தமிழ் இலக்கியங்களில் தொய்யில் கலை!

தமிழ் இலக்கியங்களில் தொய்யில் கலை!

மிகுந்த காமத்தோடும் காதலோடும் கூடிய ஒரு பழைய தமிழ் வரைகலையை நாம் அறவே மறந்துபோனோம். தொய்யில் என்பது அதன் பெயர். பச்சை குத்துதல், மருதாணிச்சித்திரங்கள் போன்ற உடலோவியம் அது. பெண்ணுடலின் மீது - குறிப்பாகப் பெண்ணின் மார்பின்மீதும் தோளின் மீதும் - காதலனாலோ கணவனாலோ அது வரையப்பட்டது. அழகுணர்ச்சி ததும்புவதாலும் பக்திப் பிரவாகத்தாலும் போர் வெறியாலும் இன்னபிற காரணங்களாலும் கலைகள் பிறக்கலாம். அன்பும் காமமும் உந்துசக்தியாக இருந்து தோற்றுவிக்கும் ஒரே ஓவியக்கலை தொய்யில் மட்டுமே.

தொய்யில் மதம் சாராத ஒரு கலை: இருவர் சார்ந்த தனியோர் கலை வடிவம் (Private Art Form). ஓரளவு மூன்றாமவர் அறியாத இரகசியக் கலையும்கூட. களவு வாழ்க்கையில் தொய்யிலுக்கு சிறப்பான இடம் உண்டு. தனது காதலியின் சினந்து எழுகின்ற தனங்களின் மீதுதான் வரைந்த தொய்யிலைக் காதலியைக் காப்போர் அறிய மாட்டார்கள் என்பதை உருத்துஎழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் என்று காதலன் சொல்வதாகக் கோழிக்கொற்றன் குறுந்தொ கையில் பாடியுள்ளார்.

கூடுதலுக்குமுன் தலைவன் தலைவியின் உடலில் தொய்யில் எழுதுதல் மரபு. நக்கீரனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவிக்குப் பொட்டிட்டு, மலர்களின் மகரந்தத்தை மார்பில் அப்பி, தொய்யில் வரைந்து பகலிலும் மலர் பரப்பிய படுக்கையில் தலைவன் கூடியிருந்ததாக உள்ளது. சந்தனம், குங்குமம், செம்பஞ்சுக் குழம்பு, பச்சைக் கருப்பூரம் ஆகியவை தொய்யில் எழுதப்பயன்பட்ட மூலப்பொருட்கள். குளிர்ச்சி கொண்ட உயர்ந்த சந்தன மரத்தினது கொழுவிய கட்டையினைத் தேய்த்து அதனோடு பச்சைக் கருப்பூரம் பெய்யப்பட்ட நுண்மையுடைய குழம்பினால் தொய்யில் எழுதப்பட்டதைப் பெருந்தொகைப் பாடல்

“குளிர்கொள் சாதில் சந்தனக் கொழுங்குறப்

பளிதம் பெய்த பரும்பிற் தேர்வையிர்”

என்கிறது.

தொய்யில் பல வண்ணங்களில் இருந்திருக்கவேண்டும். நெடுநல்வாடையில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் இருந்த தொய்யில் வெண்ணிறத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தனம் இளமஞ்சள் வண்ணத்தையும் குங்குமமும் செம்பஞ்சும் சிகப்பு நிறத்தையும் தந்திருக்கவேண்டும்.

தொய்யில் பூசும் குழம்பு செய்யப்பயன்பட்ட பொருட்கள் அனைத்துமே அழகிய வண்ணங்கள் உடையவை என்பது மட்டுமல்லாமல் இனிய நறுமணம் தருபவை. தலைவனுக்கும் தலைவிக்கும் தீண்டுதலின்பம், காண்தலின்பம் மற்றும் நுகர்ச்சியின்பத்தை ஒருங்கே ஓவியங்கள் வழங்கின.

