ஓவியங்களுக்கு உயிரூட்டும் ஓவியர் திரு.ராஜேஷ்!

ஓவியங்களுக்கு உயிரூட்டும் ஓவியர் திரு.ராஜேஷ்!

பலருக்கும் இந்த ஓவியரின் பெயரை பெயர் சொன்னால் சட்டென தெரியாது, ஆனால் இவரது ஓவியத்தை காணும் பொழுது ஓ! இவர்தான் அவரா? என வியப்பில் ஆழ்த்தும். ஆம்! அவர் வரைந்த ஓவியத்தை நீங்கள் கூட முகநூல்களிலே வாட்ஸ் அஃப்பிலே ஷேர் செய்திருக்கக்கூடும். இவர், ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஐயா அவர்கள் மறைந்த அன்று, விண்ணுலப் பயணத்தை மேற்கொள்வது போல வரைந்த ஓவியம் மாஸ். ராஜேஷ் என்று சிறிய கையெழுத்தையே ஓவியமாய் பதித்திருக்கும் அந்த ஓவியங்களுக்கு உயிரூட்டிய அவற்றின் சொந்தக்காரர் ஓவியர் ராஜேஷ் அவர்களை சந்தித்தோம்.

‘எனக்கு மிகப்பெரிய ஓவிய பேக்கிரவுண்ட் எல்லாம் இல்லை. வயல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சலசலவென ஓடும் நீரோடை என எங்கும் பசுமை ததும்பும் கிராமம்தான் நான் பிறந்து வளர்ந்த எடத்தனுர். திருவண்ணாமலையிலிருந்து 18 கிமீ தூரத்தில் நாளுக்கு இருமுறை மட்டுமே பேருந்து வரும் ஒரு சின்ன ஊர் அது. இன்றுவரை என் கிராமத்திலிருந்து சுற்றியுள்ள 20 கிமீ தூரத்திற்கு ஓவியம் பற்றி அதிகம் தெரிந்தவர்களோ, அல்லது அதன்மீது விருப்பம் கொண்டவர்களோ என்பது மிகவும் குறைவு. அவர்களை பொருத்தவரை நான் படம் வரைவேன், அவ்வளவு தான். ஓவியம் என்பது நற்பணி மன்ற விளம்பர போர்ட்களிலும், அரசியல் தலைவர்களின் விளம்பரங்களிலும் மட்டுமே மக்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர் 1994-ம் ஆண்டு தான் எனக்குள் இருந்த திறன் வெளிபட்டது’ என தொடங்கினார்.

‘என்னுடைய பள்ளி பருவத்தின் போதிலிருந்தே என் கையெழுத்து என்பது கொஞ்சம் நன்றாகவே இருக்கும். இதனால் கரும்பலகையில் வகுப்புக் குறிப்புகளை எழுதும் வேலை என்னுடையது. எட்டாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் முதன்முதலான ஆங்கில கையெழுத்து வகுப்பு தொடங்கியது. மரத்தடி நிழலில் நடைபெற்ற அந்த வகுப்பிலும் கரும்பலகையில் எழுதும் வேலை எனக்கு வந்தது. வாழ்க்கையிலேயே முதல் முதலாக நான்கு கோடு போட்ட நோட்டையே அப்போதுதான் பார்க்கிறேன். ஆங்கில வார்த்தையை எப்படி அச்சுஅசலாக எழுதுவது என்கிற பயத்தோடு புத்தகத்தில் இருந்த தட்டச்சு எழுத்துப்போலவே எழுத சாக்பீசை ஒரு புறம் பட்டை தீட்டி, ஒரு புறம் கூர்மையாக வைத்து எழுதிவிட்டேன். கொஞ்ச நேரத்திலே ஆசிரியர் வந்து, கரும்பலகையைப் பார்த்து, கனீர் குரலில், ‘நீதானே இதை எழுதினாய், இங்கே வா’ என அழைத்தார். பயத்துடன் அவர் முன்நின்ற என்னை பார்த்த அவர்’ எந்த மாணவனும் இவ்வளவு அழகாக எழுதி நான் பார்த்ததில்லை, உனக்குள் நல்ல ஒரு திறமையிருக்கிறது என அணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பேர் எழுதும் பதவி உயர்வும் ஒரு மாணவனாக எனக்கு கிடைத்தது. இப்படிதான் என்னுடைய கையெழுத்து அங்கீகாரத்தை முதலில் அடைந்தது.

