டெங்கு அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு!

டெங்கு அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு!

தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டு பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், நாமும் நம்முடைய பங்களிப்பினை இதற்கு அளித்தால் மட்டுமே முழுவதுமாக இந்த டெங்குவை கட்டுப்படுத்த முடியும். தற்போது மழைக்காலம் என்பதால் சாதாரண சளி காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்துவிட கூடாது’ என்கிறார் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் திரு. சுந்தர பாண்டியன் அவர்கள்.

இன்று டெங்கு என்பது ஒரு வைரல் காய்ச்சல் என்றும், அதை குணப்படுத்த மருத்துகள் இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த டெங்கு எதனால் ஏற்படுகிறது? எப்போது ஏற்படுகிறது? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்கிற கேள்விகளை மருத்துவர் முன்பாக வைத்தோம்.

டெங்கு பற்றிய அறிமுகம்

டெங்கு வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஏடீஸ் ஏகி பெட்டி என்கிற கொசுக்கள்தான். இந்த வகையான கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்க கூடியவை.

டெங்குவின் நிலைகள்

டெங்கு வைரஸை பொருத்தவரையில் மூன்று நிலைகள் உண்டு. அதில் முதல் நிலை Dengue Fever, இரண்டாம் நிலை Dengue Hemorrhagic Fever, மூன்றாம் நிலை Dengue Shock Syndrome. இதில் மூன்றாம் நிலை தான் மிகவும் ஆபத்தான நிலை. முதல் நிலையான Dengue Fever மற்ற வைரஸ் காய்ச்சல் போல சாதாரணமான ஒன்றுதான். எனினும் அதை கவனிக்காமல் அலட்சியமாக விடுவதுதான் மூன்றாம் நிலைக்கும் மெல்ல மெல்ல நோயாளியை நகர்த்தும்.

டெங்குவின் அறிகுறிகள்

டெங்குவின் முதல் நிலையின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, உடலில் சிகப்பு நிற தடிப்புகள் தோன்றும். இது பயப்படும் ஒரு நிலையில்லை. இந்த நிலையில் நோயாளியை வீட்டில் வைத்தே பராமரித்து குணப்படுத்த முடியும். இந்த முதல் நிலையில் காய்ச்சலின் தாக்கம் குறையும் போதுதான் இரண்டாம் நிலை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அப்படி தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரண்டு நிலையில் மேற்கூறப்பட்ட அறிகுறியோடுகூட மூக்கிலிருத்தோ பற்களின் ஈறுகளிலிருந்தோ, வாய்க்குளாக இரத்தப்போக்கு, உடல்களில் கொசு கடித்ததுபோன்ற சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ICU மற்றும் இரத்தம் ஏற்றும் வசதி கொண்ட மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். மூன்றாம் நிலையில் மேற்கூறப்பட்ட அனைத்து அறிகுறிகளோடு சுறுசுறுப்பின்மை, மிகவும் மனஅழுத்ததிற்கு உட்படுவது, உடலின் நாடித்துடிப்பில் மாற்றங்கள் இருக்கும், இரத்த அழுத்தம் குறைந்திருப்பது, கை கால்கள் சில்லென இருப்பது போன்றவை ஏற்படும். இச்சமயங்களில் உடனடியாக மருத்துவமனையில் ICUவில் அனுமதித்து அதிவேக சிகிச்சையை துவங்க வேண்டும். இது ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட சக்கரை வியாதி மற்றும் மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

டெங்கு கண்டறியப்பட்டால் செய்ய கூடியவை, செய்ய கூடாதவை!

டெங்கு கண்டறியப்பட்டால் நோயாளிக்கு முழுநேர ஓய்வு, அதிகமான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். உதாரணமாக கொதிக்க வைத்து ஆறிய நீர், அரிசி கஞ்சி, பார்லி கஞ்சி, இளநீர், ஜுஸ் போன்றவற்றை அதிகமாக அளிக்க வேண்டும். இதுவே டெங்குவின் தாக்கத்தை பாதிக்கு மேலாக குறைத்துவிடும். அத்தோடு உணவுகளில் எளிதில் செரிமாணமாகக் கூடிய இட்லி, இடியாப்பம், கஞ்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, கொய்யாப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நிலைமையில் குதித்தல், ஓடி விளையாடுதல், காயங்கள் போன்றவற்றை முழுவதுமாக தவிர்த்திட வேண்டும். இந்த சூழலில் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மட்டுமே பயன்படுத்துவது தவறாகும்.

மக்களின் பொதுவான அலட்சியம்

டெங்கு வந்த முதல் மூன்று, நான்கு நாட்கள் முதல் நிலையான காய்ச்சலில் இருக்கும். டெங்குவின் மூன்றாம் நான்காம் நாட்களில் காய்ச்சல் குறைந்து உடலில் தடிப்புகள் ஏற்படும் போது மக்கள் அதை அம்மை நோய் என்று நாட்டு வைத்தியம் செய்து நேரத்தை வீணடிக்கின்றனர். இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் மிக விரைவில் குணப்படுத்திவிடலாம். இரண்டாம் மூன்றாம் நிலையை அடையும்போது அதற்கான சிகிச்சையும் கடினமாகிவிடுகிறது. உடலில் தட்டணுக்கள் (Platelets) குறையும் போது மூக்கிலிருந்தும், பற்களின் ஈறுகளிலிருந்தும் இரத்தம், கருமை நிறத்தில் மலம், ரத்த வாந்தி போன்றவை ஏற்படும். இச்சமயங்களில் நாம் இந்த தட்டணுக்களை உடலில் ஏற்ற வேண்டும்.

டெங்குவிற்கான சிகிச்சை மற்றும் பாதுகாப்பு

டெங்குவிற்கு இன்றளவும் உலகளவில் எந்த ஒரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, டெங்கு வராமலிருக்க நாம் பாதுகாப்பு நடைமுறைகளையே கையாள வேண்டும். நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலை உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமே தவிர அது இதற்கு மருந்து இல்லை. வீட்டிற்கு உள், வீட்டிற்கு வெளியில், சுயப் பாதுகாப்பு.. இதுதான் மிகவும் முக்கியமானது. வீட்டிற்குள் இருக்கும்போது கைகளில் கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். டெங்கு கொசுக்கள் நல்ல நீரில்தான் முட்டைப்போட்டு குஞ்சுப் பொரிக்கும். எனவே, வீட்டின் உள்ளே உள்ள நீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். டெங்கு பரப்பும் கொசுக்கள் பெரும்பாலும் காலையில் கடிப்பதால் நாம் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டும். முழுக்கை சட்டை அணிந்து பாதுகாப்பாக இருப்பது சிறந்தது. நம்முடைய சுற்றுப்புறம் மற்றும் நம்முடைய வீட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். நீர் தேக்கம் இல்லாத வகையிலும், புதர் மண்டியிருப்பதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த டெங்கு கொசுவானது 1 முதல் 1.5 கிமீ தூரம் வரை பறக்க கூடியது. எனவே, உங்களுடைய பகுதியில் யாருக்காவது டெங்கு கண்டறியப்பட்டால் உடனே மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்புக்கு: 0452-2510000

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top