மதிப்பெண்ணை குறிக்கோளாய் கொண்டு சாதனைகளை இழக்கும் மாணவர்கள்!

மதிப்பெண்ணை குறிக்கோளாய் கொண்டு சாதனைகளை இழக்கும் மாணவர்கள்!

12ம் வகுப்பு முடித்தவுடன் பல வீடுகளில் எழுகின்ற கேள்விகள் அடுத்தது என்ன படிப்பு? வசதியுள்ளோர், வசதியில்லாதவர் என்ற பாகுபாடின்றி அடுத்த மேற்படிப்பு பொறியியல் கல்லூரியிலும் மருத்துவ கல்லூரியிலும் தான் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

அதை குறிவைத்தே 12ம் வகுப்புக்கான பயிற்சிகள், மாலை நேரக்கல்வி, துணைப் பாடப்புத்தகங்கள் தனிப்பட்ட முறையில் அதற்கான பயிற்சி என 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் வாழ்வு 24 மணி நேர ATM இயந்திரமாகி விட்டது. இவ்வளவு இயந்திர கதிக்கும் ஆளாக்கிய பெற்றோரின் நிலை அதற்கும் மேலே. சில பெற்றோர் தங்களது கௌரவமே அப்படிப்புகளில்தான் அடங்கியுள்ளது என எண்ணுகின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை குழந்தைகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பொறியாளர் மற்றும் மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க தேவைப்படும் பொருளாதார நிலை தயார்செய்வதிலும் அவர்களது சிந்தனை 24 மணி நேரமும் அதையே சிந்திக்கின்றது. சிலர் நோயாளி ஆகின்றனர். குழந்தைகளும் பெற்றோரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

குழந்தைகளின் ஆளுமைப்பண்புகளை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை தயவுசெய்து பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மதிப்பெண் உருவாக்குகிற ஒரு குழந்தை வாழ்வின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள தவறிவிடுகிறது. நாமும் அதற்கு பொறுப்பாகிறோம்.

கட்டாயத்தின் பேரில் பொறியியல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறாமல் அப்படிப்பை முழுமையடைய முடியாது கைவிடுகின்றனர். மதிப்பெண் சதவீதம் குறைவாக வாங்கியவர்கள் அரசாங்க வேலையில் கணக்கராக பணிபுரிகின்றனர். சிலர் பள்ளியில் ஆசிரியப்பணி புரிகின்றனர். இதற்காகவா இலட்சங்கள் கட்டி பெற்றோர் படிக்க வைக்கின்றனர்? மறுபக்கம் இலட்சங்கள் கொட்டி படிக்க வைப்பதால் இழந்த இலட்சத்தை அடுத்து எப்படி சம்பாதிப்பது என்ற எண்ணம் மேலோங்கியிருப்பதையும் காணமுடிகிறது. அதனால் துறைசார்ந்த வல்லுநர்களை நாம் காணமுடியாமல் போய்விடுகிறது என்பதும் வருத்தத்திற்குரியது. குழந்தைகளின் திறமை என்ன? அவனுள் இருக்கும் ஆர்வம் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத பெற்றோரால்தான் இந்தியா பல திறமைசாலிகளை சாதனையாளர்களை இழக்கிறது என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

குழந்தைகளின் குணநலத்தில் மாற்றம்:-

கட்டாயத்தின் பேரில் எதுவும் திணிக்கப்படும் போது குழந்தைகளின் குணநலன்களிலும் மாறுபாடு ஏற்படுகிறது. தன் கனவுகளை, திறமைகளை புதைகுழியில் புதைத்துவிட்டு பெற்றோரின் கட்டாயத்திற்காக தன்னை மாற்றும் குழந்தை கோபக்காரனாக மாறுகிறான் அக்கோபம் வேறுவிதமாக வெளிப்படும். ஒரு நல்ல வேலை கிடைக்காமல் தன் சுய கௌரவத்தையும் இழக்கும் நிலை. சமுதாயத்தின் பாலும் அக்கோபம் திரும்புகிறது. பெற்றோரின் மேல் வெறுப்புகூட உருவாகிறது. தன்னை, தன் ஆசைகளை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம் பெற்றோரை மதிக்காமல், வயதான காலத்தில் அவர்களை கவனிக்கும் கடமையைக்கூட அவர்களால் செய்ய இயலாமல்போய் விடுகிறது. தன்னால் நாம் நினைத்ததை சாதிக்க முடியவில்லையே, அதற்கும் மேலாக சாதிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் பலரை குடிபோதை மற்றும் தவறான செயல்கள் போன்றவற்றிற்கு அடிமையாக்கி விடுகிறது. இத்தகைய இளைய சமுதாயத்தை பெரியவர்கள் உருவாக்க வேண்டுமா?

அன்பார்ந்த பெற்றோர்களே:

12ம் வகுப்பு தேர்வுகள் முடிவடையப்போகும் இத்தருணத்தில் உங்கள் குழந்தைகளோடு இணைந்து பேசுங்கள். ஆலோசியுங்கள். அக்குழந்தையின் திறமைகளை அறிந்து அத்துறை சார்ந்த மக்களிடம் ஆலோசனை கேளுங்கள். எத்தனையோ விதமான கல்வி இருக்கிறது. திறமைக்கேற்றக் கல்வி என்பது தற்போதைய சூழலில் கொட்டிக் கிடக்கிறது. வலைதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதிகூட நம் உள்ளங்கையில் உள்ளது. குழந்தையை உடல் ரீதியான ஆரோக்கியத்திற்கு முழுகவனமும் அக்கறையும் எடுக்கும் பெற்றோர்களே உங்கள் குழந்தையின் உளரீதியான ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். திறமைகள் அறிந்து மதிப்பு கொடுங்கள். பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறமைக்கும் மதிப்பு அளிக்கும்போது, அவனும் உங்களுக்கு மதிப்பளிப்பான். உறுதியாக உங்கள் குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வி கற்கும்போது சாதனையாளர்களாக சாதிப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு:

திருமதி. மி. மரிய அமலி, தலைமையாசிரியை, பல்லோட்டி மேல்நிலைப் பள்ளி, பில்லர் வளாகம், பில்லர் சலை, மதுரை - 19. அலைபேசி: 9566972165

Tags: News, Lifestyle, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top