கொரோனா தொற்றுக்கு பின்னரான நினைவாற்றல் திறன் குறைவு பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு பின்னரான நினைவாற்றல் திறன் குறைவு பாதிப்பு

இன்றைய தேதியில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு நினைவாற்றல் திறன் குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான சிகிச்சையை உடனடியாக பெறவேண்டும் என்றும், இதனால் நாட்பட்ட நினைவு திறன் இழப்பு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள இயலும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று எம்முடைய நுரையீரல் பகுதியை நேரடியாக பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனாத் தொற்று பாதித்தவர்களில் 30 சதவீதத்தினருக்கு நினைவாற்றல் திறன் குறைவு பாதிப்புடன் பக்கவாதம், தலைவலி, சோர்வு, பலவீனம், வலிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
எம்மில் பலரும் ஞாபக மறதி எனும் பாதிப்பிற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இது தொடர்பான மருத்துவ ஆலோசனைக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதன் காரணமாக இத்தகைய பாதிப்புள்ளவர்களைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது என்கிறார்கள் சுகாதார துறையினர். 
 
கொரோனாத் தொற்று குறித்த அச்சம், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இயல்பாக பழக இயலாததால் மனதளவில் சோர்வடைந்தனர். இது பாதிப்புக்கு பிந்தைய மன அழுத்தத்தை ஏற்படுத்தி, நினைவுத் திறனை பாதித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனை அவர்கள் தொடக்க நிலையில் கண்டறிந்தால் நினைவுத்திறன் இழப்பின் பாதிப்பை குறைத்து, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப இயலும் என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
 
இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் கொரோனாத் தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் புகை மற்றும் மது பழக்கத்தை முற்றாக தவிர்த்து, சமச்சீரான சத்துணவை சாப்பிட வேண்டும். மனதிற்கு இனிய நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான புற மற்றும் அக சூழல்களால் மூளை மற்றும் அதன் இயங்கு மின்னாற்றல் மீண்டும் பழைய இயல்பு நிலையை எட்டிவிடும்.
 
நினைவு திறன் குறைவு பாதிப்பு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், ஆறு மாதத்திற்குள் மீண்டும் முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையின் மூலம் குணமடைகின்றனர். அறிகுறிகளை கண்டறியாமல், சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் புறம் தள்ளுபவர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டும் நாட்பட்ட நினைவு திறன் இழப்பு பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்கள் நாளடைவில் அல்சைமர் என்ற பாதிப்புக்கும் ஆளாகக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
டாக்டர். கேசவன்
தொகுப்பு அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top