இதய வால்வு (Mitral Valve) பாதிப்பைக் கண்டறிவதற்கான நவீன பரிசோதனை

இதய வால்வு (Mitral Valve) பாதிப்பைக் கண்டறிவதற்கான நவீன பரிசோதனை

“எம்முடைய இதய செயல்பாட்டிற்கு நான்கு இதய வால்வுகள் பிரதான பங்களிப்பை வழங்கி வருகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் இரத்தக்கசிவு அல்லது இதய வால்வு சுருக்க பாதிப்போ ஏற்பட்டால் இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த நான்கு வால்வுகளில் மிட்ரல் வால்வு என்ற வால்வு பாதிக்கப்பட்டால், அதற்கான சிகிச்சையை உடனடியாக பெறவேண்டும்.  அதனை நவீன பரிசோதனை மூலம் கண்டறிந்து சத்திர சிகிச்சை மூலம் எளிதாக குணப்படுத்த இயலும்.” என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் டொக்டர். முத்துக்குமரன் M.S.,M.Ch.,இதய சத்திர சிகிச்சை நிபுணர். சென்னையை சேர்ந்த இதய சத்திரசிகிச்சை நிபுணரான இவரிடம் மிட்ரல் வால்வு மாற்று சத்திர சிகிச்சை குறித்தும், அதற்காக அறிமுகமாகியிருக்கும் புதிய பரிசோதனை குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டோம்.

இதய வால்வுகள் பலவீனமடைந்தால் எத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும்..?
 
உடலில் அதிக அளவு திரவம் சேர்ந்து கால்களில் வீக்கம் ஏற்படும். மூச்சுத் திணறல், நேராக படுக்கும் பொழுது மயக்கம், களைப்பு, இதய படபடப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும். இதன் காரணமாக சிலருக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும்.
 
மிட்ரல் வால்வு குறித்து..?
 
இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் இடது பக்கத்தில் உள்ள இரண்டு மேல் அறைகளிலும் சிக்கலான கட்டமைப்பில் உள்ள வால்வுகள் மிட்ரல் வால்வு எனப்படும். இதன் திறனும், செயல்பாடும் ஏனைய வால்வுகள், தசை, ரத்த ஓட்டம் ஆகியவற்றின் இணக்கமான செயலை சார்ந்திருக்கிறது. இத்தகைய வால்வுகளில் Mitral Regurgitation என்ற பாதிப்பு ஏற்படும். இவை மூன்று நிலைகளில் ஏற்படலாம். இவற்றை உரிய பரிசோதனை மூலம் கண்டறிந்து கொண்டு அதற்கு சிகிச்சை பெறவேண்டும். 
 
Mitral Regurgitation பாதிப்பு குறித்து?
 
இதயத்தின் நான்கு அறைகளில் இடதுபக்க இரண்டு அறைகளில் இதயத்திலிருந்து சீரான வேகத்தில் ரத்தமானது வெளியேற வேண்டும். இதற்கு அங்குள்ள மிட்ரல் வால்வு எனப்படும் தசையின் மூடி திறக்கும் திறன் உதவுகிறது. இந்த இயக்கம் இயல்பான அளவில் அதற்கே உரிய அடர்த்தியில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் தளர்ச்சியோ அல்லது இடையூறோ ஏற்பட்டால், இந்த வால்வு பாதிக்கப்படும். இதன் காரணமாக இதயத்தில் ரத்த ஓட்டம் எதுக்களிக்ககூடும்.  இதன் காரணமாக சிலருக்கு இத்தகைய வால்வின்  அமைப்பிலும் மாற்றம் ஏற்படக்கூடும்.
 
எதனால் மிட்ரல் வால்வு பாதிக்கப்படுகிறது?
 