இலை, மலர், கரும்பு, வள்ளிக்கொடி போன்ற வடிவங்களாகத் தொய்யிலைத் தீட்டுதல் வழக்கம். “எழுந்திரைமா கடலாடை இருநிலமாம் மகள்மார்பில் அழுந்துபட எழுதும்இலைத்தொழில் தொய்யில்” எனப் பெரியபுராணத்தில் வருகிறது. ”உழுந்து உடைக்கழுந்தில் கரும்புடைப் பணைத்தோள்” என்பது குறுந்தொகைப் பாடல். வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள் என்ற நெடுநல்வாடை வரியில் ‘வள்ளி’ என்ற சொல்லே தொய்யிலை ஆகுபெயராகக் குறிக்கிறது. இதேபோலக் ’கரும்பு’ ‘குங்குமம்’ என்ற பதங்களும் ‘தொய்யில்’ என்பதற்கு ஈடாக இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. கோவலனைப் பிரிந்த கண்ணகி ‘மார்பில் குங்குமம் எழுதாள்’ என இளங்கோ சொல்கிறார். ”தெரிவேய்தோள் கரும்பு எழுதி” எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நேர்கோடுகளாலும் வளைகோடுகளாலும் ஆன புறவரிச்சித்திரமாகத் தொய்யில் இருந்திருக்க வேண்டும். “புள்ளி தொய்யில் பொறிபடுசுணங்கின்” என அகநானூறு சொல்வதால் தொய்யிலில் தற்காலக் கோலங்களில் போன்று புள்ளிகளும் இருந்திருக்கலாம். ஓலையில் எழுதவும் கண்ணுக்கு மையெழுதவும் கருவிகள் இருந்ததுபோல் தொய்யில் எழுதவும் சிறப்பான உபகரணம் இருந்தது. ”மகளிர் கோலால் வன முலையாகத் தொழில்பெற வரிப்பது தொய்யிலாகும்” என்ற பிங்கல நிகண்டின் வரையறையால் கோலினால் தொய்யில் சித்திரம் தீட்டப்பட்டதை அறிகிறோம்.

தொய்யிலின் ஆயுள் மிகவும் குறுகியது. தற்காலத்தில் முற்றங்களில் இடும் கோலங்களை யாரும் கற்பிக்காமல் மகளிர் இயல்பாகவே வரைதல் போல தொய்யிலை ஆடவர் வரையச் சிறப்பான பயிற்சிகள் தேவையில்லை. ஆயினும் தொய்யிற் கலையைக் கூத்தர்கள் தலைவனுக்கு கற்பித்தனர் எனக் கருதுவோரும் உண்டு.

காதலன் அல்லது கணவன் அல்லாது பிறரும் அறிதாகத் தொய்யில் சித்திரங்களைத் தீட்டியிருக்க வாய்ப்புண்டு. அத்தகைய தொய்யில் ஓவியங்கள் ஒருவித ஒப்பனை மட்டுமே. கண்ணகியின் மார்பில் அவள் நலம் பாராட்டுநர் (பணிப்பெண்கள்) தொய்யில் எழுதினால் போதுமே: ஏன் பெரியமுத்து மாலையைச் சூட்டியுள்ளனர் என்ற பொருள்பட “திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்” என்று கோவலன் கூறுகிறான்.

தொய்யில் சித்திரங்கள் வரைதல் எப்போது தொடங்கியது என அறிய முடியவில்லை, சங்க இலக்கியங்களில் மிகப்பழமையனதாகக் கருதப்படும் குறுந்தொகைப் பாடல்கள் இயற்றப்பட்டபோது தொய்யில் வரைதல் நடைமுறையில் இருந்தது. காப்பிய காலங்களிலும், பக்தி இலக்கிய காலங்களிலும் தொடர்ந்த தொய்யில் சித்திரங்களைப் பற்றிக் கடைசியாகக் கூறுபவர் இன்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதர்.

திருப்புகழ் 661 ஆம் செய்யுள் “தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யுமைய இடையா லும்” எனத் தொடங்குகிறது. அதன் பொருள்: மார்பின் மீது தொய்யில் எழுதினாலே நெகிழ்ந்து தளர்வதுபோல் இளைத்துள்ள மெல்லிய இடையுடைய விலைமாதர்கள் பாசாங்கு செய்வர் நற்றிணை, கலித்தொகை போன்ற எட்டுத்தொகை நூல்கள், மதுரைக்காஞ்சி போன்ற பத்துப்பாட்டு நூல்கள், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்கள், மேருமந்திரபுராணம் போன்ற புராணங்கள், கம்பராமாயணம் போன்ற இதிகாசங்கள், அம்பிகாபதிக் கோவை போன்ற சிற்றிலக்கியங்களெல்லாம் கூறும் தொய்யில் கலை, அருணகிரிநாதர் காலமான 15ஆம் நூற்றாண்டிற்குப்பின் வழக்கொழிந்தது ஏன்?

பழங்காலப் பெண்கள் மேலாடை அணிந்ததில்லை. மேலாடை அணியும் பழக்கம் வந்ததும் தொய்யில் கலை மறைந்ததா? களவு வாழ்க்கை தவறானது என்ற கருத்து எழுந்ததனால் தொய்யில் காணாமல் போனதா? காதலே தமிழரிடையே அருகியதால் தொய்யில் தொலைந்ததா? தமிழரின் அழகுணர்ச்சி மங்கியதால் அது நிகழ்ந்ததா? இவற்றுள் ஒன்றோ பலவோ காரணமாயிருக்கலாம்: எவ்வாறெனினும் அன்பையும் காதலையும் குழைத்து வரையப்பட்ட ஓவியங்கள் நம் காட்சியில் மட்டுமல்லாமல் கருத்திலிருந்தும் மறைந்துவிட்டன.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top