அமைதியின் சிகரமாய் விளங்குகிறதா உங்கள் குழந்தை? நீங்க இதைப் படிங்க முதல்ல…

அமைதியின் சிகரமாய் விளங்குகிறதா உங்கள் குழந்தை? நீங்க இதைப் படிங்க முதல்ல…

என் பிள்ளை ரொம்ப அமைதி! இருக்கிற இடமே தெரியாது, என்று தங்கள் குழந்தையின் அமைதிப்போக்கை ரசித்து பாராட்டும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்குத்தான்! பிறந்தது முதல் பள்ளி, கல்லூரிக் காலம் வரை, பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கேற்ற இயல்பான குணங்களோடு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நார்மலாக இருக்கிறார்கள் என்று பொருள்.

துருதுருவென இருக்க வேண்டிய வயதில் அமைதியாக மூலையில் முடங்கிக் கிடந்தால், அதைப் பார்த்துவிட்டு, பல பெற்றோர், ஆஹா! நம் பிள்ளை இவ்வளவு அமைதியாக இருக்கிறதே! என்று பெருமைப்படுவதைத் தவிர்த்து, அந்த சமயத்தில்தான் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆர்ப்பரித்து, ஆடிப்பாட வேண்டிய வயதில் அமைதியாக இருக்கும் குழந்தை ஆபத்தானதே!

அப்போது, அந்தக் குழந்தையின் மனதில் ஏதோ ஒரு மிகப்பெரிய தாக்கம் இருக்கிறதென்று பொருள். அந்தத்தாக்கம் என்னவென்று கண்டிப்பாக அறிய முற்பட வேண்டும். வயது ஏறஏற பிள்ளைகள் தம் பெற்றோருடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. மாறாக, தன் சக வயதுடைய நண்பர்களிடமும், தோழிகளிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த தோழர்களும், தோழியரும் அவர்கள் மனச்சுமையை இறக்கி வைக்கும் சுமைதாங்கி கற்கள். தாக்கத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாமேயொழிய அதற்கான தீர்வு நண்பர்களிடையே கிடைப்பதில்லை. இதற்கு அவர்களின் வயதும், அனுபவமின்மையும் ஒரு காரணம்.

பள்ளியிலோ, வெளியிடங்களிலோ, தங்களுக்கு ஏற்படும் சிறிய அவமதிப்புகள், மற்றவர்களின் கேலிப்பேச்சுக்களைக்கூட தாங்கிக்கொள்ள இயலாத மென்மை உள்ளம் அது! அந்த மாதிரியான கசப்பான அனுபவங்களை, அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான புரிந்துணர்வையும், பாதுகாப்பையும் பெற்றோர்கள், தங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தருவார்கள், என்ற நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

பல பெற்றோர்கள் கோட்டை விடும் தருணம் இதுதான். பிள்ளைகளை எப்போதும், கண்டிப்புடனே வளர்க்க வேண்டும், அந்த பயம் இருந்தால்தான் ஒழுக்கமாக பிள்ளைகள் இருப்பார்கள், என்பது பொதுவான பெற்றோர்கள் போடும் கோடு!

ஆனால், அது எல்லைக்கோடாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு பிள்ளைகளின் நடவடிக்கைகளையும், பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். தங்களது பிள்ளைகளின் இயல்பு நிலைகளில் மாற்றம் தென்படும்போது, அவர்கள் பிள்ளைகளை சக நண்பர்களாகப் பாவித்து, அவர்களது மனக்கிலேசத்தைப் போக்கி, ‘இதற்கு தானா இத்தனை வேதனை!’, இவையெல்லாம் எல்லோர் வாழ்விலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு தான்! இதற்காக கவலைப்படாமல் சந்தோஷமாக இரு! என்று உற்சாகப்படுத்தினால், பிள்ளைகளின் பெற்றோர்தான் அவர்களின் முதல் நண்பராக இருப்பார்கள்.

இன்று, நாம் அன்றாட செய்தித்தாள்களில் காணும் பல துயரச்செய்திகளுக்கு மூல காரணம், பெற்றோர்களின் எல்லைக்கோடுதான்! நம் ஆழ்மனதில் எப்போதும், இதுவரை நம் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் பதிவுகள்தான் 70 சதவீதம் இருக்கும். 10 சதவீதம் நிகழ்காலப் பதிவுகளும், மீதி 20 சதவீதம் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பற்றியும் இருக்கும். கடந்த காலம் என்பது முடிந்துபோன ஒன்று! அதனால்தான் அதற்கு இறந்த காலம் என்று பெயர். அதில் நடைபெற்ற நல்ல நிகழ்வுகளை விட மோசமான நிகழ்வின் தாக்கம்தான், நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும். அதைக் களைந்தால்தான், நிகழ்கால நிஜங்களுடன் கைகோர்த்து நடந்து, எதிர்காலம் என்ற கனியைப் பறிக்க துணையாய் இருக்கும் ஏணிகளாய் பெற்றோர்கள் எப்போதும் இருக்க வேண்டும்!

அது அவர்களின் கடமை! எந்தப் பிள்ளையும், பெற்றோர்களின் விருப்பத்தினால்தான் இந்த பூமியில் பிறக்கிறது. அதனால், அந்தக் குழந்தைக்குச் சொந்தம் அடையும் பெற்றோர், அந்தப் பிள்ளைகளுக்கு சொந்தமாக மட்டுமில்லாமல், நல்ல நட்பாக கடைசிவரை இருக்க பெற்றோரே என்ற நம்பிக்கை எப்போதும் இருக்கும். அந்த நம்பிக்கைதான் அவர்களை நல்ல பாதையில் வழிநடத்தி வாழ்வின் நிதர்சனங்களை உணரச் செய்து, தவறான சாக்கடைப் பாதைகளை மிதிக்காமல் தாண்டச் செய்யும்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top