தமிழக தென்மாவட்ட விவசாயிகளுக்கு அரியதோர் வாய்ப்பாய் “அக்ரி டெக் 2017”!

தமிழக தென்மாவட்ட விவசாயிகளுக்கு அரியதோர் வாய்ப்பாய் “அக்ரி டெக் 2017”!

மக்களின் பசியமர்த்தும் புனித பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு நாம் அனைவரும் அன்புக்கரமும் நட்புக்கரமும் நீட்ட வேண்டியது நமது தலையாய கடமையாகும். 

தொழிலும் தொழில் நுட்பமும் எவ்வளவுதான் மேன்மை அடைந்திருந்தாலும் ஏறுடனும் கலப்பையுடனும் நெற்றி வேர்வையைச் சிந்தி தம் வேலையைச் செய்து உணவை தராவிட்டால் எங்கெங்கும் பசி நிறைந்து காணப்படும். இதனால்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவரும் “உழவுக்கு வந்தனை செய்வோம்“ என்னும் விதத்தில் விவசாய பெருமக்களின் பெருமையை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இத்தகைய பெருமைமிகு விவசாயிகளுக்கு பல விதத்திலும் உதவுகின்ற வகையில் “அக்ரி எக்ஸ்போ” என்கின்ற விவசாய கண்காட்சி மதுரையின் தமுக்கம் மைதானத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியால் கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் 10 தென்மாவட்டங்களை சார்ந்தவர்கள் பெரும் பயன் எய்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமில்லை. இதில், விவசாய உபகரணங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் VRV Energies, Ideal Pumps, Larsen & Toubro, Sathyam Bio pvt ltd., Sonalika Tractors, Isuzu Tractors, Husqvarna power tools, SKM Animal feeds, Nayagara Solutions, ARB Bearings போன்ற 200 புகழ்மிக்க நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சியில் “விதைப்பது முதல் அறுவடை செய்கின்ற வரை” தேவைப்படுகின்ற அனைத்து கருவிகளும் இயந்திரங்களும் விவசாயிகளின் நன்மைக்காக காட்சிபடுத்தப்படுகின்றன. மதுரையில் 2வது முறையாக நடத்தப்படுகின்ற இந்த கண்காட்சியில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தக செயல்பாடுகளும் சுமார் 55,000லிருந்து 60,000 வரை விவசாயிகளும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு ஏற்பாடு செய்துள்ள பொறுப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

பசுமையாக்குதல், வேளாண்மை வளர்ச்சி, விவசாய மானியங்கள் பெறுதல், கடன்கள் பெறுதல், அத்துடன் குறைந்த வட்டியில் எளிமையான முறையில் எவ்வாறு கடன் வசதிகள் பெறுவது என்பன போன்ற விவரங்களை தர கல்லூரி மற்றும் வங்கிகளைச் சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். விவசாய உபகரணங்களுக்கான மானியங்களை பெறுவது பற்றியும் சில நிறுவனங்கள் தெரிவிக்கவுள்ளனர். அரசுத்துறை சார்ந்த கோயம்புத்தூரை மையமாக கொண்ட விதைச்சான்றிதழ் அலுவலகத்திலிருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்க உரைகள் அளிக்க உள்ளார்கள்.

மேலும், சில நிறுவனங்கள், வீட்டுத் தோட்டங்களை, மொட்டை மாடிகளில் அமைப்பது, காய்கறிகளை உற்பத்தி செய்தல், உரமிடுதல், உபகரணங்கள் பயன்படுத்துதல் என்பது பற்றி விவசாயிகளுக்கும் நகரவாழ் மக்களுக்கும் விளக்கிக்கூறுவார்கள்.

உழைக்க தயாராகயிருக்கும் தென்தமிழக விவசாயிகள் தொய்வு அடைந்து நீரின்மை, நம்பிக்கையின்மை முதலியவற்றால் மாற்றுத் தொழில் தேடிச்செல்லக் கூடாது, விவசாயம் மேலும் தழைத்தோங்க வேண்டும் போன்ற உயரிய சேவை நோக்கங்களோடு இந்த கண்காட்சியை நடத்த இதன் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மனோஜ் குமார் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். 2007-ம் ஆண்டு முதல் இவர்களின் பெருமுயற்சியால் பல விவசாய கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. “இதர இந்திய மாநிலங்களில் விவசாயம் செழித்தோங்க அரசும் பலதரப்பட்ட மக்களும் பல வகையிலும் ஒத்துழைப்பு தந்து உதவுகின்றார்கள். பல நேரங்களில் இதனை கண்கூடாக கண்ட எங்களுக்கும் விவசாயிகளுக்கு பிரத்யேகமாகவும் பிரயோஜனமாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த விவசாய கண் காட்சியாகும்” என்கின்றார்கள். இந்த கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் ஒவ்வொரு நாளும் காலை 10.00 முதல் மாலை 7.30 வரை நடைபெறுகின்றது.

இதுபோன்ற பயனுள்ள கண்காட்சிக்கு நம் குழந்தைகளையும் அழைத்துச்சென்று, விவசாய உபகரணங்கள் பற்றி தெரிவித்து விவசாயத்தின் அருமையையும் விவசாயிகளின் பெருமைகளையும் உணரச்செய்தால் மட்டுமே நம் தலைமுறையினர் நாம் உண்ணும் உணவின் மகத்துவத்தை அறிந்து இனிவரும் காலங்களில் விவசாயம் மேலும் செழித்தோங்க வழிவகை செய்வர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9360293601

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top