Mitral Valve Prolapse எனப்படும் வால்வு வீக்கம், மிட்ரல் வால்வு திசு பாதிப்பு, ருமாட்டிக் காய்ச்சல், Endocarditis எனப்படும் ஏதேனும்  தொற்றால் மிட்ரல் வால்வு பாதிக்கப்பட்டிருப்பது, மாரடைப்பு, கார்டியோமயோபதி எனப்படும் இதய தசைகளில் ஏற்படும் அசௌகரியம், விபத்து, பிறவி இதயக் குறைபாடு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் மருந்துகளின் பயன்பாடு, உடலின் வேறு பாதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, சமச்சீரற்ற இதயத் துடிப்பு... என பல்வேறு காரணங்களால் மிட்ரல் வால்வு பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் ஹார்ட் ஃபெயிலியர் எனப்படும் இதய செயலிழப்பு, இதயத்தின் மேல் அறையில் ஏற்படும் நடுக்கம் காரணமாக ரத்த உறைவு ஏற்பட்டு இதயத்துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துதல், பல்மனரி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் நுரையீரல் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

இத்தகைய பாதிப்பை எத்தகைய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்?
 
இருதயத்தை முழுமையாக பரிசோதிக்கும் முறையாக எக்கோகார்டியோகிராம் என்ற பரிசோதனை திகழ்கிறது. இத்தகைய பரிசோதனையில் இதய வால்வுகளின் தன்மை மற்றும் அதன் ஆரோக்கியத்துடன் இதய தசைகளின் வலிமை மற்றும் செயல்பாடு, பிறவி இதயக் குறைபாடுகள் உள்ளிட்டவைகளைத் துல்லியமாக கண்டறியலாம். தற்போது எக்கோகார்டியோகிராம் கலர் டாப்ளர் எனும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பதால், இதய பகுதிகளில் ரத்த ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதையும் கண்டறியலாம். இதன் மூலம் இதயத்தில் உள்ள வால்வுகளின் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும், அடைப்புகள் ஏற்பட்டிருந்தால்... அவை எந்த நிலையில் உள்ளன? என்பதையும் கண்டறியலாம். தற்போது Transesophageal Echocardiogram என்ற புதிய உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை உணவு குழாய்க்குள் செலுத்தி இதயத்திற்கு மிக அருகிலிருந்து எக்கோ கார்டியோகிராம் செய்வதால், இதய வால்வுகளில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளை துல்லியமாக கண்டறியலாம். இதய வால்வுகளில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது இதய வால்வு சுருக்கப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது இதய வால்வுகளில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை இதன் மூலம் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை தீர்மானிக்கலாம். இந்த பரிசோதனையிலும் தற்போது 3டி மற்றும் 4டி தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதால் பாதிப்புகளை துல்லியமாக கண்டறியலாம்.
 
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையுடன் வேறு சிலருக்கு மார்பக எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ஸ்ட்ரஸ் டெஸ்ட் ,கார்டியாக் கதீட்டரைஷேஸன் போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
 
இதற்கான சிகிச்சை என்ன?
 
இதற்கான சிகிச்சையின் போது உங்களுடைய நுரையீரல் மற்றும் கால் பகுதிகளில் தங்கியிருக்கும் திரவத்தை அகற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து இரத்தத்தில் ஏதேனும் உறைவு ஏற்பட்டிருந்தால், அதனை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொள்வார்கள். பிறகு உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதற்கான சிகிச்சையை மேற் கொள்வார்கள். சிகிச்சையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்து, அதற்குரிய பரிசோதனைகளை முதலில் மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள்.
 
மிட்ரல் வால்வு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சத்திரசிகிச்சை மூலமாகவோ அல்லது மிட்ரல் வால்வு மாற்று சத்திர சிகிச்சையின் மூலமாகவோ  இதற்கான சிகிச்சை முழுமையான பலனை அளிக்கிறது. டிரான்ஸ் கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சத்திர சிகிச்சை என்பது மிட்ரல் வால்வு சுருக்கம் அடைந்திருந்தாலோ அல்லது மிட்ரல் வால்வில் கசிவு ஏற்பட்டிருந்தாலோ இத்தகைய சிகிச்சை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
 
அதே தருணத்தில் பயோ பிராஸ்தடிக் வால்வு அல்லது ரிங் மாற்று சத்திரசிகிச்சை ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நோயாளிகளுக்கும் இத்தகைய மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதய சத்திர சிகிச்சையின் போது தேவையற்ற வகையில் அங்கிருக்கும் மிட்ரல் வால்வுகளை மாற்றுவதற்கான ஒரு வழியாகவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தகைய சிகிச்சையின்போது தொடைப் பகுதி வழியாக டிரான்ஸ் கதீட்டர் மூலம் இதயப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வு பகுதி சீரமைக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 95001 13374 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top