கையெழுத்து, ஓவியம் இவ்விரண்டுக்குமே பொறுமையும் ஈடுபாடும் இருந்தால் சிறப்பாக செய்திட முடியும். நம்முடைய ஓவியம் இப்படிதான் வரவேண்டுமென நாம் வரையும் முன்னே திட்டம் தீட்டிக்கொண்டு செயல்பட வேண்டும். இது நம்முடைய அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். என்னுள் இருக்கும் ஓவியத்திறனை அறிந்து கொண்டேன். இப்படி காலம் செல்லச்செல்ல ஓவியத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த கட்டத்தில் என்னுடைய தந்தை என்னை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்கிற கனவோடு இருந்தார்.

1998ம் ஆண்டு குறைவான மதிப்பெண்னோடு என்னுடைய பள்ளியை முடித்தேன். அன்றைய சூழலில் குறைவான மதிப்பெண்களுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. எனவே, என்னுடைய தந்தை என்னை ஒரு டுட்டோரியலில் சேர்த்து மீண்டும் 12-ம் வகுப்பு படிக்க வைத்தார். என்னுடைய ஆர்வம் ஓவியத்தில் இருந்தபடியால் வகுப்பிற்கு செல்லாமல் ரவிவர்மா ஆர்ட்ஸ் என ஒரு ஓவிய கடையை நடத்தி வந்த திரு. குமார் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து ரசிகர் மன்ற போர்ட்களில் பெயர் எழுதும் வேலையை செய்து வந்தேன். அடுத்த சில நாட்களில் நானே போர்ட்களில் வரையவும் தொடங்கினேன். ‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்பது போல ஒரு நாள் வசமாக வீட்டில் வகுப்புக்கு செல்லாமல் இருந்தது தெரியவந்தது. எங்களுக்கு சொந்தமாக அப்போது ஒரு பால்பண்ணை இருந்தது. எனவே, ‘உனக்கு படிப்பே வராது, நீ மாடே மேய்த்துக் கொள்’ என வீட்டில் சொல்லி விட்டார். அன்றிலிருந்து காலை எழுந்து எங்களின் மாடுகளை மேய்த்து அவற்றி லிருந்து பால் கறந்து ஊற்றுவது என பொழுதை கழித்தேன். ஆனால் ஓவியத்தின் மீதான ஆர்வம் மட்டும் அப்படியே இருந்தது. மாடுகளை மேய்த்துவிட்டு ஓய்வு நேரங்களில் பழைய வார இதழ்களை சேகரித்து, அவற்றில் உள்ள நடிகர்களின் அட்டை படத்தை ஓவியத்திற்கு பயன்படுத்தினேன்.

எனக்குள் இருந்த ஆர்வத்தை கண்ட என்னுடைய அண்ணன், சென்னையில் உள்ள ஓவிய கல்லூரிக்கு விண்ணப்பிக்க உதவினார். அங்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற்று அங்கே படிக்கும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய வாழ்க்கையின் அடுத்த ஒரு அத்தியாயமாய் தற்போது ஓவியம் என்னுள் நிலைப்பெற்றது. அங்கு ஓவியங்களின் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண்டேன். அதன்பின் நண்பர்களுக்கு பரிசாக அவர்களின் புகைப்படங்களை வரைந்து பரிசளிக்க தொடங்கினேன். அப்படி ஒரு நண்பருக்கு நான் செய்து கொடுத்து, அவர்களின் மூலம் ஒரு பிரபலமான ஆங்கில நாளிதழிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்து சுமார் 8 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். அப்படி நான் அந்த நாளிதழுக்கு வரைந்த பல படங்கள் முகபுத்தகத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி, அதிகம் பகிரப்பட்டது. இதுவரை சுமார் 3300 ஓவியங்களை வரைந்திருக்கிறேன். தற்போது 10000 உருவப்படம் வரைவதே என்னுடைய ஒரு இலட்சியக் கனவாக அமைந்திருக்கிறது.‘ என முடித்தார்.

தொடர்புக்கு :9500802018

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top