மதுரை சிறார்களின் புதிய குற்றப்பரிமாணம்!

மதுரை சிறார்களின் புதிய குற்றப்பரிமாணம்!

மதுரையின் காவல்துறை வட்டாரத்தில் விசாரணைக்காகவும் புலனாய்வுகளுக்காகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் தற்போதைய முக்கிய பிரச்சினை என்னவாயிருக்கும் என கேட்டபோது, மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர், குற்றப்பிரிவில் பணியாற்றிவரும் திருமதி ஆர்.ஜெயந்தி அவர்கள் அளித்த பதிலை மதுரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழே தொகுத்து அளித்திருக்கின்றோம்.

தேவைகளும் ஆடம்பரங்களும் அதிகரித்துக்கொண்டே போகும் இந்த காலக்கட்டத்தில், சிலர் அதனை நியாயமான முறையில் அடைவதற்கு முயற்சிக்கின்றார்கள். மற்றும் சிலர் குறுக்கு வழியில் சென்று மற்றவர்களை துன்பப்படுத்தியாவது தனக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துகொள்ள விரும்புகின்றார்கள். இதில் இரண்டாவது வகையானவர்கள் மற்றவர்களின் தனி சுதந்திரத்திற்கும், அடுத்தவரின் உடைமைகளுக்கும் பாதகத்தை விளைவித்தாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். இந்த வகை மக்களால்தான் சட்டமும் ஒழுங்கும் பாதிக்கப்பட்டு குற்றப்பின்னணிக்கு வித்திடப்படுகின்றது.

மக்கள் தொகை கூடிவிட்ட காரணத்தினாலும், அவர்களின் தேவைகள் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டு வருவதாலும், தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும் எல்லாவிதமான குற்றங்களும் நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களில் ஒரு பகுதியினர் செய்கின்ற எல்லாவகை குற்றங்களையும் காவல் துறையினர் தகுந்த முறையில் விசாரித்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் மற்ற நகரங்களைப்போல் அல்லாமல், தற்போது ஒரு புதிய குற்றப்பரிமாணம் உருவாகியுள்ளதை நாம் உணர்ந்து வருகின்றோம். அதாவது பள்ளி கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் தம்முடைய ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, வழக்கமான குற்ற செயல்களைப் புரிந்து காவல்துறையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பழம்பெரும் குற்றவாளிகளுடன் இணைந்து அல்லது அவர்களுக்கு கீழ்ப்பட்ட குழுவாக செயல்பட்டு செயின் மற்றும் செல்போன்களை மதுரை மாநகரில் தொடர்ந்து கொள்ளை அடித்து வருகின்றார்கள்.

இதில் மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், திருட்டை செய்பவர் கல்வி பயின்றுவரும் இளையவர். நல்ல பண்புகளுடனும் சிறந்த கல்வித் தகுதியுடனும் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியதற்கு பதிலாக “திருட்டுப்பயல்” என்ற பட்டத்துடன் சமூகத்தில் துஷ்டமனிதன் என்ற அந்தஸ்த்தில் குற்றவாளி என்னும் முத்திரை குத்தப்பட்டு விடுகின்றான். ஒரு செல்போனையோ அல்லது ஒரு பெண்ணின் செயினையோ கொள்ளையடித்தால் அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து மிகக்குறைந்த காலத்திற்குதான் அந்த மாணவர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். ஆனாலும் அந்த மகிழ்ச்சியானது மிகவும் தற்காலிகமானதே. அத்துடன் குற்றச்செயலுக்காக காவல் துறையால் எச்சரிக்கப்பட்டும் தண்டனை வழங்கப்பட்டும் விடப்படும் அந்த மாணவனின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே நிற்கும்.

