நாகராஜ்: காற்றில் கரைந்த கனவு!

நாகராஜ்: காற்றில் கரைந்த கனவு!

 கடந்த ஞாயிறும் இந்த ஞாயிறும் ஒன்றுபோல் இல்லை குமரேசன் பாபு தம்பதியினருக்கு! கடந்த ஞாயிறு உயிரோடிருந்த அவர்களது மகன் நாகராஜ் இந்த ஞாயிறு உயிருடன் இல்லை! காரணம், ஆயிரம் ரூபாய் கூடப் பெறாத ஒரு செல்ஃபோன்!

 
“பார்த்து வாப்பா, பார்த்து வாப்பான்னு பத்து தடவையாவது சொல்லியிருப்பேன் சார்! ‘நா பத்திரமா வர்றேன். நீங்க கவனமா அம்மாவக் கூட்டிக்கிட்டுப் போங்க’ ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னான் சார். வீட்டுக்கு வந்தப்புறமும் மனசு கேக்கல. பஸ் ஏறிட்டியாப்பான்னு கேட்டேன். ‘ஏறிட்டேன்ப்பா.. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப் பேன்’னான் சார். அதுதான் சார் எம் மகன் என்கிட்ட கடைசியாப் பேசு னது!” என்று குலுங்கி அழுகிறார் குமரேசன் பாபு. ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தை ஏதுமில்லை!
மதுரை மஹால் பகுதியைச் சேர்ந்தது குமரேசன் பாபு குடும்பம். ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று அளவான குடும்பம். மகள் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார். கடைக்குட்டி நாகராஜ் மதுரையின் தனியார் பள்ளியொன்றில் பிளஸ் டூ படித்துவந்தவர். அவருடைய களையான முகமே காட்டிக் கொடுத்துவிடும் அவர் பரமசாது என்று! ஆனால் படிப்பில் கில்லி! நடைபெற்று வரும் பிளஸ் டூ பரீட்சையில் இரண்டு பரீட்சைகளை எழுதிவிட்டார். கடந்த திங்கட்கிழமை மூன்றாவது பரீட்சைக்குத் தயாராகியிருந்தார். ஆனால் அதற்கிடையில்...!
சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை, பரீட்சைக்கு நடுவில் தன்னைக்கொஞ்சம் ரிலாக்ஸ் படுத்திக்கொள்ள தன் பெற்றோருடன் வண்டியூரில் உள்ள தன் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தார் நாகராஜ். அங்கேயே இரவு வரை இருந்து இனிக்க இனிக்கக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பாவம், நாகராஜ்! அதுதான் தன் சொந்தங்களுடன் தான் பேசும் கடைசி நாள் என்று அவருக்கு அப்போது தெரிந் திருக்காது.
 
இரவு உணவு முடித்து விட்டு சுமார் 8.45 மணி-க்கு அங்கிருந்து வீடு திரும்பத் தயாராகினர். குமரேசனும் அவரது மனைவியும் பைக்கில் ஏறிக்கொள்ள, “நீங்க போங்கப்பா, நா பின்னாடியே பஸ்ஸுல வந்துடுறேன்” என்று கூறினார் நாகராஜ். உள்மனதில் ஏதோ கனமானதோ, என்னவோ...  “பார்த்துப் பத்திரமா வாப்பா” என்று கூறினார் குமரேசன். 
 
“அப்பா... பிளஸ் டூ பையன்ப்பா... வந்துடுறேன், நீங்க போங்க!” என்று நாகராஜ் தைரிய மாகச் சொல்ல, சற்று நம்பிக்கை ஏற்பட்டவராக கிளட்ச்சை விடுவித்தார் குமரேசன்!
சில நிமிடங்களில் பாட்டியிடமும் மற்ற உறவினர்களிடமும் விடைபெற்ற நாகராஜ், தெருவுக்கு வந்து ஷேர் ஆட்டோ பிடித்து இரவு சுமார் 9.30 மணி-க்கு மிஷன் ஆஸ்பத்திரி செயின்ட் மேரிஸ் பஸ் ஸ்டாப் அருகில் இறங்கினார். அங்கே தான் நாகராஜுக்காகக் காத்திருந்தான் எமன்!
 
மெயின் ரோடைத் தாண்டி தன் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே வந்து சேர்ந்தார்கள் மூன்று பேர். அவர்களுக்கும் ஏறக்குறைய நாகராஜின் வயதுதான் இருக்கும். வழக்கமாக அந்தப் பகுதி ஜன நடமாட்டம் நிறைந்தேயிருக்கும். ஆனால், அன்று ஞாயிற்றுக் கிழமை, அதுவும் இரவு ஒன்பதரை மணி என்பதால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளரவமே இல்லை. இது வசதியாகப் போய்விட்டது அந்த மூன்று பேருக்கும்! 
 
