அப்பகுதியில் மீண்டும் ரத்த அணுக்கள் உற்பத்தியாகி, ரத்த ஓட்டம் சீரடைகிறது. சிலருக்கு அவர்களின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்படும் செல்களை தனியாக பிரித்தெடுத்து, ஆய்வகத்தில் செறிவூட்டப்பட்டு, நோயாளிகளுக்கு செலுத்தும்போது அவர்களின் பந்துக்கிண்ண மூட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட இடம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
 
மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பாதிப்பு அடைந்தவர்களுக்கு இடுப்பு எலும்பு மாற்று சத்திர சிகிச்சை தான் பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய சத்திரசிகிச்சையின் போது பொருத்தப்படும் செயற்கையான மூட்டுகள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால் இதன் ஆயுள் தன்மை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 87544 98680 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top