மேலும் ஒரு முறை குற்றச்செயலுக்காக விசாரிக்கப்பட்டு, தண்டனையும் அடைந்து விட்டால், திருட்டை மேற்கொள்வதற்கான அந்த உடன்பிறந்த அச்சமும், கூச்சமும் அவர்களை விட்டு அகன்றே போய்விடும். பின்பு அவர்கள் வாழ்நாள் முழுவதும் குற்றச்செயல் புரிவதிலேயே நாட்டம் சென்று பழக்கப்பட்ட குற்றவாளியாக மாறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மதுரையில் தற்போது செயின் மற்றும் செல்போன் திருடும் இளைய சமுதாயத்தினர் அதிகமாக இருக்கின்றார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை திருடுவதற்கு ஊக்கமளித்து தைரியமளித்து இயக்குகின்ற குழுக்களும் தனியாக உள்ளது கவனத்திற்கு வந்துள்ளது. தாமே திருடுவதைக் காட்டிலும், படிக்கின்ற மாணவர்களை இப்படியான திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுத்துவது யாராக இருந்தாலும் அது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும், மேலும் இது மிகவும் கொடூரமான செயலுமாகும். வளர்ந்து செழித்துவரும் ரோஜாச்செடியில் கடுமையான உஷ்ணத்தை கொண்டிருக்கும் வெண்ணீரை ஊற்றுவதற்கு சமமாகும். இப்படிப்பட்ட குழுக்கள், இத்தகைய குற்றங்களின் கடுமையை உணர்ந்து தாமாகவே இந்த செயல்களை விட்டொழிக்க வேண்டும் என்பதுதான் சமுதாய விருப்பமாக இருக்கின்றது.

மாணவர்களும், செயின் மற்றும் செல்போன் கொள்ளைகள் தம்முடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்தாது என்ற மிகப்பெரிய உண்மையை உள்ளபடி உணர்ந்து இந்த கொடூரமான செயலை கைவிட்டு தம்முடைய எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது கடமையாகும். இம்மாதிரியான குற்றங்களை மாணவர்கள் இழைக்கும் போது தன்னுடைய முயற்சி நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பதட்டத்திலும் ஆரவாரத்திலும் எதிராளியை கொலை செய்யக்கூட எத்தனிக்கின்றார்கள். இந்தச்செயல் திருட்டை விட மோசமானதொரு நிலைக்கு மாணவர்களை தள்ளி கொலைகார பட்டத்தையும் கொடுத்து விடும். எனவே மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் விலையுயர்ந்த செல்போன்களையும், மைனர் செயின்களையும் உடமைகளாக வைத்துக்கொள்வதை அறவே தவிர்த்துக் கொள்வது நல்லதாகும்.

அதைப்போலவே, பெற்றோர்களும் படிக்கின்ற தம்முடைய பிள்ளைகள் எங்கெல்லாம் செல்கின்றார்கள், யார் கூடவெல்லாம் பழகுகின்றார்கள். பள்ளி கல்லூரி வகுப்புகளுக்கு பின்பு அவர்கள் நேராக வீட்டுக்கு வருகின்றார்களா அல்லது வேறு எங்காவது சென்று வருகின்றார்களா, அவர்களுக்கு பெண் தோழிகள் இருக்கின்றார்களா ஆகிய எல்லாவற்றையும் துருவி துருவி கேட்டு, பார்த்து, விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். அதிலும் தாய் தந்தையர் இருவருமே வேலைக்குச் செல்லுகின்ற வீடுகளில், மாணவர்களும் மாணவிகளும் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச தனிமையாலும் சுதந்திரத்தாலும் தம்மையறியாமலே பல்வேறு விதமான குற்றச்செயல்களுக்கு ஆட்படுகின்றார்கள். எனவே பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்லும் வீடுகளில், பிள்ளைகளைப் பற்றிய அக்கறையும் கணிப்பும் கூடுதலாக இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

அன்றாட வேலைகளுக்கு வெளியில் செல்லும் குடும்ப பெண்கள், விலைமதிப்புடைய நிறைய தங்க நகைகளை அணிந்துகொண்டு வெளியில் செல்வது தம்முடைய சொந்த பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையும். எனவே பெண்களும் மிகக்குறைந்த அளவில் அத்தியாவசியத்தை பொறுத்து நகைகளை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக கோயில்களுக்கும் விழாக்களுக்கும், குடும்ப வைபவங்களுக்கும் செல்கின்ற பெண்கள் முடிந்தவரையில் அதிக மதிப்பிலான தங்க நகைகளை கூடுதலாக அணிந்து செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களும், கதவை திறக்கும்போதும் உஷாராக இருந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Tags: News, Madurai News, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top