திடுதிப்பென்று மூன்று பேரும் நாகராஜை சுற்றி வளைத்தனர். அவசரமாகக் கால் செய்ய வேண் டும், போனைத் தா என்று கேட்டி ருக்கிறார்கள். “பேலன்ஸ் இல் லையே...” என்று நாகராஜ் கூற, தன்னிடம் உள்ள சிம்மைப் போட் டுப் பேசுவதாகக் கூறியிருக்கிறான் ஒருவன். தன் வயதை ஒத்தவர்கள் தானே என்பதால் நாகராஜும் சினே கத்துடன் தன் செல்போனில் இருந்து சிம்மைக் கழற்றிவிட்டுக் கொடுத்தார்.
ஆனால் அவர்களோ போனை வாங்கிப் பேசுவதாக பாவ்லா காட்டிவிட்டு, போனையும் தம்முடன் எடுத்துச் செல்ல முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ், போனைத் தருமாறு கேட்க, அவர்கள் முடியாது என மறுக்க... ஆரம்பித்தது வாக்கு வாதம்!
 
பேச்சுவார்த்தை தடிக்க, அவர் கள் கையில் இருந்த தன் போனைப் பிடுங்க நாகராஜ் முயற்சித்திருக்கிறார். ஆளேயில்லாத தெருதான் என்றாலும், யாராவது வந்துவிடு வார்களோ என்ற பயம் அந்த மூவரிடமும் தொற்றிக்கொண்டது. அந்தப் பதற்றத்தில், அவர்களில் ஒருவன் தன் வசமிருந்த கத்தியை எடுத்து நாகராஜின் கால் தொடையில் செருகியிருக்கிறான். இந்தத் தாக்குதலை எதிர்பாராத நாகராஜ் அலறியபடி சாய்ந்திருக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட செல்போன் திருட்டு கும்பல், நாகராஜின் ஆயிரம் ரூபாய் கூடப் பெறாத அந்த செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டது.
 
இரத்தம் வழிய வழிய, சாலை யைக் கடந்து வீட்டுக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தில் தப்பி ஓடத்தொடங்கியிருக்கிறார் நாகராஜ். ஆனால் கால்தொடையில் முக்கியமான நரம்பில் கத்தி பாய்ந்த தால், இரத்தம் அளவுக்கதிகமாக வெளியேறத் தொடங்கியுள்ளது. அதனால் சுய நினைவிழந்து LIC அலுவலகம் முன்பாகவே மயங்கிச் சரிந்தார்.
 
சுமார் 9.45 மணியளவில், நாகராஜ் விழுந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர், நாகராஜிடமிருந்த சிம்மை எடுத்து தன்னுடைய செல்போனில் போட்டுள்ளார். மகனை காணாமல் அவனுக்கு கால்செய்துகொண்டே இருந்த குமரேசனின் அழைப்பு அந்த நேரத்தில் வர, நாகராஜ்-ன் நிலைமை குறித்து கூறியிருக்கிறார் அந்த இளைஞன். தகவலறிந்த குமரேசன் பாபு சுமார் 9.50 மணியளவில் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தவுடன், நாகராஜ் மயங்கிய நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அளவுக்கதிகமான இரத்தப் போக்கினால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர்பிரிந்துவிட்டது.
 
மருத்துவ சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தபோதும் போலிஸ், குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சி தாமதமாக எடுக்கப்பட்டது என்கிறார்கள் நாகராஜின் உறவினர்கள். இதனால் நாகராஜின் உடலை வாங்கி, நடவடிக்கைகளை துரிதபடுத்தவும் இது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தவும் போராட்டத்தில் குதித்தனர். மதுரை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் குமரேசன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்கள் மாவட்ட ஆட்சியருடனும் போலீஸ் கண்காணிப்பாளருடனும் பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகளைப் பிடித்துவிடுவதாகக் கொடுத்த வாக்குறுதியின் பேரில் நாகராஜின் உறவினர்களும் பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
 
கொஞ்சம் தாமதமானாலும் சொன்னபடியே ஆதாரங்களுடன் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டது காவல் துறை. என்றாலும்...
......நாகராஜ் இன்று உயிருடன் இல்லை! தன் மகனையும் அவனது கல்வியையும் அஸ்திவாரமாகக் கொண்டு குமரேசன் பாபு எழுப்பிய கனவுக்கோட்டை இன்று தவிடு பொடியாகிக் கிடக்கிறது. தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்ட நாகராஜுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்... அனைத்தும் அவனது உயிருடன் சேர்ந்து காற்றில் கரைந்துவிட்டன.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top